Published : 23 Feb 2018 07:23 AM
Last Updated : 23 Feb 2018 07:23 AM
உத்திரமேரூர் அருகே பாலேஸ்வரம் பகுதியில் செயல்பட்டு வரும் ஆதரவற்றவர்களுக்கான கருணை இல்லத்தில் உள்ள விதிமீறல்கள் தொடர்பாக நோட்டீஸ் அனுப்ப வருவாய்த் துறை உள்ளிட்ட பல்வேறு துறைகள் சார்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
உத்திரமேரூர் அருகே உள்ள பாலேஸ்வரத்தில் ஆதரவற்றவர்களுக்கான கருணை இல்லம் செயல்பட்டு வருகிறது. இங்கு 350 பேர் தங்கியுள்ளனர்; 30-க்கும் மேற்பட்டோர் பணியாற்றி வருகின்றனர்.
இந்தக் கருணை இல்லத்தில் இறந்தவர்கள் சுவரில் சிறு, சிறு பெட்டிகள் போன்ற பிணவறையில் வைத்து சிமென்ட் பூசி அடக்கம் செய்வதாகக் கூறப்படுகிறது. இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இறந்தவர்களின் எலும்புகள் வெளிநாடுகளில் விற்பனை செய்யப்படுவதாகவும், அதற்காகத்தான் பெட்டிகள் போன்ற பிணவறையில் வைத்து அடக்கம் செய்வதாகவும் இப்பகுதியைச் சேர்ந்த சிலர் குற்றம் சாட்டுகின்றனர். இதற்கு கருணை இல்ல நிர்வாகத்தினர் மறுப்பு தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் இரும்புலியூர் இல்லத்தில் இறந்த விஜயகுமார் என்பவரது சடலம் இந்தக் கருணை இல்லத்துக்கு வேனில் கொண்டு வரப்பட்டது. அப்போது அதே இல்லத்தில் தங்கி இருந்த செல்வராஜ் (72), திருவள்ளூரைச் சேர்ந்த அன்னம்மாள்(74) ஆகியோரையும் அந்த வேனில் அழைத்து வந்தனர். அந்த வேன் திருமுக்கூடல் அருகே வரும்போது அன்னம்மாளின் அலறல் சத்தம் கேட்டு அப்பகுதி மக்கள் வேனை வழிமறித்து போலீஸாரிடம் ஒப்படைத்தனர். மேலும் இந்தக் கருணை இல்லத்தின் நடவடிக்கைகள் தொடர்பாக விசாரணை நடத்த வேண்டும் என்றும் வலியுறுத்தி காவல் நிலையத்தை முற்றுகையிட்டனர்.
அதிகாரிகள் ஆய்வு
இந்நிலையில் காஞ்சிபுரம் கோட்டாட்சியர் ராஜு உட்பட 6 துறை அதிகாரிகள் நேற்று முன்தினம் ஆய்வு செய்தனர். இந்த ஆய்வின்போது கருணை இல்லத்தில் பல்வேறு விதிமீறல்கள் இருப்பது தெரியவந்தது. இந்த விதிமீறல்கள் தொடர்பாக சம்பந்தப்பட்ட துறைகள் மூலம் நோட்டீஸ் அனுப்ப முடிவு செய்யப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
காவல்துறை சார்பில் அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. அதில் கருணை இல்லத்தில் இறப்பவர்கள் குறித்த விவரங்கள் தங்களுக்கு தெரிவிக்கப்படுவதில்லை என்று கூறியுள்ளதாக போலீஸார் சிலர் தெரிவித்தனர்.
அதேபோல் சமூக நலத்துறை சார்பிலும் அங்கு சிகிச்சை தேவைப்படுபவர்களுக்கு அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்ய வேண்டும். மனநலம் பாதிக்கப்பட்டவர்களைக் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனை மூலம் சிகிச்சை அளிக்க வேண்டும். யாராவது உறவினர்கள் இருந்து அவர்கள் வீட்டுக்குச் செல்ல விரும்பினால் அவர்களை அனுப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக அத்துறையைச் சேர்ந்த அலுவலர்கள் தெரிவித்தனர்.
இந்தக் கருணை இல்லம் தொடர்பாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சந்தோஷ் ஹதிமானியிடம் கேட்டபோது, “வருவாய் கோட்டாட்சியர் தலைமையில் ஆய்வு நடந்துள்ளது. அந்த ஆய்வு அறிக்கை எங்களுக்கு வந்த உடன் அந்த அறிக்கையின் அடிப்படையில் நாங்கள் நடவடிக்கை எடுப்போம்” என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT