Published : 07 Feb 2018 08:48 AM
Last Updated : 07 Feb 2018 08:48 AM

கொடுங்கையூரில் குப்பைகள் தீப்பற்றிக் கொண்டதால் குப்பை கொட்டும் வளாகத்தில் தொடர்ந்து வெளியேறும் புகை: சுவாசக் கோளாறால் அவதிக்குள்ளாகும் பொதுமக்கள்

வடகிழக்கு பருவமழைக் காலம் முடிந்துவிட்ட நிலையில், கொடுங்கையூர் குப்பை கொட்டும் வளாகத்தில் மீண்டும் குப்பைகள் எரிவதால் புகை வெளியேறி வருகிறது. அதனால் அப்பகுதியை சுற்றியுள்ள பொதுமக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

கொடுங்கையூர் குப்பை கொட்டும் வளாகம், கடந்த 30 ஆண்டுகளாக செயல்பட்டு வரு கிறது. 200 ஏக்கர் பரப்பளவில் செயல்பட்டு வரும் இந்த வளாகம், மாநகராட்சியின் திடக்கழிவு மேலாண்மைத் துறையால் பராமரிக்கப்பட்டு வருகிறது. சென்னை யில் தினமும் உருவாகும் 5 ஆயிரம் டன் குப்பைகளில் 2 ஆயிரத்து 500 டன் குப்பை கொடுங்கையூர் குப்பை கொட்டும் வளாகத்தில் கொட்டப்பட்டு வருகிறது.

இந்த வளாகத்திலிருந்து 100 மீட்டர் தொலைவில் மக்கள் வசிக்கும் பகுதி அமைந்துள்ளது. இந்த குப்பை கொட்டும் வளாகத்தால் துர்நாற்றம், நிலத்தடிநீர் மாசு, காற்று மாசு என பல்வேறு சுற்றுச்சூழல் பாதிப்புகளால் அவர்கள் பாதிக்கப்பட்டு வரு கிறார்கள். இந்த வளாகத்தில் மழைக் காலங்களில் குப்பைகள் ஈரமாக இருப்பதால் தீப்பற்றுவதில்லை. கோடைக்காலத்தில் குப்பைகள் தீயிடப்படுவதால் பிப்ரவரி மாதம் முதல் மே மாதம் வரை குப்பை கொட்டும் வளாகத்திலிருந்து புகை வெளியேறி வருவது வாடிக்கையாக இருந்து வருகிறது.

இதைக் கட்டுப்படுத்த கடந்த 2010-ம் ஆண்டு கண்காணிப்பு கோபுரங்கள் மற்றும் கேமராக்கள் நிறுவப்பட்டன. தீயணைப்பு வாகனங்களும் அங்கு நிறுத்தப்பட்டன. பின் நாட்களில் இவை எதுவும் செயல்பாட்டில் இல்லை. இந்த ஆண்டு மழைக்காலம் முடிந்த நிலையில், மீண்டும் குப்பைகள் எரிக்கப்பட்டு வளாகத்திலிருந்து புகை வெளியேறி வருகிறது. புகை மூட்டம் காரணமாக, இந்த வளாகத்தின் அருகில் உள்ள மணலி சாலை பனிப்பொழிவு ஏற்பட்டதைப் போன்று காட்சியளிக் கிறது. அதனால் வாகன ஓட்டிகளுக்கு பார்வை குறைவு ஏற்பட்டு விபத்து ஏற்படும் சூழல் ஏற்பட்டுள்ளது. மேலும் அப்பகுதியில் குடியிருப்போரும் சுவாசக் கோளாறுகளால் பாதிக்கப்படு கின்றனர்.

இது தொடர்பாக எவர் விஜிலென்ட் வெல்பேர் அசோசியேஷனைச் சேர்ந்த பி.கணேசன் கூறும்போது, “நான் இப்பகுதி யில் கடந்த 1975 முதல் வசித்து வருகிறேன். கடந்த 2010-ம் ஆண்டு உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பில் குப்பைகளை எரிக்கக்கூடாது என்று உத்தர விடப்பட்டுள்ளது. அதை மாநகராட்சி நிர்வாகம் பின்பற்றவில்லை. மாநகராட்சி நிர்வாகத்துக்கு குப்பைகளைக் கொட்ட போதிய இடம் தேவை என்பதால், இருக்கும் குப்பைகளை அவர்களே எரித்து விடுகின்றனர். ஆனால் குப்பை சேகரிப்போர் எரிப்பதாக மாநகராட்சி தெரிவிக்கிறது. தற்போது அதிக அளவில் புகை வெளியேறுகிறது. அதனால் பொதுமக்கள் சுவாசக்கோளாறுகளால் அவதிப்பட்டு வருகின்றனர். அண்மைக் காலமாக இரவு நேரங்களில் துர்நாற்றமும் வீசி வருகிறது. இதைத் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றார்.

இதுகுறித்து மாநகராட்சி அதிகாரிகளிடம் கேட்டபோது, ``குப்பை தீப்பற்றுவதை தடுக்க உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும்” என்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x