Published : 22 Jan 2024 05:22 AM
Last Updated : 22 Jan 2024 05:22 AM
சென்னை: சென்னையில், இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டம் ரூ.63,246 கோடி மதிப்பில், 116.1 கி.மீ. தொலைவில் 3 வழித்தடங்களில் செயல்படுத்தப்படுகின்றன. இவற்றில், ஒருவழித்தடமான மாதவரம் - சோழிங்கநல்லூர் வரையிலான 5-வது வழித்தடத்தில் மெட்ரோ பணிகள் தற்போது முழுவீச்சில் நடைபெறுகின்றன. இந்த வழித்தடத்தில் 39 உயர்மட்ட நிலையங்களும், 6 சுரங்கப்பாதை நிலையங்களும் இடம்பெற உள்ளன.
பல்வேறு இடங்களில் தூண்கள்அமைத்து உயர்மட்டப் பாதைக்கான பணிகள் நடைபெறுகின்றன. மொத்தம் 3 பகுதிகளாகப் பிரித்து, பணிகள் தீவிரமாக நடைபெறுகின்றன.
இதுகுறித்து சென்னை மெட்ரோரயில் நிறுவன அதிகாரிகள் கூறியதாவது: இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டத்தில் முக்கியமான வழித்தடமாக மாதவரம் - சோழிங்கநல்லூர் வழித்தடம் இருக்கிறது. இங்கு கொளத்தூர் முதல் நாதமுனிவரையிலான 5 கி.மீ. தொலைவு வரையிலான பாதை தவிர, மீதமுள்ள 39.6 கி.மீ. வரை உயர்மட்ட பாதையாக அமைக்கப்படுகிறது. இந்த உயர்மட்டப் பாதை அமையும் வழித்தடத்தை 3 பகுதிகளாகப் பிரித்து பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன.
மாதவரம் முதல் கோயம்பேடு வரை உயர்மட்டப் பாதையில் 443தூண்கள் அமைக்க வேண்டும். தற்போது வரை 142 தூண்கள் அமைக்கப்பட்டுள்ளன. கோயம்பேடு முதல் உள்ளகரம் வரை அமைக்கப்பட வேண்டிய 553 தூண்களில், இதுவரை 144 தூண்கள் அமைக்கப்பட்டுள்ளன.
உள்ளகரம் முதல் எல்காட் வரை 513 தூண்கள் அமைக்க வேண்டும். இதுவரை 205 தூண்கள் அமைக்கும் பணிகள் நிறைவடைந்துள்ளன. ஒட்டுமொத்தமாக, இந்த வழித்தடத்தில் மொத்தம் 1,509 தூண்கள் அமைக்க வேண்டும். இதுவரை மொத்தம் 491 தூண்கள் அமைக்கும் பணிகள் நிறைவடைந்துள்ளன. சில இடங்களில் தூண்களுக்கு மேல் தொப்பிபோல வடிவம் அமைக்கும் பணியும் நடைபெறுகிறது.
மாதவரம் - ரெட்டேரி வரை தூண்கள் அமைத்து, அதற்கு மேல் பாதை அமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. உள்ளகரம் - எல்காட் வரையிலான பகுதியில், உள்ளகரம் முதல் பெரும்பாக்கம் வரை பாதையில் பெரும்பாலான இடங்களில் தூண்கள் அமைத்து, அடுத்த கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. கோயம்பேடு - உள்ளகரம் பகுதியில் பல இடங்களில் தூண்கள் அமைக்கும் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. ஒட்டுமொத்தமாக இந்த வழித்தடத்தில் உயர்மட்டப் பணிகளை வரும் 2026-ம் ஆண்டு இறுதிக்குள் முடிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர்.
கொளத்தூர் - நாதமுனி வரை நவம்பரில் சுரங்கப்பணி: 5-வது வழித்தடத்தில் கொளத்தூர் முதல் நாதமுனி வரையிலான 5 கி.மீ. தொலைவில் சுரங்கப்பாதை அமைக்கப்பட உள்ளது. இப்பகுதி பாறைகளால் நிறைந்தது என அடையாளம் காணப்பட்டுள்ளதால், 2-ம் கட்ட மெட்ரோ ரயில் பணியில் மிகவும் சவாலான பகுதியாக இருக்கும் என்று தெரிகிறது. இந்த சுரங்கப்பாதை பணிக்கான ஒப்பந்தம் கடந்த ஆண்டில் செப்டம்பரில் வழங்கப்பட்டது. வரும் நவம்பரில் இங்கு பணிகளைத் தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது.
இந்த சுரங்கப்பாதை பணி முடிவடைய 3 ஆண்டுகள் ஆகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கொளத்தூர் சந்திப்பு, சீனிவாசா நகர், வில்லிவாக்கம் மெட்ரோ, வில்லிவாக்கம் பேருந்து நிலையம் மற்றும் நாதமுனி ஆகிய ரயில் நிலையங்கள் சுரங்கப்பாதை மூலம் இணைக்கப்பட உள்ளது. சுரங்கப்பாதை மற்றும் நிலைய கட்டுமானத்துக்காக, ஒப்பந்தம் ஒரு மாதம் முன்பு வழங்கப்பட்டது. இங்கு சாலை தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும், சுரங்க ரயில் நிலைய பணிகளும் ஏற்கெனவே தொடங்கி நடைபெற்று வருகின்றன.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT