Published : 22 Jan 2024 03:49 AM
Last Updated : 22 Jan 2024 03:49 AM
சேலம்: திமுக இளைஞரணி மாநாட்டின் போது, "திமுகவை அடுத்து வழிநடத்திட உதயநிதிக்கு ஆற்றல் உண்டு" என குறிப்பிட்டு அக்கட்சியின் பொதுச்செயலாளர், கொறாடா ஆகியோர் பேசினர்.
திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் பேசுகையில், "சென்னையில் நடைபெற்ற திமுக மாநாட்டில் பார்வையாளராக கலந்து கொண்டு இருக்கின்றேன். அதன் பின்னர், திமுகவின் அனைத்து மாநாடுகளிலும் கலந்து கொண்டு உள்ளேன். ஆனால், தற்போது நடைபெற்ற இளைஞரணி மாநாடு போல பெரிய பிரம்மாண்ட மாநாட்டை கண்டது இல்லை. நூறு ஆண்டு கால திராவிட இயக்கத்தில் கருணாநிதி 50 ஆண்டுகள் தலைவராக இருந்தார். இப்போது, ஸ்டாலின் தலைவராக இருக்கிறார். இங்கு பேசியவர்கள், திமுகவை அடுத்த நூற்றாண்டிற்கு அழைத்து செல்லும் ஆற்றல் உதயநிதிக்கு உண்டு என குறிப்பிட்டு இருக்கிறார்கள். அதற்கு பாராட்டுகளை தெரிவித்து கொள்கிறேன். அதற்கான தகுதியும், உரிமையும் எனக்கு உண்டு." என்றார்.
முன்னதாக, மாநாட்டில் சிறப்பு தலைப்பில் முதலில் வந்த திமுக கொறடா கோ.வி.செழியன் பேசுகையில் "இளம் தலைவர் உதயநிதி திமுகவின் கொடியை 50 ஆண்டுகளுக்கும், தேசிய கொடியை 50 ஆண்டுகளுக்கும் உயர்த்தி பிடிக்கும் வாய்ப்பை பெற்றுள்ளார். என்னுடைய விருப்பம் மட்டுமல்ல பொதுச் செயலாளர் உள்ளிட்ட அனைவரின் விருப்பமும், உதயநிதி துணை முதல் அமைச்சராக பொறுப்பேற்று எங்களை வழி நடத்த வேண்டும். இது இங்கிருப்பவர்களுக்கு மட்டும் அல்ல இதனை பார்த்துக் கொண்டிருக்கும் தமிழக முதல்வருக்கும் விண்ணிலிருந்து மாநாட்டை கவனித்துக் கொண்டிருக்கும் கருணாநிதிக்கும் கேட்கும் வகையில் நாம் ஆரவாரத்தை எழுப்ப வேண்டும்" என்றார்.
மாநாட்டில் கவுரவமும் பாராட்டும்: திமுக இளைஞரணி மாநில மாநாட்டின் போது, உதயநிதி தலைமையில் இளைஞர் அணியினர் திமுக தலைவர் ஸ்டாலினுக்கு வெள்ளி செங்கோலை வழங்கி கௌரவித்தனர்.
திமுக இளைஞரணி மாநில மாநாட்டு ஒருங்கிணைப்பாளர் கே.என்.நேரு, திமுக தலைவர் ஸ்டாலினுக்கும் , இளைஞரணி செயலாளர் உதயநிதிக்கும் வெள்ளி வாள் மற்றும் வெள்ளி கேடயம் வழங்கி கௌரவித்தார்.
இதேபோல், இளைஞரணி செயலாளர் உதயநிதிக்கு, மாநாடு நடைபெறும் சேலம் கிழக்கு மாவட்டம் சார்பில் கிழக்கு மாவட்ட திமுக இளைஞரணி அமைப்பாளர் பிரபு வெள்ளி செங்கோல் வழங்கி கௌரவித்தார்.
திமுக இளைஞரணி மாநில மாநாட்டின் விழா மலர், மாநில சுயாட்சியை வலியுறுத்தும் ஆங்கில புத்தகம் ஆகியவற்றை ஸ்டாலின் வெளியிட்டார். நீட் தேர்வு விலக்கு கோரி நடத்தப்பட்ட கையெழுத்து இயக்கத்தில் 85 லட்சம் கையெழுத்து ஒரு பகுதியை முதல்வரிடம் வழங்கினர்.
திமுக மாநாடு உலக சாதனை என குறிப்பிட்டு, யுனிக் வேர்ல்டு அமைப்பு சார்பில் வழங்கப்பட்ட சான்றிதழை இளைஞரணி உதயநிதி ஸ்டாலினிடம் வழங்கி பாராட்டு பெற்றார்.
நேரு என்றால் மாநாடு, மாநாடு என்றால் நேரு: திமுக இளைஞரணி 2வது மாநில மாநாட்டை சிறப்பாக நடத்த முதன்மை செயலாளர் கே.என்.நேருவை, பாராட்டிய பேசி முதல்வர் ஸ்டாலின் 'நேரு என்றால் மாநாடு, மாநாடு என்றால் நேரு' என்று குறிப்பிடும் அளவுக்கு மிக சிறப்பாக மாநாட்டு ஏற்பாடுகளை செய்துள்ளார் என பாராட்டி பேசினார். இதேபோல, உதயநிதி மற்றும் துரைமுருகன் ஆகியோர் மாநாட்டை ஏற்பாடுகளை சிறப்பாக செய்தற்காக கே.என் நேருவை புகழ்ந்து பேசி பாராட்டு தெரிவித்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT