Published : 24 Jan 2024 07:42 AM
Last Updated : 24 Jan 2024 07:42 AM
திருச்சி: ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் இருந்து அளிக்கப்பட்ட வஸ்திரங்கள், அயோத்தியில் பால ராமர் சிலையின் பீடத்தில் வைத்து நேற்று முன்தினம் பூஜிக்கப்பட்டன. இதைப் பார்த்த ரங்கநாதர் பக்தர்கள் பரவசம் அடைந்தனர்.
அயோத்தியில் பால ராமர் சிலை பிரதிஷ்டை விழா நேற்று முன்தினம் நடைபெற்றது. இதற்கென பிரதமர் மோடி 11 நாட்கள் விரதம் மேற்கொண்டு, நாட்டில் உள்ள ராமர் தொடர்புடைய கோயில்கள் மற்றும் தலங்களுக்குச் சென்று தரிசனம் செய்தார்.
இதன் ஒரு பகுதியாக ராமரின் குலதெய்வமாக கருதப்படும் ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலுக்கு கடந்த 20-ம் தேதி பிரதமர் நரேந்திர மோடி வருகை தந்து, பெருமாள், தாயார் உள்ளிட்ட சந்நிதிகளில் வழிபட்டுச் சென்றார்.
அப்போது, ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயில் சார்பில் ரங்கநாதருக்கு சாற்றப்பட்ட பட்டு வேட்டி, தாயார் ரங்கநாச்சியாருக்கு சாற்றப்பட்ட திருப்பாவாடை, திருமஞ்சனகைலி உள்ளிட்ட வஸ்திர பகுமானங்களை ராமர், சீதை, அனுமன் ஆகியோருக்காக கோயில் பட்டர்கள் தீபு பட்டர், கோவிந்தன், ரங்கராஜன் ஆகியோர் பிரதமர் மோடியிடம் வழங்கினர். இதை பிரதமரும் மகிழ்வுடன் பெற்றுச் சென்றார்.
இந்நிலையில், அயோத்தியில் நேற்று முன்தினம் பால ராமர் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டபோது, ராமர் சிலையின் பீடத்தில் ஸ்ரீரங்கம் கோயிலிலிருந்து பெற்றுச் சென்றபட்டு வஸ்திரங்கள் வைக்கப்பட்டிருந்தன. இதுதொடர்பான புகைப்படங்கள் மற்றும் வீடியோ வைரலாகப் பரவியது. இதைப்பார்த்த ரங்கநாதர் பக்தர்கள் பரவசம் அடைந்தனர்.
இதுகுறித்து, பிரதமரிடம் பட்டுவஸ்திரங்களை வழங்கிய தீபு பட்டர் ‘இந்து தமிழ் திசை’ செய்தியாளரிடம் கூறும்போது, ‘‘அயோத்தியில் பால ராமர் சிலை பிரதிஷ்டையின்போது, ஸ்ரீரங்கத்திலிருந்து கொடுத்து அனுப்பப்பட்ட வஸ்திரம், ராமர் சிலையின் பீடத்தில் வைக்கப்பட்டு இருந்ததைப் பார்த்தோம். நாங்கள் அனுப்பிய வஸ்திரம், ராமரை சென்று சேர்ந்தது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது’’ என்றார்.
ரங்கநாதரின் பக்தரான கேபிஎஸ் என்.பத்ரி நாராயணன் கூறும்போது, ‘‘ஸ்ரீரங்கம் கோயில்சார்பில் அளிக்கப்பட்ட வஸ்திரங்களை அலட்சியம் செய்துவிடாமல், அதை மிகுந்த பக்தி சிரத்தையுடன் கொண்டு சென்று ராமரிடம் பிரதமர் மோடி சேர்த்துள்ளார். இது பெருமாளின் பக்தர்களுக்கு கிடைத்த பெரும்பேறு. இதேபோல, ஆண்டுதோறும் ராமர் கோயில் பிரதிஷ்டை நாளன்று வஸ்திரங்கள் அனுப்பப்பட வேண்டும்’’ என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT