Published : 23 Jan 2024 05:29 PM
Last Updated : 23 Jan 2024 05:29 PM
புதுச்சேரி: புதுச்சேரிக்கு பிரதமர், மத்திய அமைச்சர்கள் தொடர்ந்து வருகை தந்தும் சல்லிக் காசு கூட கிடைக்கவில்லை என்று இன்று நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தின்போது திமுக கடுமையாக விமர்சித்துள்ளது.
மத்திய அரசின் முடங்கிப்போன திட்டங்களை தொடர்ந்து செய்து வருவதாக சங்கல்ப யாத்ரா பயணம் மூலம் அரசு அதிகாரிகளைக் கொண்டு பொய் மூட்டைகளை கட்டவிழ்த்துவிட்டு மக்களிடத்தில் நாடாளுமன்ற தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கி உள்ளதாக மத்திய பாஜக அரசை கண்டித்தும், அரசு அதிகாரிகளை இப்பணிக்கு அனுமதித்ததாக மாவட்ட ஆட்சியரைக் கண்டித்தும் புதுச்சேரி மாநில திமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் இன்று நடைபெற்றது.
மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு புதுச்சேரி மாநில திமுக அமைப்பாளரும், எதிர்கட்சித் தலைவருமான சிவா தலைமை தாங்கினார். எம்எல்ஏக்கள் அனிபால் கென்னடி, செந்தில்குமார், சம்பத் ஆகியோர் முன்னிலை வசித்தனர். ஆர்ப்பாட்டத்தில் அரசு அதிகாரிகளை தேர்தல் பிரச்சாரத்துக்கு பயன்படுத்தும் மத்திய பாஜக அரசையும், புதுச்சேரி ஆளுநர், முதல்வர், தலைமைச் செயலர் மற்றும் மாவட்ட ஆட்சியர் ஆகியோரை கண்டித்து கோஷமிட்டனர்.
எதிர்கட்சித் தலைவர் சிவா பின்னர் செய்தியாளர்களிடம் கூறியது: ''மத்திய அரசின் திட்டங்களை மக்களிடம் கொண்டு செல்லுகின்றோம் என்ற பெயரில் செய்யாத திட்டங்களை செய்ததாகக் கூறி தொடர்ந்து 3 மாத காலமாக அத்தனை துறை அதிகாரிகளையும் பணி செய்யவிடாமல் இங்குள்ள அதிகார மையம் அவர்களை பணித்து ஒவ்வொரு கிராமத்துக்கும் சென்று பொய் பிரச்சாரம் செய்கின்றனர். குறிப்பாக ஆயுஷ்மான் பாரத் திட்டத்தில் ரூ.5 லட்சம் மருத்துவ காப்பீடு வழங்குவதாக சொல்கின்றனர். புதுச்சேரியில் எந்த மருத்துவமனையிலும் இத்திட்டம் எடுத்துக்கொள்ளப்படவில்லை. மத்திய அரசின் நிறுவனமான ஜிப்மரில் கூட அதனை எடுக்கவில்லை.
சென்னையில் உள்ள பெரிய மருத்துவமனைகளிலும் இந்த அட்டையை கொண்டு சென்று சிகிச்சை பெற முடியவில்லை. இப்படிப்பட்டதை பெருமைப்ப்படுத்தி பேசுகின்றனர். ஏற்கெனவே காங்கிரஸ் - திமுக கூட்டணியில் வறுமை கோட்டுக்கு கீழ் உள்ளவர்களுக்கு இலவச கேஸ் இணைப்பு வழங்கப்பட்டுவிட்டது. இன்று திடீரென ஒன்றிரண்டு பேருக்கு கொடுத்துவிட்டு, இலவச கேஸ் தருகிறோம் என்று ஆளுநர் ஒவ்வொரு பகுதிக்கும் சென்று கூறுகிறார். புதுச்சேரி அரசு மருத்துவமனையில் எந்தவித வசதியும் இல்லை. மற்ற மாநிலங்களில் முதல்வரின் காப்பீடு திட்டம் உள்ளது. ஆனால் புதுச்சேரியில் அது இல்லை. இந்த ஆயுஷ்மான் பாரத் அட்டையினால் பயனடைந்தவர்களும் கிடையாது.
கிராம குடிநீர் திட்டத்தை பொறுத்தவரையில் புதுச்சேரியில் கடந்த 10 ஆண்டுகளாக போட்ட திட்டங்கள் அத்தனையும் கிடப்பில் உள்ளது. கழிப்பறை கட்டுவதில் மிகப்பெரிய ஊழல் நடந்து, 2 அதிகாரிகளை பணியிடை நீக்கம் செய்ததுடன் இருக்கிறது. 100 நாள் வேலை திட்டத்தை 3 நாட்கள் மட்டுமே கொடுத்தனர். சென்னை - நாகப்பட்டினம் வரை கடல் மார்க்கமாக ரயில் விடுவதாக சொன்னீர்கள். ஆனால் அதற்கான ஆய்வைக்கூட செய்யவில்லை. புதுச்சேரி மாநில அந்தஸ்து, கடன் தள்ளுபடி, மூடிக்கிடக்கும் மில்கள் திறப்போம் என்றீர்கள் ஆனால் புதுச்சேரியின் தேவைகள் எதையுமே செய்யவில்லை.
புதுச்சேரிக்கு மாதம் 5 மத்திய அமைச்சர்கள் வருகின்றனர். இதுவரை 3 ஆண்டுகளில் 150 அமைச்சர்கள் வந்து சென்றுள்ளனர். பிரதமர் 5 முறை வந்துள்ளார். உள்துறை அமைச்சர் அமித்ஷா என பலரும் வருகின்றனர். அவ்வாறு வருபவர்கள் பாஜக அலுவலகத்தில் உட்கார்ந்துவிட்டு, அறிக்கை ஒன்றை கொடுத்துவிட்டு சென்று விடுகின்றனர். புதுச்சேரிக்கு இதனால் ஒரு சல்லிக் காசுக்கூட கிடைக்கவில்லை.
நீங்கள் ஏதேனும் திட்டத்தை செய்திருந்தால் மக்கள் உங்களை வாழ்த்துவார்கள். ஆனால் நீங்கள் சொல்வதெல்லாம் நகைப்புக்குரியதாக உள்ளது. உங்களுடைய நாடக அரசியல் இனி எடுபடாது. புதுச்சேரியில் அதிகாரிகளை கொண்டு பாஜக கொடி நடவைப்பதும், அவர்களை யாத்திரை செல்வதாக சொல்லி செய்யாத திட்டங்களை செய்தோம் என்று கூறுவதும் செய்தால், அந்த நிகழ்ச்சி எங்கு நடக்கிறதோ அதே இடத்துக்கே சென்று திமுக போராட்டம் நடத்தும்'' என்று அவர் தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT