Published : 21 Jan 2024 09:02 AM
Last Updated : 21 Jan 2024 09:02 AM
கோவை: கோவை மாவட்டத்தில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு கணிசமாக அதிகரித்துள்ளது. நேற்று முன்தினம் ஒரே நாளில் டெங்கு பரவலுக்கு காரணமாக இருந்த 12 பேருக்கு சுகாதாரத் துறை சார்பில் நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது.
ஆண்டு தோறும் பருவ மழை காலங்களில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு அதிகரித்து காணப்படும். இதனால் வீடு, தொழில் நிறுவனங்கள் உள்ளிட்ட பல இடங்களில் திறந்த வெளியில் பல நாட்கள் தேங்கியுள்ள தண்ணீரில் டெங்கு காய்ச்சலை ஏற்படும் ‘ஏடீஸ்’ கொசுக்கள் அதிக எண்ணிக்கையில் உற்பத்தியாகி பாதிப்பை ஏற்படுத்தும். பச்சிளம் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைத்து வயதினரையும் டெங்கு பாதிக்க வாய்ப்பு உள்ளது.
கோவை மாவட்டத்தில் தற்போது டெங்கு காய்ச்சல் பரவல் அதிகரித்து காணப்படுகிறது. நூற்றுக் கணக்கானோர் பாதிக்கப் பட்டுள்ளனர். சுகாதாரத் துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து டெங்கு காய்ச்சல் பரவலை கட்டுப் படுத்த வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர். காய்ச்சல் பாதிப்பு தீவிமடையும் முன் சுகாதாரத் துறை அதிகாரிகள் துரிதமாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி உள்ளனர்.
இது தொடர்பாக, சுகாதாரத் துறை துணை இயக்குநர் டாக்டர் அருணா ‘இந்து தமிழ் திசை’ செய்தியாளரிடம் கூறியதாவது: கோவை மாவட்டத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் வெளி நோயாளிகள், உள்நோயாளிகளாக வருவோரின் விவரங்களை தினமும் சேகரித்து கண்காணித்து வருகிறோம். தவிர பல்வேறு இடங்களில் மருத்துவ முகாம்கள் நடத்தப்படுகின்றன. காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்ட முதல் நாளிலேயே மருத்துவரை அணுகி சிகிச்சை மேற்கொள்ள வேண்டும். மருந்தகங்களில் சுயமாக மாத்திரை பெற்று உட் கொண்டு 4 அல்லது 5-வது நாள் மருத்துவமனைக்கு சென்றால் உடல்நிலை மோசமடையும்.
வீடுகளில் தண்ணீர் சேகரிக்கும் குடங்களை ‘ஸ்கிரப்’ போட்டு தேய்த்து கழுவ வேண்டும். தண்ணீர் சேமித்து வைத்துள்ள பாத்திரம், டிரம்களை இறுக மூடி வைக்க வேண்டும். இருள் சூழ்ந்த பகுதிகளில் தான் டெங்கு கொசுக்கள் அமரும். எனவே, வீடுகளில் அதுபோன்ற இடங்களில் துணிகள் உள்ளிட்டவை இல்லாமல் பார்த்து கொள்ள வேண்டும். நொச்சி, துளசி, ஓமவள்ளி உள்ளிட்ட மூலிகை இலைகளை வீடுகளில் வைக்கலாம். வீடுகளில் மரக்கன்று வளர்ப்போர் தண்ணீர் தேங்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.
சிறிய நிறுவனங்களில் டயர், ஸ்கிராப் பொருட்கள் உள்ள பகுதிகளை கண்காணித்து தூய்மையாக வைக்க வேண்டும். டெங்கு கொசுக்கள் கால்களுக்கு கீழ் பகுதியில் தான் அதிகம் கடிக்கும். எனவே, அந்த பகுதிகளை மறைக்கும் வகையில் ஆடைகளை உடுத்தலாம். கோவை மாவட்டத்தில் ஜனவரி 20-ம் தேதி வரை 16 பேர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப் பட்டுள்ளனர். காய்ச்சலால் பாதிக்கப்பட்ட 50-க்கும் மேற்பட்டோருக்கு டெங்கு பாதிப்பு இருக்கும் என சந்தேகிக்கும் நிலையில் கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.
சுகாதாரத் துறை சார்பில் தொடர்ந்து விழிப்புணர்வு மற்றும் தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப் படுகின்றன. நேற்று முன்தினம் ஒரே நாளில் டெங்கு பாதிப்புக்கு காரணமாக விளங்கிய வீடு மற்றும் தொழில் நிறுவனங்களை சேர்ந்த 12 பேருக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது. டெங்கு பாதிப்பை குறைக்க மக்கள் ஒத்துழைப்பு அவசியம். இவ்வாறு அவர் கூறினார்.
தமிழ்நாடு, புதுச்சேரி, அந்தமான் மற்றும் நிகோபார் குழந்தைகள் மருத்துவர் சங்கத்தின் தலைவர் டாக்டர். ராஜேந்திரன் கூறியதாவது: டெங்கு காய்ச்சல் மூன்று வகைப்படும். காய்ச்சல் நிலை, தீவிர நிலை, குணமாகும் நிலை. முதல் நிலை 2 முதல் 7 நாட்களுக்கு இருக்கும். இரண்டாம் நிலை 3 முதல் 7 நாட்களுக்கு இருக்கும். ரத்த தட்டணுக்கள் எண்ணிக்கை குறைந்து காணப்படும். ரத்த கசிவு ஏற்பட்டு அதிக ரத்தம் வெளியேறும். இதனால் உடலுறுப்புகள் பாதிக்கப்பட்டு உயிரிழக்கவும் நேரிடலாம்.
மூன்றாம் நிலையில் முறையான சிகிச்சையால் அறிகுறிகள் குறையும். ரத்த தட்டணுக்களின் எண்ணிக்கை அதிகரிக்க தொடங்கும். நீர் மற்றும் நீர்ச்சத்து அதிகம் உள்ள பழச்சாறு, இளநீர், ஓஆர்எஸ், உணவு எடுத்துக் கொள்ள வேண்டும். நன்றாக ஓய்வெடுக்க வேண்டும். டெங்கு கொசுக்கள் சூரிய உதயத்தில் இருந்து 2 மணி நேரம் வரை மற்றும் சூரியன் மறையும் மாலை வேளைகளில் கடிக்கும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
கட்டுமான பகுதிகளில் உருவாகும் கொசுக்கள்: சுகாதாரத்துறை துணை இயக்குநர் டாக்டர் அருணா கூறும் போது, “டெங்கு காய்ச்சல் ஏற்படுத்தும் கொசுக்கள் 500 மீட்டர் வரை பறக்கும் தன்மை கொண்டவை. இதை கருத்தில் கொண்டு பாதிப்பு ஏற்படும் சுற்றுப்புற பகுதிகளில் தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. கோவை மாவட்டத்தில் கட்டுமான பணிகள் நடைபெறும் இடங்கள் டெங்கு கொசுக்களுக்கு புகழிடமாக திகழ்கின்றன.
கான்கிரீட் தளம் அமைக்க பல நாட்கள் தண்ணீரை தேக்கி வைத்தல் மட்டுமின்றி, சிமென்ட் மிக்ஸ் செய்ய உதவும் வாகன டிரம்களை, பணி முடித்த பின் தரையை நோக்கியபடி வைக்காமல் வானத்தை நோக்கியபடி வைப்பதும் டெங்கு கொசு உற்பத்தியாக காரணமாகிறது. கட்டுமான பணிகளை மேற்கொள்வோர் மிகுந்த விழிப்புணர்வுடன் செயல்பட வேண்டும்” என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT