Published : 21 Jan 2024 04:00 AM
Last Updated : 21 Jan 2024 04:00 AM

காலி மதுபாட்டிலுக்கு ரூ.10 வழங்கும் திட்டத்துக்கு எதிர்ப்பு - டாஸ்மாக் ஊழியர்கள் போராட்டம் @ தருமபுரி

தருமபுரியை அடுத்த தடங்கம் பகுதியில் உள்ள டாஸ்மாக் மாவட்ட கிடங்கு முன்பு திரண்டு போராட்டத்தில் ஈடுபட்ட டாஸ்மாக் கடை பணியாளர்கள்.

தருமபுரி / அரூர்: காலி மது பாட்டில்களை திருப்பி கொடுத்தால் ரூ.10 வழங்கும் திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து தருமபுரி மாவட்டத்தில் டாஸ்மாக் விற்பனையாளர்கள் நேற்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தருமபுரி மாவட்டத்தில் செயல்படும் 64 டாஸ்மாக் கடைகளிலும் மதுபானங்கள் வாங்கும் போது ஒவ்வொரு பாட்டில் மீதும் வாடிக்கையாளர்கள் ரூ.10 கூடுதலாக செலுத்த வேண்டும் என்றும், மது அருந்திய பிறகு காலி பாட்டிலை அதே கடையில் கொடுத்தால், கூடுதலாக செலுத்திய ரூ.10 திரும்பப் பெற்றுக் கொள்ளலாம் என்றும் மாவட்ட டாஸ்மாக் நிர்வாகம் அறிவித்துள்ளது. நேற்று முன்தினம் ( 19-ம் தேதி ) முதல் இந்த நடைமுறை அமலுக்கு வந்துள்ளது.

இந்த நடவடிக்கைக்கு டாஸ்மாக் விற்பனையாளர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதனால், நேற்று டாஸ்மாக் கடைகளை திறக்க மறுத்து, தருமபுரி அடுத்த தடங்கம் பகுதியில் அமைந்துள்ள டாஸ்மாக் மாவட்ட கிடங்கு வளாகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இது குறித்து விற்பனையாளர்கள் கூறியதாவது; மது பான பாட்டில்களை வாங்கிய அதே நாளில் அதே கடையில் வாடிக்கையாளர்கள் திருப்பிக் கொடுத்து ரூ.10 பெற்றுக் கொள்ள வேண்டும். இது தொடர்பாக வாடிக்கையாளர்களுடன் தேவையற்ற மோதல் ஏற்படுகிறது. மேலும், மது பாட்டில்கள் மீது இதற்காக ஸ்டிக்கர் ஒட்டுவது, மார்க்கர் பேனா மூலம் குறியிடுவது போன்ற பணிகளை மேற்கொள்ள வேண்டியுள்ளது.

அரூரில் உள்ள மதுபானக்கடை நேற்று பிற்பகல் 1.30 மணிவரை திறக்கப்படாததால் கடை முன்பு நீண்ட வரிசையில் காத்திருந்த மது அருந்துவோர்.

இது தவிர, காலி பாட்டில்களை வாங்கி இருப்பு வைக்க போதிய இட வசதி, ஆள் பற்றாக் குறை பிரச்சினையும் உள்ளது. இதற்கான வசதிகளை செய்து தராமல் இந்த நடைமுறையை பின்பற்றும் படி கூறுவதை ஏற்க முடியாது. இப்பிரச்சினைக்கு தீர்வு ஏற்படும் வரை பணிக்கு செல்ல மாட்டோம், என்றனர்.

டாஸ்மாக் பணியாளர்கள் கடைகளை திறக்க மறுத்து போராட்டத்தில் ஈடுபட்டதால் மாவட்டத்தில் உள்ள டாஸ்மாக் கடைகளின் முன்பு வாடிக்கையாளர்கள் காத்திருக்கத் தொடங்கினர். மேலும், ரோந்துப் பணியில் ஈடுபட்ட போலீஸாரிடம் அவர்கள் வாக்குவாதத்திலும் ஈடுபட்டனர். இதனால், டாஸ்மாக் கடைகள் முன்பு பரபரப்பு ஏற்பட்டது. இதற்கிடையில், டாஸ்மாக் அதிகாரிகள் பணியாளர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.

10 நாட்களுக்குள் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளிக்கப்பட்ட நிலையில் மதியம் 1 மணிக்கு பின்னர் டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டன. அரூரில் வாக்குவாதம்: இந்த திட்டத்துக்கு அரூர் பகுதியைச் சேர்ந்த மது அருந்துவோர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். ஏற்கெனவே ஒரு பாட்டிலுக்கு ரூ.5 முதல் ரூ.10 வரை கூடுதலாக விற்கும் நிலையில் தற்போது மேலும் ரூ.10 வழங்க வேண்டுமா எனக் கூறி எதிர்ப்பு தெரிவித்தனர்.

இதனிடையே, அரூர் பகுதியிலுள்ள டாஸ்மாக் கடைகளுக்கு நேற்று வழக்கம் போல் மது வாங்க வந்தவர்கள் விற்பனையாளர்கள் கடையை திறக்காமல் போராட்டத்தில் ஈடுபட்டதால் அவர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து டாஸ்மாக் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தியதையடுத்து மதியம் 1.30 மணிக்கு பின்னர் டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டு வழக்கமான விலையிலேயே மது விற்பனை தொடங்கியது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x