Published : 20 Jan 2024 01:20 PM
Last Updated : 20 Jan 2024 01:20 PM

ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் பிரதமர் மோடி சாமி தரிசனம்: ஆண்டாள் யானையிடம் ஆசி பெற்றார்

ஸ்ரீரங்கம்: பிரசித்தி பெற்றதும், 108 வைணவத்தலங்களுள் முதன்மையானதுமான திருச்சி ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் பிரதமர் நரேந்திர மோடி இன்று (சனிக்கிழமை) சாமி தரிசனம் செய்தார். ஸ்ரீரங்கம் கோயிலில் சாமி தரிசனம் செய்த முதல் பிரதமர் மோடி என்பது குறிப்பிடத்தக்கது.

பிரதமர் நரேந்திர மோடி 3 நாள் பயணமாக தமிழகம் வந்துள்ளார். வெள்ளிக்கிழமை மாலை தமிழகம் வந்த பிரதமர், சென்னையில் கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டுப் போட்டிகள் 2023-ன் தொடக்க விழாவில் கலந்து கொண்டு போட்டியை தொடங்கி வைத்தார். தமிழக பயணத்தின் இரண்டாம் நாளான இன்று காலை சென்னையில் இருந்து விமானம் மூலமாக திருச்சி சென்ற பிரதமர், அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலமாக பஞ்சகரை சாலைக்கு சென்று அங்கிருந்து சாலை மார்கமாக ஸ்ரீரங்கம் கோயிலை அடந்தார். அங்கு அவர் முற்பகல் 11 மணி முதல் 12.30 மணி வரை சாமி தாரிசனம் செய்தார்.

பிரதமர் மோடிக்கு பூரண கும்ப மரியாதை

தெற்கு கோபுர வாசல் வழியாக கோயிலுக்குள் நுழைந்த பிரதமருக்கு பூரண கும்பமரியாதை அளிக்கப்பட்டது. தொடர்ந்து கருடாழ்வார் மூலவர் தாயார் உள்ளிட்ட முக்கிய சன்னதிகளிலும், சக்கரத்தாழ்வார், பட்டாபிராமர், கோதண்ட ராமர், ராமானுஜர் சன்னதிகளிலும் சாமி தரிசனம் செய்தார். தொடர்ந்து கோயில் யானை ஆண்டாளிடம் ஆசி பெற்றார். ஆண்டாள் யானை பிரதமருக்கு மவுத் ஆர்கன் வாசித்துக் காண்பித்தது. தொடர்ந்து கம்பர் மண்டபத்தில் அமர்ந்து ராமாயண பாராயணத்தைக் கேட்டார்.

ஸ்ரீரங்கம் கோயில் யானை ஆண்டாளிடம் ஆசி பெறும் பிரதமர் மோடி

சாமி தரிசனத்தின் போது பிரதமர் தமிழ் கலாச்சார உடையான வேஷ்டி சட்டையில் இருந்தார். பிரதமரின் வருகையை ஒட்டி ஸ்ரீரங்கத்தில் 5 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. பிரதமரின் சாமி தரிசனத்தை முன்னிட்டு பகல் 2.30 மணி வரை பொது மக்கள் தரிசனத்துக்கு தடை விதிக்கப்பட்டிருந்தது. சாமி தரிசனத்துக்காக சாலை வழியாக பிரதமர் வந்தபோது சாலைகளின் இரு புறங்களிலும் மக்கள் கூடி நின்று பிரதமருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர். திருச்சியில் சாமி தரிசனத்தை முடித்துக்கொண்ட பிரதமர் மோடி, திருச்சியில் இருந்து விமானம் மூலமாக மதுரைக்குச் சென்று அங்கிருந்து ராமமேஸ்வரம் கோயிலுக்கு சாமி தரிசனத்துக்கு செல்கிறார்.

வரவேற்பு அளித்த பொதுமக்களைப் பார்த்து கையசைத்தபடி சென்ற பிரதமர் மோடி

அயோத்தியில் கட்டப்பட்டுள்ள ராமர் கோயில் கும்பாபிஷேகம் நாளை மறுநாள் நடைபெற உள்ளது. இதற்கான நிகழ்ச்சியை முக்கிய நபராக இருந்து பிரதமர் நரேந்திர மோடி நடத்த உள்ளார். இதை முன்னிட்டு 11 நாள் விரதம் இருந்து வரும் பிரதமர் நரேந்திர மோடி, ராமாயணத்துடன் தொடர்புடைய ஆலயங்களுக்குச் சென்று வழிபட்டு வருகிறார். அந்த வகையில், இன்று ராமரும் சீதையும் வழிபட்ட கோயிலாகக் கருதப்படும் ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலுக்குச் சென்று பிரதமர் மோடி வழிபட்டார். இதனையடுத்து, ராமேஸ்வரம் செல்லும் பிரதமர் மோடி, அங்கு ராமநாத சுவாமியை வழிபட இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x