Published : 23 Jan 2024 08:54 AM
Last Updated : 23 Jan 2024 08:54 AM
சென்னை: தமிழகம் முழுவதும் தனியார் கோயில்கள், திருமண மண்டபங்கள் உட்பட ஏராளமான இடங்களில் இந்து அமைப்புகள், அப்பகுதி மக்கள் சார்பில் எல்இடி திரை அமைக்கப்பட்டு, அயோத்தி ராமர் கோயில் திறப்பு விழா நேரலையாக ஒளிபரப்பு செய்யப்பட்டது. சிறப்பு வழிபாடுகள், பஜனை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு, அன்னதானமும் வழங்கப்பட்டது.
காஞ்சி காமாட்சியம்மன் கோயில் வளாகத்தில் எல்இடி திரை அமைத்து அயோத்தி விழா நேரலையில் ஒளிபரப்பு செய்யப்பட்டது. இதில், மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் பங்கேற்று காணொலியில் கண்டு தரிசித்தார். நிகழ்ச்சியில் பங்கேற்ற அனைவருக்கும் காவிய ராமாயணம் என்ற புத்தகம் வழங்கப்பட்டது.
சென்னை கோபாலபுரம் வேணுகோபால சுவாமி கோயிலில் ஒளிபரப்பான நேரலையை பக்தர்கள், தொண்டர்களுடன் இணைந்து தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை பார்த்தார்.
ஆர்எஸ்எஸ் சார்பில் சென்னையில் நங்கநல்லூர், கொரட்டூர், தியாகராய நகர், திருவல்லிக்கேணி உட்பட பல்வேறு இடங்களில் சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு, நேரலையில் ஒளிபரப்பு செய்யப்பட்டது.
போரூர் ஸ்ரீ ராமச்சந்திரா உயர்கல்வி, ஆராய்ச்சி நிறுவன வளாகத்தில் உள்ள ராமர் கோயிலில் சிறப்பு அபிஷேகமும், வழிபாடும் நடைபெற்றது.
பல்வேறு பள்ளிகளில் நடந்த சிறப்பு வழிபாடுகளில் மாணவ, மாணவிகள் பங்கேற்றனர். சென்னையில் வடமாநிலத்தவர் அதிகம் வசிக்கும் புரசைவாக்கம், வண்ணாரப்பேட்டை, பட்டாளம், வேப்பேரி, எழும்பூர் உள்ளிட்ட பகுதிகளில் ராமருக்கு பிரம்மாண்ட பேனர் வைக்கப்பட்டிருந்தது. குடியிருப்பு வளாகத்தில் ராமர் கோயில் திறப்பு விழாவை குதூகலமாக கொண்டாடிய மக்கள், சாலையில் சென்றவர்களுக்கு இனிப்புகளை வழங்கினர்.
புதுச்சேரி காந்தி வீதி வரதராஜப் பெருமாள் கோயிலில் அயோத்தி ராமர் கோயில் நிகழ்வுகள் பெரிய திரையில் நேரடியாக ஒளிபரப்பு செய்யப்பட்டன. முதல்வர் ரங்கசாமி, அமைச்சர்கள் நமச்சிவாயம், லட்சுமி நாராயணன், தேனீ ஜெயக்குமார் உள்ளிட்டோர் காணொலியில் கண்டு தரிசித்தனர்.
சிவகங்கை மாவட்டம் இளையான்குடி அருகே தாயமங்கலத்தில் உள்ள முத்துமாரியம்மன் கோயிலில் வடக்கு ஒன்றிய பாஜக சார்பில், 108 பானைகளில் பொங்கல் வைக்கப்பட்டன.
கோவையில் வாக்குவாதம்: கோவையில் பாஜக தேசிய மகளிரணி தலைவரும், எம்எல்ஏவுமான வானதி சீனிவாசன் பங்கேற்ற நிகழ்ச்சியில், கோயில் முன் சாலையோரத்தில் ஒரு வாகனத்தில் எல்இடி திரையில் ராமர் கோயில் விழா நேரலையில் ஒளிபரப்பப்பட்டது. அனுமதியின்றி ஒளிபரப்பு செய்யக்கூடாது என போலீஸார் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் பாஜகவினருக்கும் காவல் துறையினருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது.
கோயில் மின் இணைப்பு துண்டிப்பு: திருப்பூர் விஸ்வேஸ்வரர் சுவாமி கோயிலில் தடை மீறி எல்இடி திரையை பொருத்தும் பணியில் பாஜகவினர் ஈடுபட்டதால், கோயிலின் மின் இணைப்பை அதிகாரிகள் துண்டித்தனர். கோயில் செயல் அலுவலரை முற்றுகையிட்ட பாஜகவினர், நீதிமன்ற உத்தரவுப்படி அனுமதிக்க வேண்டும் என தெரிவித்தனர். தொடர்ந்து, மின் இணைப்பு வழங்கப்பட்டு கோயில் வளாகத்தில் நேரலைக்கு அனுமதிக்கப்பட்டது.
திருவீதி உலாவுக்கு அனுமதி மறுப்பு: கிருஷ்ணகிரி மாவட்ட வேப்பனப்பள்ளி பூதிமுட்லு கிராமத்தில் உள்ள ஸ்ரீ கோதண்டராமர் கோயிலில் சுவாமி திருவீதி உலாவுக்கு காவல்துறை அனுமதி மறுத்ததால் பக்தர்கள் அதிர்ச்சி அடைந்தனர். ஓசூர் ஜுஜுவாடியில் உள்ள அனுமந்தராய சுவாமி கோயிலிலும் ஊர்வலத்துக்கு காவல்துறை அனுமதி மறுத்தது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT