Published : 20 Jan 2024 01:30 PM
Last Updated : 20 Jan 2024 01:30 PM

மதுரை கலைஞர் நூலகத்தில் 4.50 லட்சம் புத்தகங்களை பராமரிக்க 30 நூலகர்கள் போதுமா?

வாசகர்களுடன் நிரம்பி வழியும் கலைஞர் நூலகத்தின் ஒரு பிரிவு

மதுரை: முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு அவரது நினைவைப் போற்றும் வகையில் மதுரையில் கடந்த ஆண்டு ஜூலையில் கலைஞர் நூற்றாண்டு நூலகத்தை முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார்.

ரூ.215 கோடியில் 3.56 ஏக்கர் பரப்பளவில் 2 லட்சத்து 13 ஆயிரம் சதுர அடியில் கீழ்தளம், தரைத்தளம் மற்றும் 6 தளங்களுடன் இந்த பிரம்மாண்ட நூலகம் அமைக்கப்பட்டது. இந்த நூலகத்துக்கு தினமும் 2 ஆயிரம் பேர் வந்து செல்கின்றனர். 4.50 லட்சம்புத்தகங்கள் உள்ளன. ஆனால், இந்த நூலகத்தைப் பராமரிக்கவும், வாசகர்களைக் கண்காணித்து ஒழுங்குபடுத்தவும் 30 நூலகர்கள் மட்டுமே உள்ளனர். இந்த நூலகத்துக்கு 72 முதல் 90 நூலகர்கள் வரை தேவைப்படுகின்றனர். போதுமான நூலகர்கள் இல்லாமல் கலைஞர் நூலகம் தடுமாறிக் கொண்டிருப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இதுகுறித்து கலைஞர் நூலகத்தில் பணிபுரியும் நூலகர்கள் கூறியதாவது:

கலைஞர்நூலகத்தில் துறை வாரியாக நூல்களை (dewey decimal system) அடுக்கிவைக்கும் முறையில் புத்தகங்களின் பகுப்பை 10 பாட வரிசையில் அடுக்கி வைக்கப்பட்டு வாசகர்களின் பாட விருப்பத்தைப் பூர்த்தி செய்வதோடு நேரமும் மிச்சப்படுத்தப்பட்டுள்ளது. பொறியியல், விவசாயம், கணிதம், வேதியியல், இயற்பியல், கணினி, பொருளியல், வரலாறு, புவியியல் என உலகில் இருக்கும் அனைத்துப் பாடப்பிரிவு புத்தகங் களும் உள்ளன. இவ்வளவு புத்தகங்கள் சென்னைஅண்ணா நூற்றாண்டு நூலகத்தில்கூட இல்லை. அதுபோல், உயர் நீதிமன்றத்தில் பல்வேறு வழக்குகளில் அபராதம் விதிக்கப்படும்போது அந்தத்தொகைக்கு அந்த நபர்களை நூலகத்துக்குப் புத்தகங்கள் வாங்கிக் கொடுக்க உத்தரவிடப்படுகிறது. அப்படி வரும் புத்தகங்களை வைப்பதற்கு நீதிமன்ற நூலகப் பிரிவும் தனியாகச் செயல்படுகிறது.

குழந்தைகள் பிரிவு, செய்தித்தாள்கள், வார இதழ்கள் படிப்பதற்கு தனிப்பிரிவு, கலைஞர் எழுதிய புத்தகங்கள் பிரிவு, குழந்தைகள் நிகழ்ச்சிகளுக்கான அரங்கம், சிறார் அறிவியல் பூங்கா, ஆங்கில நூல்கள் பிரிவு, போட்டித் தேர்வுகள் பிரிவு, அரிய நூல்கள் பிரிவு, மின்னூலகம், பல்லுடகப்பிரிவு, நிர்வாகப்பிரிவு என 6 தளங்களில் பல்வகை பிரிவுகள் செயல்படுகின்றன.

கலைஞர் நூலகத்தின் பிரம்மாண்ட தோற்றம். படம்; எஸ். கிருஷ்ணமூர்த்தி

இவ்வளவு நூலகப் பிரிவுகளையும், வாசகர்களையும் அன்றாடம் கண்காணிக்க வேண்டிய பொறுப்புடன் 4 லட்சத்து 50 ஆயிரம் புத்தகங்களையும் பராமரிக்க வேண்டும். ஆனால், வெறும் 30 நூலகர்கள் மட்டுமே பணிநியமனம் செய்யப்பட்டுள்ளனர். அவர்களும், சென்னை நூற்றாண்டு நூலகத்தில் இருந்து இடமாற்றம் செய்யப்பட்டவர்கள். அவர்கள் சென்னை மற்றும் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள். இடமாற்றத்தால் மதுரை வந்து பணிபுரிகிறார்கள்.

நூலகர்கள் சாப்பிடுவதற்கு தனி அறை இல்லை. நூலகர்கள் பற்றாக்குறையைச் சமாளிக்க தற்காலிகமாக நூலகத்தைப் பற்றியே தெரியாத பிளஸ் 2, பட்டப்படிப்பு குறிப்பாக பொறியியல் படிப்பு படித்தவர்கள் 30 பேரை ஒப்பந்த ஊதியத்தில் அவுட் சோர்ஸிங் முறையில் பணிநியமனம் செய்யப்பட்டுள்ளனர். இவர்களுக்கு சொற்ப ஊதியமே வழங்கப்படுகிறது.

நூலகம் மற்றும் தகவல் அறிவியல் இளங்கலை படிப்பு (Bachelor of Library and Information Science) படித்தவர்களைத்தான் நூலகர்களாக நியமிக்க வேண்டும்.

ஆனால், ஒரு லட்சம் பேர் நூலகப் படிப்பு படித்து விட்டு வேலைவாய்ப்புக்காக காத்திருக்கும் நிலையில் நூலக அறிவியல் படிக்காதவர்கள் கலைஞர் நூலகத்தில் நியமிக்கப்பட்டுள்ளனர். அவுட் சோர்ஸிங் முறையில் நியமிக்கப்பட்டவர்கள் தகவல் தொழில்நுட்ப அடிப்படையில் எங்களைவிட அறிவார்ந்தவர்களாக இருக்கக் கூடும். ஆனால், அவர்களுக்கு நூலகத்தைப் பற்றியும், நூலகத்தில் உள்ள புத்தகங்களைப் பராமரிப்பது பற்றியும் தெரியவில்லை.

அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் இருந்து நாங்கள் மதுரைக்கு இடமாற்றம் செய்யப்பட்ட பிறகு வந்த முதல் 4 மாதங்கள் முறையாக ஊதியம் வழங்கவில்லை. இம்மாதம்தான் முறையாக ஊதியம் சரியானநேரத்தில் வழங்கப்பட்டுள்ளது. நிர்வாகத்தைக் கவனிக்கதற்போது வரை கலைஞர் நூலகத்துக்கு நிர்வாக அலுவலர் நியமிக்கப்படவில்லை.நூலகர்களைக் கொண்டுநூலக நிர்வாகம் மேற்கொள்ளப்படுகிறது. எங்களுடைய ஊதியத்துக்கு சென்னையில் உள்ள நூலக அதிகாரி கையெழுத்திட்டு மதுரைக்கு அனுப்பிய பிறகே ஊதியம் வழங்கப்படுகிறது. அதற்கு மதுரையில் உள்ள மாவட்ட மைய நூலக அதிகாரியை கையெழுத்திடுமாறு செய்யலாம் அல்லது நிர்வாக அலுவலரை நியமிக்கலாம்.

நூலகப்படிப்பே படிக்காத `அவுட் சோர்ஸிங்' பணியாளர்களைக் கொண்டு தற்போது நூலகம் நடத்தப்படுகிறது. நூலகத்துறை பள்ளிக்கல்வித் துறையின் கட்டுப்பாட்டில் உள்ளதால் அவர்கள் பள்ளிக் கல்வித்துறைக்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுக்கின்றனர்.

நூலகத் துறையும், அதில் பணிபுரியும் நூலகர்களும் மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் நடத்தப்படுகின்றனர்.கலைஞர்நூலகத்தில் உள்ள புத்தகங்கள் மதிப்புமிக்கது என்பதோடு அனைத்தும் விலை அதிகமானது. போது மான நூலகர்கள் இல்லாததால் புத்தகங்களையும் திருப்பி வாங்குவதில் சிக்கல் இருப்பதால் இந்த நூலகத்தில் இன்னும் வாசகர்கள் எடுத்துச் சென்று படிக்கும் நடைமுறை தொடங்கப்படவில்லை.

கலைஞர் நூலகம் மதுரை மக்களுக்குக் கிடைத்த ஒரு அறிவுப் பொக்கிஷம். கலைஞர் நூற்றாண்டில் தமிழக அரசு செய்த மிகப்பெரிய நற்செயல். இந்த அறிவுத் திருக்கோயிலை நல்ல முறையில் பாதுகாக்க, பராமரிக்க போதுமான நூலகர்கள் தேவை.

இவ்வாறு அவர்கள் கூறினர்

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x