Published : 24 Jan 2024 07:16 AM
Last Updated : 24 Jan 2024 07:16 AM
சென்னை: மக்கள் நீதி மய்யம் கட்சியின் 2 நிபந்தனைகளை ஏற்போரோடு மட்டுமே கூட்டணி அமைப்பது என கட்சியின் செயற்குழு கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.
சென்னை, ஆழ்வார்பேட்டையில் உள்ள மநீம தலைமையகத்தில் புதுச்சேரி மாநிலச் செயற்குழு கூட்டம் நேற்று முன்தினம் நடைபெற்றது. இதைத்தொடர்ந்து தமிழக நிர்வாகக் குழு மற்றும் செயற்குழு கூட்டம் நேற்று நடைபெற்றது.
கட்சித் தலைவர் கமல்ஹாசன் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில், பொதுச்செயலாளர் ஆ.அருணாச்சலம், துணைத் தலைவர்கள் ஏ.ஜி.மவுரியா, தங்கவேலு, மாநிலச் செயலாளர்கள் சிவ இளங்கோ, செந்தில் ஆறுமுகம், மயில்சாமி, பதி, சினேகன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
இதில் கமல்ஹாசன் பேசியது: தொகுதிதோறும் மாவட்டம் என்ற வகையில் கட்சி அமைப்புரீதியாக பிரிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் அனைத்து மாவட்டங்களிலும் கட்சி அலுவலகங்கள் அமைக்கப்பட வேண்டும். பூத் கமிட்டி பணிகளை விரைவுபடுத்த வேண்டும். கமிட்டியில் குறைந்தபட்சம் 20 பேர் இருக்க வேண்டும். கூட்டணி அமைவது ஒருபுறம் இருந்தாலும் 40 தொகுதிகளிலும் தனித்து நிற்க வேண்டிய அவசியம் எழுந்தால் அதற்கும் தயாராக இருக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.
இக்கூட்டத்தில், மக்கள் நீதி மய்யத்தின் 7-ம் ஆண்டு தொடக்க விழாவை பிரம்மாண்டமாக நடத்துவது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
பின்னர் செய்தியாளர்களிடம் மநீம பொதுச்செயலாளர் ஆ.அருணாச்சலம், துணைத் தலைவர் ஏ.ஜி.மவுரியா ஆகியோர் கூறும்போது, “மநீம தலைவரோடு கலந்தாலோசித்தபோது, கட்சியின் 2 நிபந்தனைகளை ஏற்றுக் கொள்வோருடன் மட்டுமே கூட்டணி அமைப்பது என முடிவு செய்யப்பட்டுள்ளது. அதன்படி, தமிழக வளர்ச்சி மற்றும் தமிழக மக்கள் நலனில் எந்த சமரசமும் அனுமதிக்கப்படாது. தலைவரின் கொள்கைகளோடும் சிந்தனைகளோடும் ஒத்துப்போகிறவர்களுடனே கூட்டணி அமைக்கப்படும். நிபந்தனைகளுக்கு செயல்வடிவம் கொடுக்க குழு அமைக்கப்படும். நிபந்தனைகளுக்கு ஒத்துவரவிட்டால் 40 தொகுதிகளிலும் தனித்து போட்டியிடுவோம்” என்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT