Published : 22 Jan 2024 05:47 AM
Last Updated : 22 Jan 2024 05:47 AM
சேலம்: விரைவில் மத்தியில் அமையவி ருக்கும் `இண்டியா’ கூட்டணி ஆட்சி,மாநிலங்களுக்கு உரிமைகள் வழங்கும் சட்டத்தை உருவாக்கும் என்று திமுக தலைவரும், முதல்வருமான மு.க.ஸ்டாலின் கூறினார்.
சேலம் மாவட்டம் பெத்தநாயக்கன்பாளையத்தில் திமுக இளைஞரணி 2-வது மாநில மாநாடு நேற்று நடைபெற்றது.
மாநாட்டு முகப்பில் புத்தகக் கண்காட்சி, திமுக இளைஞரணி குறித்த புகைப்படக் கண்காட்சிகள் அமைக்கப்பட்டிருந்தன.
முதல் நிகழ்ச்சியாக 100 அடி உயர கொடிக் கம்பத்தில் துணைப் பொதுச் செயலாளர் கனிமொழி எம்.பி. கட்சிக் கொடியேற்றினார். தொடர்ந்து, மாநாட்டுத் திடலில் அமைக்கப்பட்டிருந்த பெரியார், அண்ணா, கருணாநிதி, பேராசிரியர் அன்பழகன் சிலைகளுக்கு முதல்வர் ஸ்டாலின் மலர் தூவி மரியாதை செலுத்தினார். அதேபோல, இளைஞரணிச் செயலாளர் உதயநிதி, பொதுச் செயலாளர் துரைமுருகன், முதன்மைச் செயலாளர் கே.என்.நேரு, பொருளாளர் டி.ஆர்.பாலு உள்ளிட்டோரும் மரியாதை செலுத்தினர். மாநாட்டுத் திடலை எம்எல்ஏ எழிலரசன் திறந்துவைத்தார். மேடைக்கு எதிரேஅமைக்கப்பட்டிருந்த இருக்கைகளில் துர்கா ஸ்டாலின், செல்வி,மு.க.தமிழரசு மற்றும் அமைச்சர்கள், மாவட்டச் செயலாளர்கள், எம்.பி., எம்எல்ஏக்கள், இளைஞரணி நிர்வாகிகள் அமர்ந்திருந்தனர்.
பின்னர், திருச்சி சிவா, ஆ.ராசா, தங்கம் தென்னரசு, அன்பில் மகேஷ், திண்டுக்கல் லியோனி உள்ளிட்டோர் சிறப்புரையாற்றினர். மொழிப்போர் தியாகிகளின் படங்களை உதயநிதி திறந்துவைத்தார். மாநில சுயாட்சிப் புத்தகம் மற்றும் மாநாட்டு மலரை முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டார். பின்னர், இளைஞரணி சார்பில் ஸ்டாலினுக்கு வெள்ளிச் செங்கோல், வீரவாள் வழங்கப்பட்டது.
மாநாட்டில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது: தெற்கில் விடியல் பிறந்துவிட்ட நிலையில், வடக்கிலும் விடியல் பிறக்கும். உதயநிதியின் கட்சி,சமூகப் பணிகள் மகிழ்ச்சியளிக்கின்றன. இளைஞரணி என் தாய் வீடு. இளைஞரணியால் உருவாக்கப்பட்டவர்கள் எம்எல்ஏ, எம்.பி., மாவட்டச் செயலாளராக உயர்ந்துள்ளனர். எனவே, இளைஞரணியினர் தமிழினம் மற்றும் திராவிட இயக்கத்தின் வரலாற்றையும், திமுகவின் திட்டங்களையும், தமிழினத்தை அழிக்க முயலும் சக்திகளையும் அறிந்துகொள்ள வேண்டும்.
தமிழகத்துக்கும், தமிழினத்துக்கும் ஆபத்து வந்துவிட்டதால்தான் ‘மாநில உரிமைகள் மீட்பு மாநாடு’ நடத்துகிறோம். தமிழையும், தமிழர்களையும் அடையாளம் இல்லாதவர்களாக மாற்ற பாஜக திட்டமிட்டுள்ளது. 10 ஆண்டுகால அதிமுக ஆட்சி, தமிழகத்தை பாழ்படுத்திவிட்டது.
பாஜக திட்டப்படி, கூட்டணிக்கு உள்ளே-வெளியே என அதிமுக பகல்வேஷம் போடுகிறது. நாட்டின் ஒற்றுமையைக் காக்க, இந்திய அரசியலமைப்பை திருத்த வேண்டும். மாநிலத்தில் சுயாட்சி, மத்தியில் கூட்டாட்சி என்பதே நம் முழக்கம். மக்களவைத் தேர்தல் வெற்றிக்குப் பின்னர் அமையவிருக்கும் இண்டியாகூட்டணி ஆட்சி, மாநிலங்களுக்கு உரிமைகள் வழங்கும் அரசியலமைப்புச் சட்டத்தை உருவாக்கும் முயற்சியில் கவனம் செலுத்தும்.
மாநில உரிமைகளை பறிக்கும்பணியை பிரதமர் மோடி மேற்கொண்டு வருகிறார். சட்டங்களைத் திருத்தும்போது, மாநில அரசுகளையும், முதல்வர்களையும் ஆலோசிப்பதில்லை. மத்திய அரசுக்கு நிதி கொடுக்கும் ஏடிஎம்இயந்திரங்களாக மாநில அரசுகளை மாற்றியுள்ளார்.
திருக்குறள் சொன்னால், பொங்கல் வைத்தால், அயோத்தியில் கோயில் கட்டினால் போதும். தமிழக மக்கள் ஏமாறுவார்கள் என்று கருதுகிறார். இது பெரியார், அண்ணா, கருணாநிதியின் மண். அவரது எண்ணம் பலிக்காது. பிரதமராக இருமுறை மோடி தேர்ந்தெடுக்கப்பட்ட நிலையில், 2 முறையும் தமிழக மக்கள் அவருக்கு வாக்களிக்கவில்லை. இனி இந்தியா முழுவதும் மக்கள் மோடிக்கு வாக்களிக்க மாட்டார்கள்.
இண்டியா கூட்டணி ஆட்சி, ஒற்றைக் கட்சி ஆட்சியாக, சர்வாதிகார ஆட்சியாக இருக்காது. மாநிலங்களுக்கு நன்மைகளை செய்யும் ஆட்சியாக இருக்கும்.
மக்களவைத் தேர்தல் பணிக்கு தனி குழுக்கள் அமைத்துள்ளேன். கூட்டணி குறித்தும், வேட்பாளர்கள் குறித்தும் யாரும் கவலைகொள்ளத் தேவையில்லை. அதை நான் பார்த்துக் கொள்கிறேன். தமிழகம், புதுச்சேரியில் 40 தொகுதிகளிலும் இண்டியா கூட்டணியை வெற்றி பெறச் செய்ய வேண்டும். நம் நோக்கம் இண்டியா கூட்டணியை வெல்லச் செய்வதுதான். இவ்வாறு அவர் பேசினார்.
இளைஞர்களுக்கு வாய்ப்பு: மாநாட்டுக்கு தலைமை வகித்து இளைஞரணி மாநிலச் செயலாளர் உதயநிதி பேசியதாவது: ‘நீட்’ தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி 85 லட்சம் பேரிடம் கையெழுத்து வாங்கியுள்ளோம். திமுக தலைவர் அனுமதி கிடைத்தால் டெல்லியில் போராட்டம் நடத்துவோம்.
மாநில அரசுகளின் உரிமைகளைப் பறிப்பதை முழு நேரப் பணியாக மத்திய அரசு செய்து கொண்டுள்ளது. தமிழக மக்கள் செலுத்தும் வரிப் பணத்தில் ஒரு ரூபாயில் 29 காசுகள் மட்டுமே தமிழகத்துக்கு கிடைக்கிறது. 9 ஆண்டுகளில் ரூ.5 லட்சம் கோடி வரி செலுத்தியதில், ரூ.2 லட்சம் கோடி மட்டுமே கிடைத்துள்ளது.
நமது மொழி, பண்பாடு, உரிமைகள் மீது தாக்குதல் நடத்தப்படுகிறது. ஆனால், இன்னும் 2 ஆயிரமாண்டுகள் ஆனாலும் தமிழரின் அடையாளத்தை அழிக்க முடியாது. அமலாக்கத் துறை மூலம் திமுகவை மிரட்டுகிறார்கள். திமுக தலைவர்கள், தொண்டர்களை அல்ல, தொண்டர் வீட்டு குழந்தையைக்கூட மிரட்ட முடியாது. முதல்வர் ஸ்டாலின் கைகாட்டுபவர்தான் அடுத்த பிரதமராக வர முடியும். நாடு முழுவதும் காவிச் சாயம் பூச முயற்சிக்கும் பாஜகவை அகற்றுவதே இளைஞரணியின் முதல் பணி. அதற்கு, மக்களவைத் தேர்தலில் இளைஞர்களுக்கு வாய்ப்புஅளிக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார். டிஜிபி சங்கர்ஜிவால் தலைமையில் 8 ஆயிரம் போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர்.
5 லட்சம் பேர் பங்கேற்பு: முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது சமூகவலைத்தளப் பதிவில்,"இந்தியாவில் இதுவரை நடத்தப்படாத மாநாடு. 9 லட்சம் சதுர அடி பரப்பில் அமைக்கப்பட்ட பிரமாண்டமான மாநாட்டு அரங்கில், 5 லட்சம் தொண்டர்கள் மிகுந்த எழுச்சியுடன் பங்கேற்றனர்" என்று தெரிவித்துள்ளார்.
தலைவர்கள் வாழ்த்து..திமுக இளைஞரணி மாநாட்டுக்கு, காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா, காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, ஜம்மு-காஷ்மீர் முன்னாள் முதல்வர் பரூக் அப்துல்லா, ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக், தேசியவாத காங்கிரஸ் கட்சித் தலைவர் சரத்பவார், கேரள முதல்வர் பினராயி விஜயன், கர்நாடக முதல்வர் சித்தராமையா, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தேசியச் செயலாளர் சீதாராம் யெச்சூரி, ஐயுஎம்எல் தேசியத் தலைவர் கே.எம்.காதர் மொய்தீன், கர்நாடக துணை முதல்வர் டி.கே.சிவக்குமார் மற்றும் கூட்டணி கட்சித் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT