Published : 24 Jan 2024 05:49 PM
Last Updated : 24 Jan 2024 05:49 PM
சென்னை: “கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் 144 பார்க்கிங் பே-தான் இருப்பதாக கூறுகின்றனர். 1,000 ஆம்னி பேருந்துகளை இந்த 144 நிறுத்தத்தில் எப்படி நிறுத்துவோம்? நாங்கள் இதைத்தான் சிஎம்டிஏ நிர்வாகத்திடம் கடந்த 3 மாதங்களாக நேரடியாகவும், ஊடகங்கள் வாயிலாகவும் கேட்டுக் கொண்டேயிருக்கிறோம். கிளாம்பாக்கத்தில் பேருந்துகளை நிறுத்துவதற்கான வசதிகள் எங்கே இருக்கிறது?” என்று ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் அன்பழகன் கூறியுள்ளார். இந்த விவகாரத்தில் ஆம்னி பஸ் உரிமையாளர்களுக்கும், தமிழக அரசுக்கும் இடையே மோதல் வலுத்துள்ளது.
சென்னையில் ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் அன்பழகன் புதன்கிழமை செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியது: "ஆம்னி பேருந்துகளைப் பொறுத்தவரை, பயணச்சீட்டு முன்பதிவு என்பது 30 நாட்கள் தொடங்கி 90 நாட்கள் வரை செய்யப்பட்டுள்ளது. இந்தச் சூழலில், திடீரென்று ஜனவரி 22-ம் தேதி போக்குவரத்து துறை ஆணையரிடமிருந்து ஒரு சுற்றறிக்கை வந்தது. அதில், இன்று முதல் (ஜன.24), ஆம்னி பேருந்துகளை சென்னை நகரத்துக்குள் இருந்து இயக்கக் கூடாது என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
ஆம்னி பேருந்துகளில், 90 நாட்களுக்கு முன்பாக அட்வான்ஸ்ட் புக்கிங் நடைபெறும்போது இரண்டு நாட்களில் இடத்தை காலி செய்ய வேண்டும் என்று கூறுவது சாத்தியமற்ற விசயம். மேலும், தைப்பூசம் மற்றும் குடியரசு தினவிழாவையொட்டி தொடர் 4 நாட்கள் விடுமுறையை முன்னிட்டு கிட்டத்தட்ட 60 ஆயிரம் பயணிகள் இன்று டிக்கெட் முன்பதிவு செய்துள்ளனர்.
1500 பேருந்துகளில் 60 ஆயிரம் பேருந்துகளில் சென்னை நகரத்துக்குள் இருந்து தென் தமிழகத்துக்குச் செல்வதற்காக முன்பதிவு செய்துள்ளனர். ஆனால், இப்போது அரசு திடீரென அறிவிப்பை வெளியிட்டு, பேருந்துகளை இங்கிருந்து உடனடியாக மாற்ற வேண்டும் என்று கூறுகின்றனர். ஆனால், அவ்வாறு மாற்றுவதற்கான வாய்ப்புகள் என்று எதுவுமே இல்லை. சாதாரண நாட்களில் 850 பேருந்துகளையும், வார இறுதி நாட்களில் 1,250 பேருந்துகளும், விழா காலங்களில் 1,600 பேருந்துகள் வரை இயக்கி வருகிறோம்.
கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் 144 பார்க்கிங் பே (Parking Bay)-தான் இருப்பதாக கூறுகின்றனர். ஆயிரம் ஆம்னி பேருந்துகளை இந்த 144 நிறுத்தத்தில் எப்படி நிறுத்துவோம்? நாங்கள் இதைத்தான் சிஎம்டிஏ நிர்வாகத்திடம், கடந்த 3 மாதங்களாக நேரடியாகவும், ஊடகங்கள் வாயிலாகவும் கேட்டுக் கொண்டேயிருக்கிறோம். கிளாம்பாக்கத்தில் பேருந்துகளை நிறுத்துவதற்கான வசதிகள் எங்கே இருக்கிறது என்று தொடர்ந்து கேட்டுக் கொண்டேயிருக்கிறோம்.
எங்களது பேருந்துகளை நிறுத்துவதற்கான வசதிகள் எங்கே இருக்கிறது? கோயம்பேட்டிலிருந்து எங்களை காலி செய்யுமாறு கூறினால், பேருந்துகளை நாங்கள் எங்கே நிறுத்துவோம். அதை க்கேட்டால், எந்த அதிகாரிகளும் சிஎம்டிஏ சார்பாக எங்களைத் தொடர்பு கொள்ளவே இல்லை. எங்களிடம் வந்து இதுதொடர்பாக யாரும் பேசவே இல்லை. ஊடகங்களில்தான் செய்தி வருகிறது.
இங்கிருந்து காலி செய்வது தொடர்பாக எங்களுக்கோ, சங்கத்தினருக்கோ ஒரு சுற்றறிக்கையும் வரவில்லை. நேற்று இரவு 9 மணிக்கு பேருந்து நிலையத்துக்குள் வந்து வரும் 30-ம் தேதிக்குள் கடைகளை காலி செய்ய வேண்டும் என்று நோட்டீஸ் கொடுக்கின்றனர். 4 நாட்களில் காலி செய்ய முடிந்த காரியமா இது? அரசு ஏன் கடந்த இரண்டு நாட்களில் தீவிர நடவடிக்கை எடுக்கிறார்கள் என்பது கேள்விக்குறியாக உள்ளது.
இந்தச் சூழலில் 60,000 பயணிகள் இன்று டிக்கெட் முன்பதிவு செய்துள்ளனர். தொடர் விடுமுறையை முன்னிட்டு 2 லட்சம் பயணிகள் முன்பதிவு செய்துள்ளனர். எனவே, இதனால், பாதிக்கப்படப்போவது பயணிகள்தான். எனவே, பயணிகள் நலன் கருதி தமிழக முதல்வர் தலையிட்டு, இந்தப் பேச்சுவார்த்தை குறித்து எங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி பயணிகள் பாதிக்காத வண்ணம் நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று அவர் கூறினார்.
அரசு சொல்வது என்ன? - முன்னதாக, ‘இன்று (ஜன.24) முதல் ஆம்னி பேருந்துகள் கோயம்பேட்டில் இருந்து இயக்குவதற்கு முழுமையாக தடை செய்யப்படும். ஆம்னி பேருந்துகள் முழுமையாக கிளாம்பாக்கத்தில் கட்டப்பட்டிருக்கின்ற கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையத்தில் இருந்துதான் இயக்கப்படும்’ என்று அமைச்சர் சேகர்பாபு உறுதிபட கூறினார்.
இது குறித்து அவர் கூறியது: “செங்கல்பட்டு மாவட்டம், கிளாம்பாக்கத்தில் ரூ.393.74 கோடி மதிப்பீட்டில் 88.52 ஏக்கர் பரப்பளவில் சென்னைப் பெருநகர் வளர்ச்சி குழுமத்தின் சார்பில் கட்டப்பட்டுள்ள இந்தியாவின் மிகப்பெரிய பேருந்து நிலையங்களுள் ஒன்றான "கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையத்தை" தமிழக முதல்வர் 30.12.2023 அன்று திறந்து வைத்து மக்கள் பயன்பாட்டுக்கு அர்ப்பணித்தார்.
“கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையம்” மிகச் சிறப்பாக செயல்பட்டுக் கொண்டிருக்கின்றது. தினம்தோறும் 5,000-க்கும் மேற்பட்ட பயணிகள் தற்போது பயன்படுத்திக் கொண்டிருக்கின்றார்கள். இப்பேருந்து முனையத்தை முழுமையாக மக்கள் மகிழ்ச்சியோடு பயன்படுத்துகின்ற அளவுக்கு தேவையான அனைத்து வசதிகளும் செய்யப்பட்டு வருகிறது.
ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் ஏற்றார் போல் அரசு செயல்பட முடியாது. மக்களுடைய தேவைகளுக்கும், மக்களுடைய விருப்பத்துக்கும் தான் அரசு செயல்பட முடியும். ஏற்கெனவே ஆம்னி பேருந்து உரிமையாளர்களோடு பேருந்து முனையம் திறக்கப்படுவதற்கு முன்பாகவே, போக்குவரத்து துறை செயலாளர், எங்கள் துறையினுடைய வீட்டு வசதித் துறை செயலாளர், உறுப்பினர் செயலர், போன்றோர்களோடு கலந்தாலோசித்து ஆம்னி பேருந்து உரிமையாளர்களோடு கூட்டத்தை நடத்தி இருக்கிறோம்.
அந்தக் கூட்டத்திலேயே கடந்த மாதம் 30-ந் தேதி ஆம்னி பேருந்து திறக்கப்பட்டவுடன் படிப்படியாக ஆம்னி பேருந்துகளை இயக்குவோம் என்று அறிவித்திருந்தார்கள். மீண்டும் அவர்கள் கால அவகாசம் கேட்டதற்கிணங்க ஜனவரி மாதம் 24-ம் தேதி முதல் நாங்கள் அங்கே ஆம்னி பேருந்துகளை இயக்குவோம் என்று கூறியிருந்தார்கள். இப்பொழுது திடீரென்று அவர்களே ஒத்துக் கொண்டதற்கு மாறாக இப்பொழுது நாங்கள் இயக்ககுவதற்கு தயாராக இல்லை என்கிறார்கள்.
அரசு அவர்களுடைய விருப்பம் போல் செயல்பட முடியாது, மக்களுடைய விருப்பத்துக்கு ஏற்றார்போல் தான் அரசு செயல்படும். ஆகவே (ஜன.24) இன்றிலிருந்து ஆம்னி பேருந்துகள் கோயம்பேட்டில் இருந்து இயக்குவதற்கு முழுமையாக தடை செய்யப்படும். ஆம்னி பேருந்துகள் முழுமையாக கிளாம்பாக்கத்தில் கட்டப்பட்டிருக்கின்ற கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையத்தில் இருந்துதான் இயக்கப்படும், அதற்கு தேவையான அனைத்து வசதிகளையும், பயணிகளுக்கு தேவையான வசதிகளையும், பேருந்துகளுக்கு தேவையான வசதிகளையும் முழுமையாக சென்னை பெருநகர வளர்ச்சி குழுமமும், போக்குவரத்து துறையும் செய்து கொடுத்து இருக்கின்றோம்.
ஆகவே, ஒத்து கொண்டதைப்போல் ஆம்னி பேருந்துகளை கிளம்பாக்கத்தில் இருந்து இயக்குவதற்கு பேருந்து உரிமையாளர்களும், சங்கங்களும் அரசுக்கு ஒத்துழைப்பு நல்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.நிபந்தனைக்குட்பட்டு சொல்லிய வார்த்தையை காப்பாற்றும் நோக்கோடு ஆம்னி பேருந்து உரிமையாளர்களும், சங்கங்களும் செயல்பட வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். அவர்கள் வைத்த கோரிக்கை அனைத்தையும் நிறைவேற்றி தந்திருக்கிறோம்” என்று அவர் கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT