Published : 08 Feb 2018 07:12 AM
Last Updated : 08 Feb 2018 07:12 AM
திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களின் வறட்சிப் பகுதிகளில் விவசாயம் மற்றும் குடிநீர் தேவைகளை மேம்படுத்த தொடங்கப்பட்ட தாமிரபரணி - கருமேனியாறு - நம்பியாறு இணைப்புத் திட்டப் பணிகள் பாதியில் நிற்கும் நிலையில் உள்ளன. நீண்ட ஆண்டுகளுக்குப் பிறகு கடந்த 2017-ம் ஆண்டு அதிமுக அரசு திட்டத்தைத் தொடர ரூ.300 கோடி நிதி ஒதுக்கியது. ஆனாலும், இடத்தை அளந்து கையகப்படுத்த தேவையான சர்வேயர்கள் இல்லாதது மற்றும் ஏற்கெனவே நிலத்தைக் கொடுத்தவர்களுக்கு இழப்பீடு அளித்தலில் சுணக்கம் உள்ளிட்ட காரணங்களால் திட்டம் மீண்டும் முடக்கப்பட்டுள்ளதாக அப்பகுதி விவசாயிகள் குற்றம்சாட்டுகின்றனர்.
தாமிரபரணி ஆற்றில் இருந்து ஒவ்வோர் ஆண்டும் மழைக் காலங்களில் சுமார் 50 ஆயிரம் மில்லியன் கனஅடி தண்ணீர் கடலில் சென்று கலக்கிறது. அதேசமயம் ஒவ்வொரு ஆண்டும் சராசரியாக 13,758 மில்லியன் கனஅடி நீர் கடலில் கலப்பதாக பொதுப்பணித் துறையின் நீர் வள ஆதாரத்துறை குறிப்பிடுகிறது. மழைக் காலங்களில் இவ்வாறு ஏற்படும் வெள்ளங்களால் பயிர்கள் சேதம் அடைவதும் வறட்சிக் காலங்களில் மாவட்டத்தின் சில பகுதிகள் தண்ணீர் இல்லாமல் தவிப்பதும் வழக்கமாக உள்ளது. இதனால், மழைக் காலங்களில் கடலில் உபரியாகச் சென்றுக் கலக்கும் தண்ணீரை திருநெல்வேலியின் வறட்சிப் பகுதிகளான ராதாபுரம், திசையன்விளை, நாங்குநேரி மற்றும் தூத்துக்குடியின் சாத்தான்குளம் வட்டார பகுதிகளுக்கு திருப்பிவிட்டால் பல ஆயிரம் ஏக்கர் நிலம் செழிக்கும்.
தாமிரபரணி ஆறு - கருமேனியாறு - நம்பியாறு ஆகியவற்றை இணைத்து திசையன்விளை அருகே எம்.எல்.தேரியில் மிகப்பெரிய குளம் அமைக்கும் திட்டம் கடந்த 2009-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. மொத்தம் ரூ.369 கோடி மதிப்பில் திட்டம் தயாரிக்கப்பட்டு, முதல்கட்டமாக ரூ.65 கோடியை ஒதுக்கி அப்போதைய முதல்வர் கருணாநிதி உத்தரவிட்டார். தொடர்ந்து 2010-ல் ரூ.41 கோடியும், 2011-ல் ரூ.107 கோடியும் ஒதுக்கப்பட்டது. திட்டத்தில் முதல்கட்டமாக கன்னடியன் கால்வாய் முதல் திடியூர் வரை 20.3 கி.மீ. தூரம், 2-ம் கட்டமாக திடியூர் முதல் மூலக்கரைப்பட்டி வரை 18.6 கி.மீ. தூரம் கால்வாய் அமைக்கும் பணிகள் நிறைவடைந்துள்ளன.
மாநில அரசு நிதி ஒதுக்கீடு
தமிழக அரசு கடந்த 2012-13-ம் ஆண்டின் நிதிநிலை அறிக்கையில், “ரூ.369 கோடி மதிப்பீட்டிலான தாமிரபரணி - கருமேனியாறு - நம்பியாறு இணைப்புத் திட்டம் துரித செயலாக்கத்தில் உள்ளது. இந்தத் திட்டத்துக்காக 2012-13-ம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்ட மதிப்பீடுகளில் ரூ.100 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது” என்று தெரிவித்துள்ளது. அதேபோல 2013-14-ம் ஆண்டு நிதிநிலை அறிக்கையிலும், “தாமிரபரணி - கருமேனியாறு - நம்பியாறு இணைப்புத் திட்டம், கட்டளை கதவணையுடன் காவிரி - குண்டாறு இணைப்புத் திட்டம் ஆகியவற்றின் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்தத் திட்டங்களுக்கு 2013-14-ம் ஆண்டின் வரவு செலவு திட்டத்தில் ரூ.156.44 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
இதற்கிடையே நீண்டகாலம் இந்தத் திட்டம் கிடப்பில் இருப்பது குறித்து நாங்குநேரி எம்எல்ஏவான வசந்தகுமார் தமிழக அரசின் கவனத்துக்கு எடுத்துச் சென்றார். இதுகுறித்து ‘தி இந்து’விடம் அவர் கூறும்போது, “பல்வேறு காரணங்களால் இந்தத் திட்டம் பல ஆண்டுகளாகக் கிடப்பில் இருந்தது. இதுகுறித்து கடந்த ஆண்டு நான் சட்டப்பேரவையில் பேசினேன். தொடர்ந்து முதல்வர், துணை முதல்வர் ஆகிய இருவரிடமும் இந்தத் திட்டத்தை நிறைவேற்ற வேண்டிய அவசியத்தை பலமுறை கூறினேன். தொடர்ந்து கடந்தாண்டு ஏப்ரல் மாதம் இந்தத் திட்டத்தை தொடர இந்த அரசு மேலும் 300 கோடி ரூபாயை ஒதுக்கியுள்ளது” என்றார்.
23 ஆயிரம் ஹெக்டேர் பயன்
மேற்கண்ட திட்டம் நிறைவேற்றப்பட்டால் 17,002 ஹெக்டேர் புதிய பாசனப் பரப்பு உட்பட 23,040 ஹெக்டேர் நிலங்கள் பாசன வசதி பெறும். குறிப்பாக திருநெல்வேலி மாவட்டத்தில் 32 கிராமங்களில் 13,481 ஹெக்டேர் நிலங்களும், தூத்துக்குடி மாவட்டத்தில் 18 கிராமங்களில் 9,559 ஹெக்டேர் நிலங்களும் பாசன வசதி பெறும். திருநெல்வேலி மாவட்டத்தில் 177 குளங்கள், தூத்துக்குடி மாவட்டத்தில் 75 குளங்கள் என மொத்தம் 252 குளங்கள் நீர் வளம் கிடைக்கப்பெறும். இவை தவிர, திருநெல்வேலியில் 2,657 கிணறுகளும், தூத்துக்குடி மாவட்டத்தில் 2,563 கிணறுகளும் நிலத்தடி நீர்மட்டம் உயரப்பெறும்.
மத்திய அரசு ஒப்புதல்
முன்பு இந்தத் திட்டத்துக்கு மத்திய அரசின் ஒப்புதல் கிடைக்கவில்லை என்று அதிகாரிகள் தரப்பில் சொல்லப்பட்டுவந்தது. இதுகுறித்து தற்போது ‘தி இந்து’-விடம் பேசிய பொதுப்பணித் துறை அதிகாரிகள், “தாமிரபரணி - கருமேனியாறு - நம்பியாறு இணைப்புத் திட்டம் மத்திய அரசின் ‘விரிவுப்படுத்தப்பட்ட பாசனப் பயன் திட்டம்’ (AIBP) கீழ் நிதி உதவி பெறும் திட்டமாகும். திட்டத்தின் விலை மதிப்பீடு மத்திய நீர்வள ஆணையத்தின் ‘விலை மதிப்பீட்டு இயக்ககம்’ அலுவலகத்துக்கு அனுப்பப்பட்டு தற்போது ரூ.872.45 கோடியாக விலை மறு மதிப்பீடு செய்யப்பட்டு கடந்த 2015-ம் ஆண்டு ஒப்புதல் பெறப்பட்டது. தவிர மத்திய சுற்றுச்சூழல், வனம் மற்றும் வானிலை மாற்றம் அமைச்சகத்தில் இருந்தும் ‘சுற்றுச்சூழல் தடை நீக்கச் சான்று’ பெறப்பட்டுள்ளது.
இறுதியாக மத்திய நீர்வளம், ஆறுகள் மேம்பாடு மற்றும் கங்கை புனரமைப்பு அமைச்சகம் கடந்த 2016-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் இந்தத் திட்டத்துக்கு முதலீட்டு ஒப்புதல் அளித்துள்ளது.
இந்தத் திட்டத்துக்காக மொத்தம் 1,244.28.7 ஹெக்டேர் நிலம் தேவைப்படுகிறது. இதற்காக ஏற்கெனவே 158.95.8 ஹெக்டேர் நிலம் கையகப்படுத்தப்பட்டுள்ளது. மீதம் 1,085.32.9 ஹெக்டேர் நிலம் கையகப்படுத்த வேண்டியிருக்கிறது. இந்த திட்டத்துக்கு 2017-18-ம் நிதியாண்டுக்கு ரு.100 கோடி மதிப்பில் கால்வாய் தோண்டும் பணிகளுக்கும், ரூ.200 கோடியில் நிலம் கையகப்படுத்தும் பணிகளுக்கும் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது” என்றார்கள்.
ஆனாலும்கூட திட்டப் பணிகள் தொடங்கப்படாமல் சுணக்கமாக இருப்பதாக மேற்கண்ட பகுதிகளின் விவசாயிகள் தெரிவிக்கின்றனர். அதிகாரிகள் தரப்போ, “அனைத்தும் தயாராக இருக்கிறது. ஆனால், தற்போது நிலத்தை அளந்து கையகப்படுத்த ஏராளமான சர்வேயர்கள் அடங்கிய தனியான துறை ஒன்று தேவை. அது கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. மேலும் ஏற்கெனவே நிலம் வழங்கியவர்களுக்கு இழப்பீடு அளிப்பதிலும் நடைமுறை சிக்கல் இருக்கிறது. எனவே, பணிகள் தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. ஆனால், விரைவில் பணிகளை தொடங்கிவிடுவோம்” என்றார்கள்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT