Published : 23 Jan 2024 03:45 PM
Last Updated : 23 Jan 2024 03:45 PM
சென்னை: சென்னையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தமிழக அமைச்சரவைக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இக்கூட்டத்தில் தொழில் துறை, சமூகநலத் துறை மற்றும் கலால் துறை சார்பில் பல்வேறு முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன. குறிப்பாக, மாநில மகளிர் கொள்கைக்கு அமைச்சரவையில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
தொழில் துறையின் சார்பில், பல்வேறு புதிய நிறுவனங்களுக்கான அனுமதிகள் வழங்கப்பட்டன. ஏற்கெனவே, உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் ரூ.6 லட்சம் கோடிக்கு அதிகமான முதலீடுகள் ஈர்க்கப்பட்டன. சமூக நலத்துறையைப் பொறுத்தவரையில், ஏற்கெனவே மாநில மகளிர் வரைவுக் கொள்கை வெளியிடப்பட்டிருந்தது. அதன் அடிப்படையில், இன்று நடந்த தமிழக அமைச்சரவைக் கூட்டத்தில், மாநில மகளிர் கொள்கைக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
இந்த மாநில மகளிர் கொள்கை என்பது பெண்கள் புகார் அளித்தால் 24 மணி நேரத்தில் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்ய வேண்டும். பொது மற்றும் தனியார் நிறுவனங்களில் பணியாற்றும் பெண்களுக்கு தலைமைப் பொறுப்புகளில் 50 சதவீதம் இடஒதுக்கீடு வழங்க வேண்டும். அரசியலுக்கு வர விரும்பும் பெண்களுக்கு 6 மாத கால பயிற்சி என்பது உள்ளிட்ட முக்கிய அம்சங்களைக் கொண்டது. இந்தக் கொள்கையை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அடுத்த மாதம் வெளியிடவுள்ளார்.
கலால் துறை சார்ந்த முக்கிய முடிவுகளும் இந்த அமைச்சரவைக் கூட்டத்தில் எடுக்கப்பட்டன. டாஸ்மாக் கடைகளின் எண்ணிக்கையைக் குறைத்தல், டாஸ்மாக் மதுபானங்கள் மீதான வரியை உயர்த்துதல் உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. மேலும், அடுத்த மாதம் நடைபெறவுள்ள சட்டசபைக் கூட்டத்தொடருக்கு ஆயத்தமாவது, ஆளுநர் உரையில் இடம்பெற வேண்டிய முக்கிய அம்சங்கள் மற்றும் புதிய திட்டங்கள் குறித்து இந்தக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.
மேலும், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அடுத்த மாதம் வெளிநாடு செல்கிறார். இந்த வெளிநாட்டு பயணத்துக்கும் அமைச்சரவையில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. ஜன.27-ம் தேதியன்று ஸ்பெயின் செல்லும் முதல்வர் ஸ்டாலின் பிப்.12-ம் தேதி தமிழகம் திரும்புகிறார். முதல்வருடன் தொழில் துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா, தொழில் துறை செயலாளர் உள்ளிட்டோர் செல்கின்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT