Published : 20 Jan 2024 05:03 AM
Last Updated : 20 Jan 2024 05:03 AM

தேர்தல் பணியை தொடங்கியது திமுக; அறிக்கை தயாரிப்பு, பேச்சு நடத்த குழுக்கள் அமைப்பு: ‘இண்டியா கூட்டணி வெல்லும்’ என ஸ்டாலின் உறுதி

சென்னை: நாடாளுமன்ற தேர்தல் விரைவில் அறிவிக்கப்பட உள்ள நிலையில் தமிழகத்தில் ஆளும் கட்சியான திமுக, தேர்தல் பணிகளை ஒருங்கிணைக்க, அறிக்கை தயாரிக்க, கூட்டணி பேச்சுவார்த்தைக்கு என தனித்தனி குழுக்களை அமைத்து வேலைகளைத் தொடங்கியுள்ளது.

மத்தியில் அடுத்து ஆட்சியைப் பிடிக்கப்போவது யார் என்பதை நிர்ணயிக்கும் நாடாளுமன்றத் தேர்தலுக்கான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் தமிழகத்தில் ஆளுங்கட்சியான திமுக, ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள 68 ஆயிரத்துக்கும் அதிகமான வாக்குச்சாவடிகளுக்கு பொறுப்பாளர்களை நியமித்து, அவர்களுக்கு மண்டல வாரியாக பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டுள்ளன.

இந்நிலையில், அடுத்த கட்டமாக தேர்தல் பணிக்கென 3 குழுக்களை திமுக அமைத்துள்ளது. இதற்கான அறிவிப்பை திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் நேற்று வெளியிட்டுள்ளார்.

அதன்படி, நாடாளுமன்ற தேர்தலுக்கான அறிக்கை தயாரிக்க, நாடாளுமன்ற உறுப்பினரும், திமுக துணை பொதுச்செயலாளருமான கனிமொழி தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது. இக்குழுவில், செய்தித்தொடர்பு தலைவர் டி.கே.எஸ்.இளங்கோவன், விவசாய அணி செயலாளர் ஏ.கே.எஸ்.விஜயன், சொத்து பாதுகாப்பு குழு செயலாளரும் அமைச்சருமான பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன், தகவல் தொழில்நுட்ப அணி செயலாளரும் அமைச்சருமான டி.ஆர்.பி.ராஜா, வர்த்தகர் அணி துணைத்தலைவரும் அரசு கொறடாவுமான கோவி.செழியன், கே.ஆர்.என்.ராஜேஷ்குமார் எம்.பி. மாணவரணி செயலாளர் சி.வி.எம்.பி.எழிலரசன், அயலக அணி செயலாளர் எம்.எம்.அப்துல்லா எம்.பி., மருத்துவ அணி செயலாளர் எழிலன் நாகநாதன், சென்னை மாநகராட்சி மேயர் ஆர்.பிரியா ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இக்குழுவில், வழக்கத்துக்கு மாறாக இளைஞர்களுக்கு அதிக இடம் அளிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக துறைசார்ந்த அறிமுகம் உள்ளவர்களுக்கும் வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதுதவிர, நாடாளுமன்ற தேர்தலுக்கான கட்சிப் பணிகளை ஒருங்கிணைக்கவும், மேற்பார்வையிடவும், அமைச்சர் கே.என்.நேரு, அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, அமைச்சர்கள் எ.வ.வேலு, தங்கம் தென்னரசு, உதயநிதி ஸ்டாலின் ஆகியோரைக் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது.

இதில், போட்டி மிகுந்த மேற்கு மண்டலத்துக்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், வடக்கு மண்டலத்துக்கு அமைச்சர் எ.வ.வேலு, தெற்கு மண்டலத்துக்கு தங்கம் தென்னரசு, டெல்டா மண்டலத்துக்கு அமைச்சர் கே.என்.நேரு, சென்னை மண்டலத்துக்கு அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இண்டியா கூட்டணியைப் பொறுத்தவரை பிரதான கட்சிகளில் ஒன்று திமுக. எனவே, காங்கிரஸ் உள்ளிட்ட பிற கூட்டணி கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தவும், புதிய கட்சிகளைச் சேர்த்து அக்கட்சிகளுக்கான இடத்தை உறுதி செய்யவும் குழு அமைக்கப்பட்டுள்ளது.

திமுக பொருளாளரும், நாடாளுமன்றக் குழு தலைவருமான டி.ஆர்.பாலு தலைமையில், முதன்மைச் செயலாளர் கே.என்.நேரு, துணை பொதுச்செயலாளர்கள் ஐ.பெரியசாமி, க.பொன்முடி, ஆ.ராசா, கொள்கை பரப்புச் செயலாளர் திருச்சி சிவா, உயர்நிலை செயல்திட்டக்குழு உறுப்பினர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் ஆகியோர் இக்குழுவில் இடம்பெற்றுள்ளனர்.

இந்நிலையில், புதிதாக அமைக்கப்பட்டுள்ள இக்குழு விரைவில் கூட்டணி கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தும் என தெரிகிறது. மேலும், அதிமுக கூட்டணியில் இருந்து தற்போது விலகி நிற்கும் கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தவும் திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

திமுகவில் தேர்தல் தொடர்பாக குழுக்கள் அமைக்கப்பட்ட நிலையில், அதற்கான அறிவிப்பை சுட்டிக்காட்டி தனது சமூக வலைதள பக்கத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின், “தொடங்கியது தேர்தல் 2024 பணி. பணி முடிப்போம், வெற்றி வாகை சூடுவோம். இண்டியா வெல்லும்” என தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x