Published : 21 Jan 2024 02:47 PM
Last Updated : 21 Jan 2024 02:47 PM
சென்னை: "ராமர் சிலை நிறுவப்படுவதை முன்னிட்டு, தமிழகத்தில் கோயில் நிர்வாகம் சார்பிலோ, பொதுமக்கள் சார்பிலோ, எந்த நிகழ்ச்சியும் நடத்தக் கூடாது என்றும், பொதுமக்கள் கண்டுகளிக்க பெரிய திரை வாயிலாக நேரடி ஒளிபரப்பு செய்யக் கூடாது என்றும் காவல்துறையினர் தடுப்பதாகவும் கூறப்படுகிறது.மாதம் ஒருமுறை இந்து மத மக்களைச் சீண்டிப் பார்க்கும் அற்பச் செயல்பாடுகளை திமுக கைவிட வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்" என்று பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் தனது எக்ஸ் தளத்தில், “நாளைய தினம் அயோத்தியில் ராமர் திருவுருவச் சிலை, பிரதமர் நரேந்திர மோடியால், பிரதிஷ்டை செய்யப்படுவதை அடுத்து, நாடே விழாக்கோலம் பூண்டுள்ளது. சாதி மத வேறுபாடின்றி, மக்கள் அனைவரும் இந்த புண்ணிய தினத்தை வரவேற்கின்றனர். பல ஆண்டு காலமாக நாட்டு மக்கள் அனைவரும் எதிர்பார்த்துக் கொண்டிருந்த இந்த நாளை முன்னிட்டு, நாடு முழுவதும் உள்ள ஆலயங்கள் அனைத்திலும் சிறப்புப் பூஜைகளும், அன்னதானம் உள்ளிட்ட அறப்பணிகளும் நடைபெற்று வருகின்றன.
இந்த நிலையில், மதச்சார்பற்ற அரசு நடத்துகிறோம் என்ற பெயரில் இந்துமத விரோதச் செயல்பாடுகளையே முழு வேலையாகக் கொண்டிருக்கும் திமுக அரசு, தமிழக ஆலயங்களில் சிறப்புப் பூஜைகளுக்கும் அன்னதானத்துக்கும் தடை விதித்துள்ளதாகத் தெரிகிறது. ஆலய நடைமுறைகளில் தலையிட திமுக அரசுக்கு என்ன உரிமை இருக்கிறது? அதுமட்டுமின்றி, ராமர் சிலை நிறுவப்படுவதை முன்னிட்டு, தமிழகத்தில் கோயில் நிர்வாகம் சார்பிலோ, பொதுமக்கள் சார்பிலோ, எந்த நிகழ்ச்சியும் நடத்தக் கூடாது என்றும், பொதுமக்கள் கண்டுகளிக்க பெரிய திரை வாயிலாக நேரடி ஒளிபரப்பு செய்யக் கூடாது என்றும் காவல்துறையினர் தடுப்பதாகவும் கூறப்படுகிறது.
தமிழகக் கோயில்கள் பக்தர்களுக்குச் சொந்தமானவை. ஆலய நடைமுறைகளில் தேவையில்லாமல் தலையிடவோ, வழிபடும் முறைகளில் குறுக்கிடவோ திமுக அரசுக்கு எந்த உரிமையுமில்லை என்பதை நினைவுபடுத்த விரும்புகிறேன். இந்து மத மக்களின் அடிப்படை உரிமையான ஆலய வழிபாட்டைத் தடுப்பதை, மாற்று மத மக்களே விரும்ப மாட்டார்கள். யாரை திருப்திபடுத்த இந்த பிரிவினை முயற்சியில் ஈடுபடுகிறது திமுக அரசு?
மாதம் ஒருமுறை இந்து மத மக்களைச் சீண்டிப் பார்க்கும் அற்பச் செயல்பாடுகளை திமுக கைவிட வேண்டும் என்று வலியுறுத்துகிறேன். திமுகவின் தடையை மீறி, அயோத்தி ராமர் கோயில் விழாவுக்காக, தமிழகக் கோயில்களில் சிறப்பு பூஜைகளும், அன்னதானம் உள்ளிட்ட அறப்பணிகளும் தொடரும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்" என்று அவர் பதிவிட்டுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Loading comments...