Published : 21 Jan 2024 11:00 AM
Last Updated : 21 Jan 2024 11:00 AM
தனுஷ்கோடி: ராமேஸ்வரத்தில் இருந்து தனுஷ்கோடி சென்றடைந்த பிரதமர் மோடி அங்குள்ள அரிச்சல்முனை கடற்கரையில் மலர்களை தூவி வழிபாடு செய்தார். பின்னர் கோதரண்டராமர் கோயிலில் சிறப்புப் பூஜைகளில் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தார்.
அயோத்தி ராமர் கோயில் திறப்பு விழா 22-ம் தேதி நடைபெறுகிறது. இதையொட்டி பிரதமர் நரேந்திர மோடி 11 நாட்கள் விரதம் இருந்து வருகிறார். மேலும், பல்வேறு ஆன்மிக தலங்களுக்கும் சென்று வழிபாடு நடத்தி வருகிறார். அந்த வகையில் தமிழகத்துக்கு 3 நாள் பயணமாக பிரதமர் நேற்று (ஜன.19) மாலை பெங்களூருவில் இருந்து சென்னை வந்தார். பின்னர் நேரு உள்விளையாட்டு அரங்கில் கேலோ இந்தியா விளையாட்டுப் போட்டிகளை தொடங்கி வைத்தார். இரவில் ஆளுநர் மாளிகையில் தங்கினார்.
பயணத்தின் இரண்டாம் நாளில் சென்னையிலிருந்து ஸ்ரீரங்கம் சென்ற அவர், அங்கு ரங்கநாதர் கோயிலில் சாமி தரிசனம் செய்தார். பின்னர் அங்கிருந்து நேற்று ராமேஸ்வரம் சென்ற அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. ராமேசுவரம் ராமநாத சுவாமி கோயிலில் உள்ள 22 தீர்த்த கிணறுகளில் பிரதமர் மோடி புனித நீராடினார். கோயில் சார்பில் பூரண கும்ப மரியாதை செய்து பிரதமருக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது.
இந்த நிலையில், இன்று (ஜன.21) ராமேஸ்வரத்தில் இருந்து தனுஷ்கோடி சென்றடைந்தார் பிரதமர் மோடி. அங்குள்ள கடற்கரையில் மலர்கள், துளசி இலைகளை தூவி வழிபாடு செய்தார். பின்னர் அங்கு நாற்காலியில் அமர்ந்து சிறிது நேரம் தியானம் செய்த அவர், அங்குள்ள புனித ஸ்தூபிக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
அரிச்சல்முனை கடற்கரையில் இருந்துதான் இலங்கைக்கு ராமர் பாலம் கட்டப்பட்டதாக ராமாயணத்தில் கூறப்பட்டுள்ளது. நாளை அயோத்தியில் ராமர் கோயில் கும்பாபிஷேகம் நடைபெற உள்ள நிலையில், பிரதமர் மோடி அரிச்சல்முனை சென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
#WATCH | Tamil Nadu: Prime Minister Narendra Modi visits Arichal Munai point in Dhanushkodi, which is said to be the place from where the Ram Setu was built. pic.twitter.com/GGFRwdhwSH
— ANI (@ANI) January 21, 2024
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT