Published : 25 Jan 2024 10:03 AM
Last Updated : 25 Jan 2024 10:03 AM

நகராட்சி பெண் ஆணையருடன் வாக்குவாதம்: அதிமுக எம்.எல்.ஏ உட்பட 28 பேர் மீது வழக்கு

மேட்டுப்பாளையம்: நகராட்சி பெண் ஆணையருடன் வாக்குவாதம் செய்த அதிமுக எம்.எல்.ஏ உட்பட 28 பேர் மீது போலீஸார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.

மேட்டுப் பாளையம் தொகுதி அதிமுக எம்.எல்.ஏ ஏ.கே.செல்வராஜ் நேற்று முன்தினம் மேட்டுப் பாளையம் நகர்மன்ற அலுவலகத்தில் ஆணையர் அமுதாவை சந்தித்தார். அப்போது, “வார்டு வளர்ச்சித் திட்டப் பணிகளுக்காக, சட்டப்பேரவை உறுப்பினர் நிதியை ஒதுக்க, திட்ட மதிப்பீடு விவரம் கேட்டு 3 மாதங்களுக்கு முன்னர் கடிதம் அளித்திருந்தேன். அந்த விவரம் தர ஏன் தாமதப்படுத்துகிறீர்கள்’’ என ஆணையரிடம் அவர் கேட்டுள்ளார்.

ஆணையர் அமுதா அளித்த பதிலில் திருப்தி இல்லாததால் அதிமுகவினர் அடுத்தடுத்து கேள்விகளை எழுப்பினர். மேலும், கடிதத்தை திருப்பித் தருமாறு ஆணையரிடம் எம்.எல்.ஏ தரப்பினர் கேட்டுள்ளனர். ஆனால், அந்த கடிதம் காணாமல் போனது தெரியவந்தது. இதனால் கோபமடைந்த எம்.எல்.ஏ ஏ.கே.செல்வராஜ் ஆணையரை கண்டித்தார்.

தகவல் அறிந்து நகர்மன்ற தலைவரான மெஹரிபா பர்வீன், துணைத் தலைவர் அருள் வடிவு மற்றும் திமுகவினர் அங்கு வந்தனர். இரு தரப்பினரிடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் அங்கு கூச்சல், குழப்பம் ஏற்பட்டது. இதற்கிடையே, நகராட்சி ஆணையர் அமுதா அறையை விட்டு கண் கலங்கியபடி வெளியேறினார். சட்டம் ஒழுங்கு பாதிக்கும் சூழல் ஏற்பட்டதைத் தொடர்ந்து அங்கு போலீஸார் குவிக்கப்பட்டனர். மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் பாடி, இருதரப்பினரையும் தொடர்பு கொண்டு பேசினார். எம்.எல்.ஏ வைத்த கோரிக்கைகள் தொடர்பாக விரைவில் தீர்வு காணப்படும் என ஆட்சியர் உறுதியளித்தார்.

இதையடுத்து அதிமுகவினர் அங்கிருந்து வெளியேறினர். இவ்விவகாரம் குறித்து நகராட்சி ஆணையர் தரப்பில் மேட்டுப் பாளையம் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. அதன் பேரில், மரியாதைக் குறைவாக பேசுதல், அரசு ஊழியரை பணி செய்ய விடாமல் தடுத்தல், அரசு அலுவலகத்தில் சட்ட விரோதமாக கூடுதல் உள்ளிட்ட 4 பிரிவுகளின் கீழ் ஏ.கே.செல்வ ராஜ் எம்.எல்.ஏ மற்றும் நகர்மன்ற அதிமுக உறுப்பினர்கள், நிர்வாகிகள் என மொத்தம் 28 பேர் மீது போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x