Published : 23 Jan 2024 09:04 AM
Last Updated : 23 Jan 2024 09:04 AM
உதகை: பாரம்பரியம் மாறாமல் ரூ.7 கோடி மதிப்பில் புதுப்பொலிவு பெறும் வகையில், உதகை ரயில் நிலைய கட்டுமானப் பணிகள் தொடங்கியுள்ளன.
நாடு முழுவதும் அதிக வருவாய்,வரவேற்பு மற்றும் நகரங்களின் பாரம்பரிய சிறப்பின் அடிப்படையில், 1,275 ரயில் நிலையங்களில் புதிய நவீன வசதிகளை நீண்ட கால சிறப்பு திட்டத்தின் அடிப்படையில் மேம்படுத்துவதற்காக, அம்ரித் பாரத் நிலையம் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.
அதன்படி, ரயில் நிலையத்தில் குறைந்த பட்சம் அடிப்படை தேவைகளை ஏற்படுத்துதல், எஸ்கலேட்டர் வசதி, மாற்றுத் திறனாளிகளுக்கு வசதி, ஒரு நிலையம் ஒரு பொருள் திட்டம், ரயில் நிலையத்தின் வடிவமைப்பு, இலவச வைஃபை வசதி, காத்திருப்போர் அறை, கழிப்பிட மேம்பாடு, சுகாதாரம், ஏற்கெனவே உள்ள வசதிகளை மேம்படுத்துதல் மற்றும் நீண்ட கால தேவையின் அடிப்படையில் புதிய நவீன வசதிகள் உள்ளிட்டவை ஏற்படுத்தப்பட உள்ளன.
இந்த திட்டத்தின் கீழ் சேலம் ரயில்வே கோட்டத்தில் கோவை, திருப்பூர், ஈரோடு, சேலம் மற்றும்நீலகிரி மாவட்டத்தில் உதகை, குன்னூர் உட்பட 15 ரயில் நிலையங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. இதன் மூலமாக உதகை, குன்னூர் ரயில் நிலையங்களில் நவீன வசதிகள் மேம்படுத்தப்பட இருக்கின்றன. இதில், உதகை ரயில் நிலையம் ரூ.7 கோடியிலும், குன்னூர் ரயில் நிலையம் ரூ.6.7கோடியிலும் புதுப்பிக்கப்படவுள்ளன.
இந்நிலையில், உதகை ரயில் நிலையம் புனரமைப்பு பணிகள் தொடங்கியுள்ளன. முகப்பு பகுதி இடிக்கப்பட்டு, விரிவுபடுத்தும் பணிகள் நடைபெற்று வருகின்றன. முகப்பு பகுதி இடிக்கப்பட்டு வருவதால், ரயிலில் வரும் பயணிகள் மாற்று வழியில் செல்ல ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ரயில் நிலையத்தை பொலிவு படுத்தும் பணியும் தொடங்கப்பட்டுள்ளது.
இது குறித்து தெற்கு ரயில்வே அதிகாரிகள் கூறியதாவது: உதகை மற்றும் குன்னூர் ரயில் நிலையங்கள் புகழ்பெற்ற மற்றும் பிரபலமான நீலகிரி மலை ரயில் பாதையில் அமைந்துள்ளன. அம்ரித் பாரத் ரயில் நிலையத் திட்டத்தின் கீழ் உதகை மற்றும் குன்னூர் ரயில் நிலையங்கள் குறிப்பிடத்தக்க மாற்றங்களைக் காண உள்ளன. இந்த மேம்பாட்டுப் பணிகளால் உதகை மற்றும் குன்னூர் ரயில் நிலையங்களில் பயணிகளுக்கு நவீன வசதிகள் செய்யப்பட்டு, ரயில் நிலையங்கள் அழகுபடுத்தப்படும்.
நெரிசலைக் குறைக்கும் வகையில், வாகனங்களுக்கு அகலமானபாதைகள் அமைக்கப்படும். தனியாக பாதசாரி பாதைகள் அமைக்கவும் திட்டமிடப்பட்டுள்ளன. பிரதான நுழைவுவாயிலின் முகப்பை உயர்த்தி, முகப்பு பகுதியை பொலிவு படுத்த எல்இடி விளக்குகள் அமைக்கப்படும். முன்பதிவு அலுவலகங்கள், காத்திருப்பு கூடம் மற்றும் கழிப்பறைகளின் உட்புறங்களும் மேம்படுத்தப்படும். பயணிகளுக்கு வழிகாட்ட எல்.இ.டி. அறிவிப்பு பலகைகள் வைக்கப்படும். மாற்றுத் திறனாளி பயணிகளுக்கு கைப் பிடியுடன் கூடிய சாய்வு தளங்கள், குறைந்த உயரம் கொண்ட நீர் குழாய்கள் உள்ளிட்ட வசதிகள் வழங்கப்படும்.
ரயில் நிலையத்துக்கு வருபவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய, கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்படும். பயணிகளின் தேவைகளைப் பூர்த்தி செய்யும் வகையில், நீர் விநியோகம் உறுதி செய்யப்படும். சுகாதாரம் மற்றும் வடிகால் ஏற்பாடுகளும் மேம்படுத்தப்பட்டு மாற்றப்படும். உதகை, குன்னூர் ரயில் நிலையங்களின் ஒட்டுமொத்த சூழலை உயர்த்த, ‘ஃபீல் குட்' அணுகு முறை பின்பற்றப்படும். மாற்றுத் திறனாளிகள் நடைமேடையை அணுகுவதற்கு ஹேண்ட் ரயில்களுடன் கூடிய சாய்வு தளங்கள், கழிப் பறைகள், முன்பதிவு கவுன்ட்டர்கள், லிஃப்ட் வசதி மற்றும் குறைந்த உயரம் கொண்ட தண்ணீர் குழாய் வசதிகள் வழங்கப்படும்.
எல்இடி விளக்குகள் ஸ்டேஷன் கட்டிடங்கள் முழுவதும் பயன்படுத்தப்பட்டு, மின்சாரம் சிக்கனம் கடைப்பிடிக்கப்படும். அம்ரித் பாரத்ரயில் நிலையத் திட்டத்தின் கீழ் உதகை, குன்னூர் ரயில் நிலையங்களை மறுசீரமைப்பதன் மூலமாகஅழகிய இடங்களாக மாற்றப்படும்.ரயில் நிலைய கட்டிடங்களின் மறுவடிவமைப்பு மற்றும் நவீனமயமாக்கல், நன்கு வடிவமைக்கப்பட்டு பயணிகள் வசதிகளுடன், ஒட்டுமொத்த பயண அனுபவத்தை மேம்படுத்தும். இவ்வாறு அவர்கள் கூறினர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT