Published : 24 Jan 2024 03:11 PM
Last Updated : 24 Jan 2024 03:11 PM

சரணடையும் நாளில் திமுக எம்எல்ஏ மகன், மருமகள் ஜாமீன் மனுவை பரிசீலிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு

சென்னை: 18 வயது பணிப்பெண்ணை கொடுமைப்படுத்தியதாக திமுக எம்எல்ஏ கருணாநிதியின் மகன், மருமகளுக்கு எதிரான வன்கொடுமைத் தடைச் சட்ட வழக்கில், சரணடையும் நாளிலேயே அவர்களின் ஜாமீன் மனுவை சட்டத்துக்குட்பட்டு பரிசீலிக்க சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்துக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

செங்கல்பட்டு மாவட்டம் பல்லாவரம் தொகுதி திமுக எம்எல்ஏ கருணாநிதியின் மகன் ஆண்டோ மதிவாணன். இவரது வீட்டில் வேலை செய்து வந்த சிறுமியை துன்புறுத்தியதாக, ஆண்டோ மதிவாணன் மற்றும் அவரது மனைவி மெர்லினா ஆன் ஆகியோர் மீது இந்திய தண்டனைச் சட்டம், வன்கொடுமை தடுப்புச் சட்டப் பிரிவுகளின் கீழ் நீலாங்கரை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கில், தலைமறைவாக உள்ள இருவரையும் பிடிக்க 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில், இருவரது தரப்பிலும் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டன. அந்த மனுவில், சென்னை மாவட்டத்தில் பதிவு செய்யப்படும் வன்கொடுமை தடைச் சட்ட வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றமான சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் சரணடையும் நாளில், தங்களது ஜாமீன் மனுவை பரிசீலிக்க அமர்வு நீதிமன்றத்துக்கு உத்தரவிட வேண்டும் என கோரியிருந்தனர்.

இந்த மனு நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன்பு புதன்கிழமை விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, மனுதாரர்கள் இருவரும் சரணடையும் நாளிலேயே அவர்களது ஜாமீன் மனுவை பரிசீலித்து, இரு தரப்புக்கும் வாய்ப்பளித்து, சட்டத்துக்குட்பட்டு முடிவெடுக்கும்படி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்துக்கு உத்தரவிட்டு, வழக்கை முடித்துவைத்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT

    Loading comments...

 
x