Published : 24 Jan 2024 11:28 AM
Last Updated : 24 Jan 2024 11:28 AM
மதுரை: மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே கீழக்கரையில் 62.78 கோடி செலவில் ஜல்லிக்கட்டு மைதானத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்துவைத்தார். இதனைத் தொடர்ந்து காலை 11.10 மணியளவில் ஜல்லிக்கட்டு போட்டி தொடங்கி நடைபெற்று வருகிறது. முதலில் கோயில் காளைகள் அவிழ்த்துவிடப்பட்டன. பின்னர் ஆன்லைன் டோக்கன் எண் வரிசையின் அடிப்படையில் வாடிவாசலில் காளைகள் அவிழ்த்துவிடப்படுகின்றன. முதல்வர் ஸ்டாலின் சில நிமிடங்கள் போட்டியைக் கண்டு ரசித்துவிட்டு அங்கிருந்து புறப்பட்டுச் சென்றார்.
500 காளைகளும், 200 மாடுபிடி வீரர்களும் களம் காண போட்டி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. போட்டி தொடங்குவதற்கு. முன்பாகவே காளைகளுக்கும், வீரர்களும் மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு ஜல்லிக்கட்டு களத்துக்குள் அனுமதிக்கப்பட்டனர்.
இப்போட்டியில் சிறந்த காளைக்கும், சிறந்த மாடுபிடி வீரருக்கும் தமிழக அரசு சார்பில் தலா 1 மகேந்திரா தார் ஜீப் காரும், 1 லட்சம் ரூபாய் ரொக்கப் பணமும் பரிசாக வழங்கப்படுகிறது. 2வது பரிசு பெறும் காளைக்கும், வீரருக்கும் தலா ஒரு பைக் 50ஆயிரம் ரொக்கப் பணம் பரிசாக வழங்கப்படுகிறது.
மேலும் போட்டியின்போது சிறப்பாக களம்காணும் மாடுபிடிவீரர்களுக்கும், காளையின் உரிமையாளர்களுக்கு தங்கம், வெள்ளி நாணயங்கள் முதல் அண்டா சைக்கிள், பீரோ, பிரிட்ஜ், டிவி, கட்டில், உள்ளிட்ட பல்வேறு பரிசுகளும் வழங்கபடவுள்ளது.
5000 பேர் வரை போட்டியினை பார்வையிட ஏற்பாடுகள் உள்ள நிலையில். அதிகளவில் பார்வையாளர்கள் வருகை தரும்போது சுழற்சி முறையில் போட்டியை பார்ப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. பார்வையாளர்களுக்குத் தேவையான குடிநீர், கழிப்பிட வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் உள்ளன. காளைகளுக்கு தீவனங்களும், ஆங்காங்கே தண்ணீர் தொட்டிகளும் வைக்கப்பட்டுள்ளன.
கீழக்கரை ஜல்லிக்கட்டு போட்டியை பார்வையிட நடிகர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் வருகை தருவார்கள் என்பதால் பாதுகாப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. மதுரை சரக டிஐஜி ரம்யா பாரதி தலைமையில், மதுரை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் டோங்ரே பிரவீன்உமேஷ் உட்பட 2200 காவல்துறையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Be the first person to comment