Published : 23 Jan 2024 08:01 PM
Last Updated : 23 Jan 2024 08:01 PM

“கட்டி முடிக்கப்படாத கோயிலை அவசரமாக திறந்தது பாஜகவின் தேர்தல் தந்திரம்” - முதல்வர் ஸ்டாலின் விமர்சனம்

சென்னை: “தேர்தலைச் சந்திக்க இருக்கும் பாஜகவுக்கு மக்களிடம் சொல்வதற்குச் சாதனை என்று எதுவும் இல்லை. அதனால்தான் முழுவதுமாக கட்டி முடிக்கப்படாத கோயிலை, அவசர அவரசமாகத் திறந்து, எதையோ சாதித்துவிட்டதாகக் காட்ட நினைக்கிறார்கள். இதுமாதிரியான திசை திருப்பும் தந்திரங்களுக்கு மக்கள் சரியான பாடம் கொடுப்பார்கள்” என முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசினார். அயோத்தி ராமர் கோயில் திறப்பு விழாவை குறிப்பிடாமல் இந்தக் கருத்தை முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

சென்னை அண்ணா அறிவாலயத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற திமுக நாடாளுமன்ற உறுப்பினர் டி.ஆர்.பாலுவின் நூல் வெளியீட்டு விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டார். இந்நிகழ்வில் அவர் ஆற்றிய உரை: “என்னுடைய சகோதரர் டி.ஆர்.பாலு எழுதியுள்ள ‘பாதை மாறாப் பயணம்’ புத்தகத்தின் மூன்றாவது பாகத்தை வெளியிடுகிறேன். பாலுவைப் பற்றி ஒரு வார்த்தையில் சொல்ல வேண்டும் என்றால் சின்சியாரிட்டி. ஏதாவது சொன்னோம் என்றால், அதை முடித்துவிட்டுத்தான் அடுத்த ஃபோனே செய்வார்” என்றார்.

டி.ஆர்.பாலுவின் சாதனைகளைப் பட்டியலிட்ட பின் தொடர்ந்து பேசிய அவர், “பாஜகவை வீழ்த்தப் போகும் இந்தியா கூட்டணியின் உருவாக்கத்தில் பாலுவுக்கு மிக முக்கியப் பங்கு இருக்கிறது. இந்தியாவின் எதிர்காலத்தை மனதில் வைத்து, எல்லோரும் கடமையாற்ற வேண்டும். ஏன் என்றால், நடைபெற இருக்கும் நாடாளுமன்றத் தேர்தல் என்பது, யார் ஆட்சியில் அமரக் கூடாது என்பதற்காக நடைபெறும் தேர்தல்.

கடந்த பத்தாண்டுகாலமாக, மக்களுக்குக் கொடுத்த எந்த வாக்குறுதியையும் நிறைவேற்றாமல், தமிழகத்துக்கும், தமிழக மக்களுக்கும் எதையும் செய்யாமல், பேரிடர் பாதிப்புக்குக் கூட நிதி ஒதுக்காமல் இறுதிக் காலத்தில் ஒரு கோயிலைக் காட்டி, மக்களைத் திசை திருப்பப் பார்க்கிறது பாஜக தலைமை.

தேர்தலைச் சந்திக்க இருக்கும் பாஜகவுக்கு மக்களிடம் சொல்வதற்குச் சாதனை என்று எதுவும் இல்லை. அதனால்தான் முழுவதுமாக கட்டி முடிக்கப்படாத கோயிலை, அவசர அவரசமாகத் திறந்து, எதையோ சாதித்துவிட்டதாகக் காட்ட நினைக்கிறார்கள். இதுமாதிரியான திசை திருப்பும் தந்திரங்களுக்கு மக்கள் சரியான பாடம் கொடுப்பார்கள். இது உறுதி.

எல்லா வகையிலும் மக்களை நசுக்கிய ஆட்சி, பா.ஜ.க. ஆட்சி. அந்தக் கோபம் மக்கள் மனதில் இருக்கிறது. தமிழ்நாட்டில் நாம் வலுவான கூட்டணியை அமைத்திருப்பது போன்று, இந்தியா முழுமைக்கும் வலுவான கூட்டணியை உறுதி செய்தாக வேண்டும்.

இந்தியா கூட்டணிக் கட்சிகள், தங்களுக்குள் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தையை அந்தந்த மாநிலங்களில் நடத்தி வருவதாக செய்திகள் வருகிறது. விரைவில் எல்லாம் நல்லபடியாக முடிந்து நாட்டு மக்களைக் காப்பாற்ற, தமிழ்நாட்டின் முன்னேற்றத்திற்கு உதவும் ஒரு மத்திய அரசை உருவாக்க நாமெல்லாம் தேர்தல் களத்தில் நுழைகிறோம். அதற்கும், டி.ஆர்.பாலு தயாராக வேண்டும் என்று இந்த நேரத்தில் கேட்டுக் கொள்கிறேன்.

இந்தப் பணிகளை எல்லாம் வெற்றிகரமாக முடித்த பிறகு, இந்த பாதை மாறாப் பயணத்தின் அடுத்தடுத்த பாகங்களை எழுதுவதற்கான வேலைகள் நம்முடைய டி.ஆர்.பாலுவுக்கு காத்திருக்கிறது. தமிழ்நாட்டு முன்னேற்றத்தின் வரலாற்றைச் சொல்ல, திராவிட முன்னேற்றக் கழக வரலாற்றை, கருணாநிதி வரலாற்றை, இந்த திமுக அரசின் வரலாற்றைத் தொடர்ந்து திமுகவினர் எழுதிக் கொண்டே இருக்க வேண்டும் என்ற வேண்டுகோளை விடுத்து விடைபெறுகிறேன்” என்றார்.

முன்னதாக, இந்நிகழ்வில் ஏஐ தொழில்நுட்பம் மூலம் முன்னாள் முதல்வர் கருணாநிதி, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினின் சாதனைகளை பட்டியலிட்டு வாழ்த்தும் வீடியோ ஒளிபரப்பப்பட்டது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x