Published : 23 Jan 2024 08:50 AM
Last Updated : 23 Jan 2024 08:50 AM
சென்னை: தமிழகம் முழுவதும் அமைதியாக நடந்த ராமர் கோயில் திறப்புவிழா நிகழ்வில் பிரச்சினையை உண்டாக்கி மக்களிடம் எழுச்சியை ஏற்படுத்தியது திமுகதான் என அண்ணாமலை தெரிவித்தார்.
சென்னை கோபாலபுரத்தில் முன்னாள் முதல்வர் கருணாநிதி வீட்டின் அருகில் உள்ள வேணு கோபால சுவாமி கோயிலில் அயோத்தி ராமர் கோயில் கும்பாபிஷேக நிகழ்வு நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்டது. இதனை பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பார்த்தார்.
அப்போது செய்தியாளர்களிடம் அண்ணாமலை கூறியதாவது: "கோயில் அறங்காவலர் அழைத்ததன் பேரிலே கோபாலபுரம் வந்தேன். எத்தனையோ கட்சிகள், அமைப்புகள் ராமருக்கு செருப்பு மாலை போட்ட நிகழ்வுகள் நடந்திருக்கிறது. அமைதியான முறையில் நடந்து கொண்டிருந்த இந்த நிகழ்வில், பெரிய பிரச்சினையை உண்டாக்கி, தமிழகத்தில் மக்களிடம் எழுச்சியை உண்டாக்கியது திமுக தான்.
தமிழக அரசு மக்களின் நம்பிக்கைக்கும், இந்து மக்களுக்கும் எதிராக இருக்கிறது என்பதை மீண்டும் ஊர்ஜிதம் செய்திருக்கிறது. 2024 மக்களவை தேர்தலில் தமிழக மக்கள் திமுகவுக்கு பாடம் புகட்டுவார்கள். ராமர் கோயில் நிகழ்வின் நேரடி ஒளிப்பரப்புக்கும், அன்னதானம், சிறப்பு பூஜைக்கும் அனுமதி கொடுக்க கூடாது என்று அறநிலையத் துறை வாய் மொழி உத்தரவு வழங்கி இருக்கிறது. அதேபோல், காவல் துறையும் தடை விதித்திருக்கிறது.
தமிழகத்தில் தேவையில்லாத ஒரு துறை என்றால் அது அறநிலையத் துறை தான். எனவே 2026-ல் பாஜக தமிழகத்தில் ஆட்சிக்கு வரும் போது இந்து அறநிலையத் துறை இருக்காது. ராகுல் காந்தி அசாம் சென்ற போது, அங்கு மக்கள் ஜெய் ஸ்ரீராம் என கோஷம் போட்டனர். இதைக் கேட்ட, ராகுல் அந்த மக்களிடம் சென்று வாக்குவாதத்தில் ஈடுபடுகிறார். சென்னையில் பாஜக சார்பில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட இடங்களில் நேரடி ஒளிபரப்பு, அன்னதானம் நிகழ்வு நடைபெறுகிறது. இவ்வாறு அவர் கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT