Published : 24 Jan 2024 12:41 PM
Last Updated : 24 Jan 2024 12:41 PM
சென்னை: வரும் மக்களவை தேர்தலில் போட்டியிட இளைஞர்களுக்கு அதிகமாக வாய்ப்பு கொடுங்கள் என்று திமுக பொருளாளர் டி.ஆர்.பாலுவிடம் அமைச்சரும் திமுக இளைஞரணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலின் கோரிக்கை வைத்துள்ளார்.
திமுக பொருளாளரும், மக்களவை உறுப்பினருமான டி.ஆர்.பாலு எழுதிய ’உரிமைக்குரல்’, ‘பாதை மாறாப் பயணம்’ ஆகிய நூல்களின் வெளியீட்டு விழா நேற்று (ஜன.23) சென்னையில் நடைபெற்றது. இதில் முதல்வர் ஸ்டாலின், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இந்த விழாவில் அமைச்சர் உதயநிதி பேசியதாவது: டி.ஆர்.பாலு மாமாவை நான் குழந்தையாக இருக்கும்போதிலிருந்தே எனக்குத் தெரியும். என்னை தூக்கி வளர்த்தவர்களின் அவரும் மிக மிக முக்கியமானவர். முன்னாள் முதல்வர் கருணாநிதியின் அன்புக்குரிய தம்பி. நம் முதலமைச்சரின் உற்ற தோழன். தலைமை சொல்வதை அப்படியே ஏற்று செயல்படக்கூடிய செயல் வீரர்.
சேலம் மாநாட்டுக்கு அனைத்து அணிகளும் அனுப்பி வைத்த மொத்த தொகை ரூ.59 கோடி. ஐடி விங் சார்பாக டி.ஆர்.பி. ராஜா ரூ.25 லட்சம் கொடுத்தார். ஆனால் கட்சியின் பொருளாளர் டி.ஆர்.பாலு கொடுத்ததோ வெறும் ரூ.1 லட்சம். பரவாயில்லை, நிதிதான் கொடுக்கவில்லை, வரும் மக்களவை தேர்தலில் போட்டியிட இளைஞர்களுக்கு அதிகமாக வாய்ப்பு கொடுங்கள் என்று இங்கே கோரிக்கை வைக்கிறேன்” இவ்வாறு உதயநிதி ஸ்டாலின் பேசினார். வரும் தேர்தலில் கூட்டணி கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த டி.ஆர்.பாலு தலைமையில் திமுக குழு அமைத்துள்ளது. இக்குழுவில், முதன்மைச் செயலாளர் கே.என்.நேரு, துணை பொதுச்செயலாளர்கள் ஐ.பெரியசாமி, க.பொன்முடி, ஆ.ராசா, கொள்கை பரப்புச் செயலாளர் திருச்சி சிவா, உயர்நிலை செயல்திட்டக்குழு உறுப்பினர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் ஆகியோர் இக்குழுவில் இடம்பெற்றுள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT