Published : 24 Jan 2024 05:09 AM
Last Updated : 24 Jan 2024 05:09 AM

சென்னை கிளாம்பாக்கத்தில் இருந்தே ஆம்னி பேருந்துகள் இயக்கப்படும் - அமைச்சர் சிவசங்கர் திட்டவட்டம்

சென்னை: ஆம்னி பேருந்துகள் இன்று முதல் சென்னை கிளாம்பாக்கத்தில் இருந்தே இயக்கப்படும் என அமைச்சர் சிவசங்கர் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

சென்னை கிளாம்பாக்கத்தில் அமைக்கப்பட்டுள்ள புதிய பேருந்து முனையத்தை முதல்வர் ஸ்டாலின் கடந்த 30-ம் தேதி திறந்து வைத்தார்.

ஜன.24-ம் தேதி முதல் ஆம்னி பேருந்துகளையும் கிளாம்பாக்கத்தில் இருந்தே இயக்க வேண்டும் என்றுஉரிமையாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது. ஆனால், பேருந்துகளை நிறுத்துவதற்கும், பராமரிப்பதற்கும் போதிய இடவசதி, பயணிகள் எளிதில் கிளாம்பாக்கத்தை அடையும் வகையில் போக்குவரத்து வசதி போன்றவற்றை செய்து தரும் வரை கோயம்பேட்டில் இருந்தே ஆம்னி பேருந்துகள் இயக்கப்படும் என கடந்த 21-ம் தேதி உரிமையாளர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில், சென்னையில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர், ‘‘கிளாம்பாக்கத்தில் ஆம்னி பேருந்துகள் நிறுத்துவதற்கான கட்டுமான பணிகள் பெரும்பாலும் முடிவடைந்துள்ளன. அவர்களுக்கு வேண்டிய வசதிகளை செய்து தர சிஎம்டிஏ ஒப்புதல் அளித்துள்ளது. தவிர, விரைவு பேருந்துகளை கிளாம்பாக்கத்தில் இருந்து இயக்கும்போது, ஆம்னி பேருந்துகளை கோயம்பேட்டில் இருந்து இயக்குவது சரியாக இருக்காது. எனவே, 24-ம் தேதி (இன்று) முதல் கிளாம்பாக்கத்தில் இருந்தே ஆம்னி பேருந்துகள் இயக்கப்பட வேண்டும்’’ என்றார்.

பின்னர், தென் மாவட்டங்களுக்கு செல்லும் போக்குவரத்து கழக பேருந்துகள், ஆம்னி பேருந்துகள் ஆகியவற்றை கிளாம்பாக்கத்தில் இருந்து முழுமையாக இயக்குவது குறித்து துறை சார்ந்த அலுவலர்களுடன் சிஎம்டிஏ கூட்ட அரங்கில் அமைச்சர் ஆலோசனை நடத்தினார். அப்போது, "சென்னை, கோயம்பேடு மற்றும் பிற முக்கிய இடங்களில் இருந்து பயணிகளை ஆம்னி பேருந்துகள் ஏற்றிச் செல்வதை தடுக்க போலீஸார் தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என அறிவுறுத்தினார்.

இதற்கிடையே, நீதிமன்ற உத்தரவுகளை மீறுவதாக அரசுத் துறை செயலர்களுக்கு ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் நோட்டீஸ் அனுப்பியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x