Published : 21 Jan 2024 01:07 PM
Last Updated : 21 Jan 2024 01:07 PM
ராமேஸ்வரம்: “சென்னையில் உற்பத்தியாகக்கூடிய குப்பைகளில் வெறும் 12 சதவீத குப்பைகள் மட்டும்தான், வெளியே எடுத்துச் செல்லப்பட்டு, ஓர் இடத்தில் கொட்டப்படுகிறது. 88 சதவீத குப்பைகள் சென்னையில் அப்படியே போட்டுவிடுகின்றனர். சென்னையை குப்பை நகரமாக மாற்றியதுதான், திமுகவின் சாதனை” என்று பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.
ராமேஸ்வரத்தில் உள்ள கோயிலில் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை இன்று தூய்மைப் பணியில் ஈடுபட்டார். பின்னர்,செய்தியாளர்களைச் சந்தித்த அவர், “அயோத்தி ராமர் கோயில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு, பிரதமரின் அந்த 11 நாள் விரதத்தின், கடைசி நாட்களில் அவர் தமிழகம் வந்திருப்பது சிறப்பானது. குறிப்பாக ஸ்ரீரங்கம், ராமநாதசுவாமி கோயில், அரிச்சல்முனை, தனுஷ்கோடி, கோதண்டராமர் சுவாமி கோயில் வருகை குறிப்பிடத்தக்கது.
பிரதமரின் தவத்தினுடைய வேள்வி நிச்சயமாக தமிழக மக்களை, பாரத மக்களை வளம் பெறச் செய்யும் என்ற நம்பிக்கை எங்களுக்கு இருக்கிறது. பிரதமருக்கு ராமநாதபுரம் மக்கள் உற்சாகமான வரவேற்பு கொடுத்தனர். நேற்று, பஜனைகள், கீர்த்தனைகள், கம்பர் மண்டபத்தில் கம்ப ராமாயணத்தைக் கேட்டார். 13-வது நூற்றாண்டில், எந்த மண்டபத்தில் கம்பர் கம்பராமாயணத்தை இயற்றினாரோ, அதே மண்டபத்தில் ஒரு பிரதமர் கம்ப ராமாயணத்தைக் கேட்டு நம்முடைய தமிழக மக்களின் கலாச்சாரத்தையும், மேன்மையையும் உயர்த்தியிருக்கிறார்" என்றார்.
மேலும் கோயில் தூய்மைப்பணிகள் குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர், “சென்னையில் உற்பத்தியாகக்கூடிய குப்பைகளில் வெறும் 12 சதவீத குப்பைகள் மட்டும்தான், வெளியே எடுத்துச் செல்லப்பட்டு, ஓர் இடத்தில் கொட்டப்படுகிறது. குப்பைகளை தூய்மைப்படுத்துவதற்கு என்று ஒருமுறை உள்ளது. ஆனால், 88 சதவீத குப்பைகள் சென்னையில் அப்படியே போட்டுவிடுகின்றனர். இதற்கு அமைச்சர் சேகர்பாபு என்ன பதில் கூறுவார். சென்னையை குப்பை நகரமாக மாற்றியதுதான், திமுகவின் சாதனை. தூய்மை நகரங்களின் பட்டியலில் இன்று திருச்சி 112-வது இடத்தில் இருக்கிறது. ஸ்ரீரங்கத்தில் ஆளுநர் தூய்மைப்பணியில் ஈடுபட்டார். அனைத்து கோயில்களிலும் தூய்மைப்பணிகள் நடைபெற்றது. கோயில்களை தூய்மைப்படுத்துவது என்பதை திமுகவை குறைகூறுவதுபோல் பார்க்க வேண்டாம் என அமைச்சர் சேகர்பாபுவுக்கு கூறிக்கொள்கிறேன். கோயில் என்பது மக்களின் சொத்து, பொதுச் சொத்து. மக்களின் பொதுச் சொத்தை மக்களே வந்து சுத்தப்படுத்துகின்றனர். நாங்கள் இதை அரசியலாகப் பார்க்கவில்லை” என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT