Published : 21 Jan 2024 11:02 AM
Last Updated : 21 Jan 2024 11:02 AM
பண்டிகைக் கால கட்டண உயர்வு, போக்குவரத்து நெரிசலைத் தவிர்த்து பயணத்தை இனிமையானதாக்க, அரசும், தனியார் நிறுவனங்களும், மக்களும் இணைந்து செய்ய வேண்டியது என்ன?
பண்டிகைக் காலம் நெருங்கிவிட்டால் மக்கள் மனதில் மகிழ்ச்சி குடிகொண்டு விடும். ஆனால் தமிழகத்தில், அதுவும் சென்னை போன்ற பெருநகரத்தில் வசிக்கும் வேறு மாவட்ட மக்களின் மனது பதற்றமடையத் தொடங்கி விடும். அவர்களது பெரும் பிரச்சினையே பயணம்தான். சொந்த ஊருக்குச் செல்லும் ஆர்வத்தையும் மகிழ்ச்சியையும் இந்தக் கடினமான துயர்மிகு பயணம் சிதைத்து விடுகிறது.
பண்டிக்கை, தொடர் விடுமுறைக் காலங்களில், ஆம்னி பஸ்கள் போட்டி போட்டுக் கொண்டு அதிகக் கட்டணத்தை நிர்ணயிக்கின்றன. இரு மடங்குக்கு மேல் கட்டணம் செலுத்தி, டிக்கெட் புக் செய்து விட்டால் மட்டும் பயணம் அவ்வளவு எளிதாகி விடுவதில்லை. போக்குவரத்து நெரிசலில் சிக்கித் தவித்து, பல மணி நேரம் பஸ்சில் சிறை பட்டு, சிட்டியைக் கடக்க வேண்டி இருக்கிறது.
இந்தப் பிரச்சினைகள் பல ஆண்டுகளாகத் தொடர்கின்றன. கடந்த வாரமும் பொங்கல் பண்டிகையின்போது இதே நிலையைக் காண முடிந்தது. ஆனால் அதை அரசால் ஏன் சரிசெய்ய இயல்வதில்லை. பண்டிகையைப் போலவே பண்டிகைக் காலப் பயணத்தையும் இனிமையானதாக்க, அரசும் – தனியார் நிறுவனங்களும் – மக்களும் இணைந்து செய்ய வேண்டியது என்ன?
தமிழகத்தின் மக்கள் தொகையில், 7-ல் ஒரு பங்கு மக்கள், சென்னையில் மட்டுமே வசிக்கின்றனர். கிட்டத்தட்ட ஒரு கோடிக்கும் அதிகமானோர் சென்னை பெருநகரில் மையமிட்டுள்ளனர். இவர்களில் பெரும்பாலானோர் வெளி மாவட்டங்களைச் சேர்ந்தவர்களே. இவர்கள் வேலை மற்றும் தொழிலுக்காகச் சென்னையில் தங்கியுள்ளனர். இவர்கள், வார இறுதி, தொடர் விடுமுறை, பண்டிகை நாட்களில் சொந்த ஊர்களுக்குச் சென்று திரும்புகின்றனர். தீபாவளி, பொங்கல் போன்ற பண்டிகை நாட்களில் கட்டாயமாக அனைவரும் சொந்த ஊர்களுக்குப் பயணிக்கின்றனர்.
இந்த ஆண்டு பொங்கலுக்கு 5 நாட்கள் தொடர் விடுமுறை கிடைத்ததால், கடந்த வெள்ளிக்கிழமை மட்டும், பொதுப் போக்குவரத்தில் மட்டும், சென்னையிலிருந்து 6.5 லட்சம் மக்கள் வெளியூர்களுக்குப் பயணித்துள்ளனர். அதில் 50% பேர் பேருந்துகளைப் பயன்படுத்தியுள்ளனர். அரசு பேருந்துகளில் இடம் கிடைக்காத நிலையில், தனியார் பேருந்துகளை மக்கள் நம்பியிருக்கின்றனர். அதுமட்டும் காரணமில்லை, தனியார் பேருந்துகளின் மீதான கவர்ச்சி, எளிய புக்கிங் வசதிகள், பயண வசதிகள் என்னும் அடிப்படையில் தங்கள் பயணங்களைத் தனியார் பேருந்துகளை நோக்கித் திருப்புகின்றனர்.
கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் தீபாவளி நேரத்தில் அதிகக் கட்டணம் வசூலிப்பதாகப் புகார் வந்ததையடுத்து, பல்வேறு ஆம்னி பேருந்துகளில் சோதனை நடத்தப்பட்டது. அதில், அதிகக் கட்டணம் வசூல் செய்தது, வரி செலுத்தாதது என பல காரணங்களுக்காக சுமார் 120 பேருந்துகளை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். நூற்றுக்கணக்கான பேருந்துகளுக்கு 37 லட்சம் ரூபாய் வரை அபராதமும் விதிக்கப்பட்டது.
இதனைக் கண்டித்து தென்மாநில ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்கம் போராட்டத்தை நடத்தியது. அதன்பின் அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்திய அரசு, தனியார் பேருந்துகளுக்கான கட்டணத்தை நிர்ணியத்தது. இதனை எதிர்க்கட்சியினர் கடுமையாக விமர்சித்திருந்தனர். குறிப்பாக, அதிகபட்ச கட்டணம் விமான கட்டணத்தை விட அதிகம் என விமர்சித்திருந்தனர்.
ஆனால், அரசு எந்தவித பதிலும் தெரிவிக்கவில்லை. இதனால், இந்தப் பொங்கலுக்கும் அதிக தொகையில் தனியார் பேருந்து பயணத்தைத் தொடர்ந்தன. சாதாரண நாட்களில் ரூ.945 என இருக்கும் கட்டணம், தற்போது ரூ.2,500 – 3,000 வரை என இரண்டு மடங்கு அதிகமாகவுள்ளது. பிழைப்பைத் தேடி வந்து சொந்த ஊர்களுக்கு திருப்பும் மக்கள், பயணத்துக்காகவே பாதி சம்பளத்தை செலவிட வேண்டியுள்ளது.
அரசு தொழிலாளர்கள் போராட்டம் நடத்தினால், அதனை எப்படி ஒடுக்க வேண்டுமென சிந்திக்கும் அரசு, ஆம்னி சங்கங்களின் போராட்டத்தை பேச்சுவார்த்தையில் அவர்களுக்கு சாதகமாக ஏன் முடித்துவைக்கிறது என்னும் குற்றச்சாட்டு முன்வைக்கப்படுகிறது. அரசால், கட்டணத்தைக் குறைத்து ஆம்னி பேருந்துகளை இயக்க சொல்ல அரசால் ஏன் முடியவில்லை என்னும் கேள்வி எழுப்பப்படுகிறது. மக்களின் தேவை அதிகரிக்கும்போது விலையை அதிகரித்து வசூலிப்பது முறையற்ற செயல் என்னும் கண்டனங்கள் வாடிகையாகிவிட்டன.
சென்னையிலிருந்து பண்டிகை நாட்களில் வெளியேறும் மக்கள் தொகை மட்டும் தோராயமாக 30 லட்சம் என சொல்லப்படுகிறது. ஒரே நேரத்தில் நகரத்தைவிட்டு வெளியேறுவதால் போக்குவரத்து நெரிசலும் ஏற்படுகிறது. சென்னையிலிருந்து தென் மாவட்டங்களை உள்ளடைக்கிய 22 ஊர்களுக்கு செல்ல சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலை வழியாக மட்டும்தான் வெளியேற முடியும். இந்த சாலையைக் கடக்க சாதாரண நாட்களில் 7-8 மணி நேரம் ஆகும் நிலையில், இந்தப் பொங்கல் நேரத்தில் 12-13 மணி நேரம் கால தாமதம் ஆகியுள்ளது.
நகரத்துக்குள் ஏற்படும் போக்குவரத்து நெரிசலைத் தவிர்க்க கிளப்பாக்கத்தில் புது பேருந்து முனையம் திறக்கப்பட்டுள்ளது. எனினும், நெடுஞ்சாலைப் பகுதியில் நிலவும் போக்குவரத்து நெரிசல் காரணமாக பேருந்துகள் திரும்ப முடியாமல் பயணம் நேரம் அதிகரிக்கிறது. பொது பேருந்துகளுக்காக மக்கள் 6 மணிநேரம் காத்திருக்க வேண்டிய சூழல் உருவாகியிருக்கிறது. மேலும், ஓட்டுநர்கள், நடத்துனர்கள் 20 மணிநேரம் தொடர்ந்து பேருந்தை இயக்க வேண்டிய சூழலும் உருவானது.
இதனை தவிர்க்க அரசு என்ன நடவடிக்கை எடுக்கலாம்?
1. இதைத் தடுக்க அரசு போக்குவரத்து எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும். பொங்கல் பண்டிகை முன்னிட்டு 12 முதல் 14 ஆகிய தேதிகளில் 2100 பேருந்துகள் மற்றும் 1514 சிறப்புப் பேருந்துகளும் இயக்கப்பட்டன. இதில், போக்குவரத்து தரவுகள்படி 6.5 லட்சம் மக்கள் அரசு பேருந்துகளில் பயணித்து சொந்த ஊர்களுக்கு திரும்பியுள்ளனர். ஆனால், நம்மிடம் பேசிய சமூக ஆர்வலர்கள் சிலர், பொதுவாகப் பண்டிகை நாட்களில் தோராயமாக 30 லட்சம் பேர் சென்னையில் இருந்து சொந்த ஊர்களுக்கு செல்கிறார்கள். அரசு பேருந்துகளில், பயணித்தவர்கள் வெறும் கடுகளவு தான்.
எனவே, அரசுப் பேருந்துகள் எண்ணிக்கை அதிகரித்தால், தனியார் பேருந்து தேவை குறையும், அரசுக்கு வருவாய் கிடைக்கும், சொந்த வாகனத்தைக் கைவிட்டு விட்டு மக்கள் அரசு போக்குவரத்தைப் பயன்படுத்துவார்கள். இதனால், போக்குவரத்து நெரிசலும் குறையும். (உதாரணம்: 5 பேர் செல்ல 1 கார் தேவைப்படும். ஆனால், 50 பேர் வரை ஒரு பேருந்தில் செல்லலாம். கார்களால் ஏற்படும் போக்குவரத்து நெரிசலும் குறையும்.)
2. கோவிட் காலத்தில் ஐ.டி போன்ற தனியார் நிறுவனங்கள் வீட்டிலிருந்து பணியாற்றும் வாய்ப்பை பணியாளர்களுக்கு வழங்கின. அதேபோல், பண்டிகை நாட்களுக்கு ஒரு வாரத்திற்கு முன்பாக, தனியார் ஊழியர்களுக்கு ஒர்க்ஃப்ரம் ஹோம் கொடுத்துவிட்டால் பண்டிகை நாட்கள் நெருங்கும் வேளையில் போக்குவரத்து நெரிசல் குறையலாம். ஆனால், இதனை தனியார் நிறுவனங்கள் கருத்தில்கொள்ளுமா? அரசு பேச்சுவார்த்தை நடத்தி இதனை நடைமுறைப்படுத்தும் வாய்ப்புகள் பற்றி ஆராயலாம்.
3. மிகுந்த போக்குவரத்து நெரிசல் ஏற்படும்போது, DIVERT LINE உருவாக்கலாம். மாற்று பாதையில் வாகனங்களை திருப்பிவிடலாம். பெருநகரமாக வளர்ந்துவிட்ட சென்னைக்கு நாள்தோறும் பல ஊர்களிலிருந்து வேலைக்காக வருகின்றனர். இந்த மக்கள் தொகையைக் கட்டுக்குள்ளோ, குறைப்பதோ சாத்தியமற்றது. எனவே, அவர்களின் பயணத்தை எளிதாக்க அரசு தீவிரமாக முயற்சி எடுக்க வேண்டும். பண்டிகை காலங்களில் போக்குவரத்தும் பயணமும் பேசுபொருளாக மாறுவது வாடிக்கையாகிவிட்டது. இந்த விமர்சனங்களைத் தவிர்க்க அரசு துரிதமான நடவடிக்கை எடுக்க வேண்டும்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT