Published : 19 Jan 2024 09:29 PM
Last Updated : 19 Jan 2024 09:29 PM
சென்னை: 2030-ல் இளைஞர் ஒலிம்பிக் மற்றும் 2036-ல் கோடைக்கால ஒலிம்பிக் ஆகியவற்றை நடத்த இந்தியா முயற்சிகள் மேற்கொண்டு வருகிறது. இது இந்த அரசின் தொலை நோக்குப் பார்வைக்கு ஒரு சான்றாகும். இந்தியாவின் ஒலிம்பிக் கனவுகளை உயிர்ப்புடன் வைத்திருக்க வேண்டும், என்று சென்னையில் நடந்த கேலோ இந்தியா விளையாட்டுப் போட்டிகளின் தொடக்க விழாவில் மத்திய விளையாட்டுத்துறை அமைச்சர் அனுராக் தாக்குர் கூறினார்.
தமிழகத்துக்கு 3 நாள் பயணம் மேற்கொண்டுள்ளார் பிரதமர் நரேந்திர மோடி. சென்னை நேரு உள் விளையாட்டரங்கில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற விழாவில் கேலோ இந்தியா போட்டிகளை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, முதல்வர் மு.க.ஸ்டாலின், மத்திய இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் அனுராக் சிங் தாக்குர், மத்திய இணை அமைச்சர்கள் நிஷித் பிராமானிக், எல்.முருகன், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் பங்கேற்றனர்.இந்த விழாவில், மத்திய விளையாட்டுத்துறை அமைச்சர் அனுராக் தாக்குர் பேசியதாவது: "6-வது கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டு போட்டிகள் 2023 மிகவும் தனித்தன்மை வாய்ந்தது. இதில் 36 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களைச் சேர்ந்த 5,630 இளம் விளையாட்டு வீரர்கள் பங்கேற்றுள்ளனர்.
சென்னை, கோயம்பத்தூர், மதுரை, திருச்சி ஆகிய 4 இடங்களில் 26 விளையாட்டுப் போட்டிகள் நடைபெற உள்ளன. எப்போதும் போலவே, அடிமட்ட அளவில் உள்ள திறமைகளை வெளிக்கொண்டு வருவதும், விளையாட்டு நடவடிக்கைகள் மூலம் நலவாழ்வு குறித்த செய்தியை பரப்புவதுமே கேலோ இந்தியா விளையாட்டுக்களின் குறிக்கோளாக இருந்து வருகின்றன.2016-ல் தொடங்கப்பட்ட கேலோ இந்தியா இயக்கம் மாற்றத்தை ஏற்படுத்தியது. ஒலிம்பிக் உள்ளிட்ட விளையாட்டுத் துறையில் பதக்கங்களை வெல்லும் அளவுக்கு அளப்பரிய ஆற்றலைக் கொண்ட திறமைசாலிகளை அடையாளம் காண இப்போட்டிகள் நாட்டுக்கு உதவியுள்ளது.
இன்று, பிரதமர் நரேந்திர மோடியின் மகத்தான தொலை நோக்கு பார்வை மற்றும் வலுவான தலைமையின் கீழ், இந்தியா விளையாட்டில் சிறந்து விளங்குகிறது. ஒலிம்பிக் போட்டிகள், பாராலிம்பிக் போட்டிகள், ஆசிய விளையாட்டுகள், பாரா ஆசிய விளையாட்டுகள் மற்றும் காமன்வெல்த் விளையாட்டுகள் என எதுவாக இருந்தாலும், எங்கு சென்று விளையாடினாலும் நமது விளையாட்டு வீரர்கள் நம்மை பெருமைப்படுத்தி உள்ளனர்.
2030-ல் இளைஞர் ஒலிம்பிக் மற்றும் 2036-ல் கோடைக்கால ஒலிம்பிக் ஆகியவற்றை நடத்த இந்தியா முயற்சிகள் மேற்கொண்டு வருகிறது. இது இந்த அரசின் தொலை நோக்குப் பார்வைக்கு ஒரு சான்றாகும். ஒலிம்பிக் போட்டிக்கு தயாராகும் விதத்தில் எதையும் நாம் விட்டுவிடக்கூடாது என்று விரும்புகிறோம். இந்த காவிய சரித்திரத்தில் இளம் விளையாட்டு வீரர்கள் தங்களது அத்தியாயங்களை எழுதுவதற்கான நேரம் இது.ஆகஸ்ட் 2023-ல் ஆசிய சாம்பியன்ஸ் டிராபி ஹாக்கி, ஜூன் 2023-ல் ஸ்குவாஷ் உலகக் கோப்பை மற்றும் ஜூலை 2022-ல் 44 வது செஸ் ஒலிம்பியாட் ஆகியவற்றை நடத்திய தமிழ்நாடு, உலக அரங்கில் இந்தியாவின் விளையாட்டு பிம்பத்தை மேம்படுத்த தொடர்ந்து பங்களித்து வருகிறது.
தமிழ்நாட்டு மண் விஸ்வநாதன் ஆனந்த், சரத் கமல் மற்றும் எண்ணற்ற விளையாட்டு ஜாம்பவான்களை நமக்கு பரிசளித்துள்ளது, அவர்கள் விளையாட்டு வரலாற்றில் தங்கள் பெயர்களை பொன்னெழுத்துகளால் பொறித்துள்ளனர். 18 வயதான செஸ் வீரரும், கிராண்ட் மாஸ்டருமான ஆர்.பிரக்ஞானந்தா உலகளாவிய இளைஞர்களின் அடையாளமாகவும், இந்திய விளையாட்டுகளின் உலகளாவிய தூதராகவும் உருவெடுத்துள்ளார்.
6-வது கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டு போட்டிகள் 2023-ல் அனைத்து விளையாட்டு வீரர்களும் தங்களது சிறந்த திறனை வெளிப்படுத்த வேண்டும். கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டு போட்டிகள் தடைகளை தாண்டி சாதனை படைக்கும் யுத்தம் ஆகும். இந்த யுத்தம் என்ற வார்த்தைக்கு தமிழில் இளைஞர்கள் மற்றும் தைரியம் என்று பொருள் கொள்ளலாம்” என்று அவர் பேசினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Be the first person to comment