Published : 24 Jan 2024 04:59 AM
Last Updated : 24 Jan 2024 04:59 AM
சென்னை: நாடாளுமன்றத்தில் அனைத்து நிகழ்வுகளும் நேரலையில் ஒளிபரப்பு செய்யப்படும்போது, தமிழக சட்டப்பேரவை நிகழ்வுகளை முழுமையாக நேரலையில் ஒளிபரப்பு செய்வதில் என்ன சிக்கல் உள்ளது? என தமிழக அரசுக்கு கேள்வி எழுப்பியுள்ள சென்னை உயர் நீதிமன்றம், இதுதொடர்பாக விளக்கமளிக்க உத்தரவிட்டுள்ளது.
தமிழக சட்டப்பேரவை நிகழ்வுகளை முழுமையாக நேரடி ஒளிபரப்பு செய்யக் கோரி மறைந்த தேமுதிக தலைவர் விஜயகாந்த், லோக் சத்தா கட்சியின் தமிழக தலைவர் ஜெகதீஸ்வரன் ஆகியோர்ஏற்கெனவே உயர் நீதிமன்றத்தில் தனித்தனியாக வழக்கு தொடர்ந்திருந்தனர். இந்த வழக்கில் அதிமுகமுன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணியும் தன்னை இடையீட்டு மனுதாரராக இணைத்துக் கொண்டார்.
இந்த வழக்குகள் தலைமை நீதிபதி எஸ்.வி.கங்காபுர்வாலா மற்றும் நீதிபதி டி.பரத சக்ரவர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வில் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.
அப்போது விஜயகாந்த் தரப்பில்ஆஜரான வழக்கறிஞர் வி.டி.பாலாஜி, விஜயகாந்த் மரணமடைந்து விட்டதால் அவரது சட்டப்பூர்வ பிரதிநிதி மூலமாக இந்த வழக்கை தொடர்ந்து நடத்த இருப்பதாகத் தெரிவித்தார்.
அரசு தலைமை வழக்கறிஞரான பி.எஸ்.ராமன், ‘‘தற்போதும் தமிழக சட்டப்பேரவையில் கேள்வி நேரம், கவன ஈர்ப்பு தீர்மானங்கள் மீதான விவாதங்கள், ஆளுநர் உரை, பட்ஜெட் உரைகள், அமைச்சர்களின் பதில் உரைகள் நேரலையில் ஒளிபரப்பு செய்யப்பட்டு வருகின்றன. சில சமயங்களில் பேரவையில்உறுப்பினர்களின் பேச்சுகள் அவைக்குறிப்பில் இருந்து நீக்கப்படும்போது, அவற்றையும் சேர்த்து நேரலை செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்படும் என்பதால் பேரவை நடவடிக்கைகளை முழுமையாக நேரலையில் ஒளிபரப்பு செய்ய இயலாது.
அதிமுக எதிர்ப்பு: கடந்த 10 ஆண்டுகளாக அதிமுகஆட்சியில் இருந்தபோது பேரவையின் அனைத்து நிகழ்வுகளையும் நேரலையில் ஒளிபரப்பு செய்வது என்பது இயலாத காரியம் என தெரிவித்த மனுதாரர்களில் ஒருவரான முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, தற்போது ஆட்சிமாற்றத்துக்குப் பிறகு நேரலையில் ஒளிபரப்பு செய்ய வேண்டும் எனகோருகிறார்’’ என குற்றம்சாட்டினார்.
அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், ‘‘நாடாளுமன்றத்தில் அனைத்து நிகழ்வுகளும் நேரலையில் ஒளிபரப்பு செய்யப்படும்போது தமிழக சட்டப்பேரவை நிகழ்வுகளை முழுமையாக நேரலையில் ஒளிபரப்பு செய்வதில் என்ன சிக்கல் உள்ளது?’’ என அரசு தரப்புக்கு கேள்வி எழுப்பினர்.
பின்னர் இதுதொடர்பாக தமிழக அரசு தரப்பில் விளக்கமளி்க்க உத்தரவிட்டு விசாரணையை மார்ச் 11-ம் தேதிக்கு தள்ளி வைத்துள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT