Last Updated : 19 Jan, 2024 07:54 PM

27  

Published : 19 Jan 2024 07:54 PM
Last Updated : 19 Jan 2024 07:54 PM

தமிழகத்தில் 3-வது அணியை உருவாக்க பாஜக திட்டம்? - ஓர் ‘உள்ளரசியல்’ பார்வை

“ஓ.பன்னீர்செல்வமும், நானும் வருங்கால அரசியலில் இணைந்து செயல்பட வேண்டும் என ஒரு முடிவை எடுத்துள்ளோம். கூட்டணி பற்றி உரிய நேரத்தில் முடிவை அறிவிப்போம்” என அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். ’அதிமுக - திமுக’ அல்லாத மூன்றாவது கூட்டணி அமையும் என்பதை சூசகமாக அவர் சொல்லியிருக்கிறாரா என்னும் சந்தேகம் அரசியல் வட்டாரத்தில் எழுந்துள்ளது.

பாஜக கூட்டணியிலிருந்து அதிமுக விலகிய பின்பு, தொடர்ந்து ’பாஜகவுடன் கூட்டணி இல்லை’ என்னும் தகவலை எடப்பாடி பழனிசாமி நிமிடத்துக்கு நிமிடம் சொல்லிவருகிறார். இந்த நிலை தொடர்ந்தால், பாஜகவுக்கு மாற்று கூட்டணியை உருவாக்க வேண்டிய நிர்பந்தம் ஏற்படும். மேலும், கடந்த இரு மக்களவைத் தேர்தல்களிலும் பாஜகவால் தமிழகத்தில் ஜொலிக்க முடியவில்லை. இரண்டாவது முறை அதிமுகவுடன் கூட்டணி அமைத்து மக்களவைத் தேர்தலை சந்திந்திருந்தாலும் ’மோடி எதிர்ப்பு’ அலை, 38 தொகுதிகளை வாரி எடுத்துக்கொண்டது.

’தமிழகத்தில் ஆட்சியைப் பிடித்தே ஆக வேண்டும்’ எனக் கருதும் பாஜக, திமுக - அதிமுக கட்சி அல்லாத அதிருப்தியாளர்களைத் தங்கள் பக்கம் ஈர்த்து அதிக இடங்களில் போட்டியிட்டு, வென்று தடம் பதிக்குமா? பாஜக தலைமையில் மூன்றாவது கூட்டணி அமையுமா? அப்படி அமைந்தால் அதன் பலம் மற்றும் பலவீனம் என்னென்ன?

மோடி திருச்சி வருகை: இந்த ஆண்டு பிறந்தவுடனே பிரதமர் மோடி தமிழகத்துக்குதான் முதலாவதாகப் பறந்தார். கடந்த ஜனவரி 2-ம் தேதி, திருச்சி சர்வதேச விமானநிலைய புதிய முனையம் திறப்பு விழாவில் பங்கேற்றார் மோடி. அது ஓர் அரசு நிகழ்ச்சியாக இருந்தாலும், அதில் வெளிப்படையான அரசியல் நிகழ்வுகளைக் காண முடிந்தது. அந்த நிகழ்வில், ஓ.பன்னீர்செல்வம், தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன், புதிய நீதிக் கட்சித் தலைவர் ஏ.சி.சண்முகம் , இந்திய ஜனநாயகக் கட்சித் தலைவர் பாரிவேந்தர், தமிழக மக்கள் முன்னேற்ற கழகத் தலைவர் ஜான் பாண்டியன் போன்ற பல கட்சித் தலைவர்கள் பங்கேற்றனர்.

’இந்த நிகழ்ச்சியே மூன்றாவது கூட்டணிக்கான முதல் அடி’ எனப் பலரும் கருத்து தெரிவித்தனர். அதை உறுதிப்படுத்தும் வகையில் டிடிவி தினகரனும் ஓ.பன்னீர்செல்வத்துடன் இணைவதை உறுதி செய்திருக்கிறார். அதே திருச்சி நிகழ்ச்சியில், மறைந்த நடிகர் விஜயகாந்த் பற்றி மோடி பேசினார். அவர் மறைவுக்கு இரங்கல் தெரிவிதத்துடன் அவரை நினைவுகூர்ந்து பேசினார். மேலும், விஜயகாந்த் பற்றிய மோடியின் கட்டுரை பல ஆங்கிலம் மற்றும் தமிழ் நாளிதழ்களில் வெளியாகியது. தேமுதிகவை கூட்டணிக்குள் வளைக்க பாஜக முயற்சிக்கிறது என்பதும் இதில் வெளிப்படையாக தெரிகிறது. அவ்வாறு பாஜக குடையின்கீழ் அணி திரண்டால் என்ன நடக்கும்?

கடந்த அதிமுக ஆட்சியில், மிகவும் பிற்படுத்தப்பட்டவர்கள் இடஒதுக்கீட்டில் 10.5% வன்னியர்களுக்கு இடம் கொடுத்ததால், முக்குலத்தோர் அதிமுக மீது அதிருப்தியில் இருந்தனர். அப்போது அதிமுகவில் இருந்த ஓ.பன்னீர்செல்வத்தின் மீது முக்குலத்தோர் தங்கள் கோபத்தை திருப்பினர். இதனால், கடந்த சட்டசபை தேர்தலில் தென் மாவட்டங்களில் 35 சட்டமன்ற தொகுதிகளில் திமுக 25 தொகுதிகளிலும் அதிமுக 10 தொகுதிகளையும் மட்டுமே வெற்றி பெற்றது. எனவே, முக்குலத்தோரால் ஓ.பன்னீர்செல்வம் செலுத்திய ஆதிக்கம் சறுக்கலை சந்தித்தது.

தேவர் குரு பூஜையில், அதிமுக சார்பில் தேவருக்குச் சாத்தப்படும் தங்கக்கவசத்தை இதுவரை பன்னீர்செல்வம் தன் கையால் எடுத்துக்கொடுத்து வந்தார். ஆனால், அதிமுகவிலிருந்து வெளியேறிய பிறகு, இந்த ஆண்டு தன் சொந்த செலவில் தேவருக்கு பத்தரை கிலோ எடையில் வெள்ளிக் கவசம் செய்துகொடுத்து முக்குலத்து மக்களின் அபிமானத்தை மீண்டும் பெற தொடங்கியிருக்கிறார். 100 வாகனங்களில் தனது ஆதரவாளர்கள் புடைசூழ வந்து தேவருக்கு அஞ்சலி செலுத்தி செல்வாக்கை நிரூபித்தார் ஓபிஎஸ்.

அதேபோல், பாஜக தலைவர் அண்ணாமலையும் பசும்பொன் சென்று தேவருக்கு மரியாதை செலுத்தினார். “இன்றைய சூழ்நிலையில் பசும்பொன் தேவர் மீண்டும் தேவைப்படுகிறார்” எனப் பேசினார். பிரதமர் மோடியும், ’பெருமதிப்பிற்குரிய பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரை அவரது குருபூஜை நாளில் வணங்குகிறேன். சமூக மேம்பாடு, விவசாயிகள் நலன், வறுமை ஒழிப்பு என தேசத்திற்கு தேவர் ஆற்றிய பங்களிப்பை நினைவுகூர்கிறேன். அவரது கொள்கைகள் நம்மை தொடர்ந்து ஊக்குவிக்கும்’ என்று தேவரை நினைவுகூர்ந்தது குறிப்பிடத் தக்கது. முக்குலத்தோரை தங்கள் பக்கம் இழுக்க இப்படி எல்லாம் பாஜக காய் நகர்த்தி வந்தது.

இந்த நிலையில், தென் தமிழகத்தில் ஓ.பன்னீர்செல்வம் - டி.டி.வி தினகரன் ஆதரவு கிடைத்தால் ஜாக்பாட் என்றுதான் பாஜக நினைக்கும். கடந்த பாஜக - அதிமுக கூட்டணியில் தேனியில் மட்டும்தான் பாஜக - அதிமுக கூட்டணி வெற்றி பெற்றது. வெற்றி பெற்ற ரவீந்திரன், ஓ.பன்னீர்செல்வத்தின் மகன் என்பது குறிப்பிடதக்கது. எனவே, அவர்கள் தலைமையில் முக்குலத்தோர் வாக்குகளை அதிகமாக பாஜக பக்கம் இழுக்க முடியும்.

அதேபோல், விஜயகாந்த் மறைவு, தொண்டர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இன்றளவும் அவர் சமாதிக்கு வரும் கூட்டம் அதிகரிக்கவே செய்கிறது. எனவே, இந்த அனுதாப வாக்குகளை பாஜகவால் பரவலாக அறுவடை செய்ய முடியும்.

அதேபோல், அதிமுகவில் பாமக கட்சிக்கு மிகக் குறைந்த இடங்களை ஒதுக்கும் நிலையில் அவர் கூட்டணியில் இருந்து வெளியேறி வேறு கூட்டணியில் இணைய அதிக வாய்ப்பிருக்கிறது. திமுக கூட்டணியில் விடுதலை சிறுத்தைகள் கட்சி இருப்பதால் அதன் கூட்டணிக்கு பாமக செல்லுமா? 10.5 % இடஒதுக்கீடு ரத்தானது, சாதிவாரி கணக்கெடுப்பு என அடுத்ததடுத்து திமுக மீது அதிருப்தியில் உள்ளது பாமக. இதனைக் கடந்து கூட்டணியில் சேர்ந்தாலும் சொற்ப இடங்களை மட்டுமே பெற முடியும். ஒருவேளை, பாமக கேட்கும் இடங்களைப் பாஜக வழங்கினால், கடலூர், விழுப்புரம், ராணிப்பேட்டை, வேலூர், செங்கல்பட்டு, திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் பெருவாரியான வன்னியர் வாக்குகளையும் பாஜகவால் அறுவடை செய்ய முடியும் என்பதுதான் அரசியல் நோக்கர்கள் கருத்தாக இருக்கிறது.

கொங்கு மண்டலத்தில் அண்ணாமலையை முன்னிறுத்தி கவுண்டர்களில் வாக்குகளை பெறும் பாஜகவால் முடியும். மற்ற இந்து, பிராமணர்கள் உட்பட இந்துத்துவ வாக்கு வங்கியை பாஜக பார்த்துக்கொள்ளும். மேலும், தமிழ் மாநில காங்கிரஸ், புதிய நீதிக் கட்சி, இந்திய ஜனநாயகக் கட்சி , தமிழக மக்கள் முன்னேற்ற கழகம், புதிய தமிழகம் கட்சி, சமத்துவ மக்கள் கட்சி, இந்திய ஜனநாயக கட்சி போன்ற உதிரி கட்சிகள் பாஜக கூட்டணியில் இணைந்தால் கணிசமான வாக்குகளைப் பெறும் என்பதில் சந்தேகமில்லை.

ஏற்கெனவே, 2024-ம் ஆண்டு முதல் நிகழ்வை தமிழகத்தில்தான் தொடங்கி இருக்கிறார் மோடி. இப்படியான வியூகங்களுடன் இந்த மக்களவைத் தேர்தலை பாஜக சந்தித்தால் வாக்கு வங்கியை அதிகரிக்க முடியும் என்னும் கருத்து முன்வைக்கப்படுகிறது.

இது குறித்து நம்மிடம் பேசிய மூத்தப் பத்திரிக்கையாளர் ப்ரியன், “அதிமுக - பாஜக கூட்டணி முறிவு என்பது வெளியில் தெரிந்த அறிவிப்பு. ஆனால், அதனை உறுதி செய்ய ’பாஜக கூட்டணியில் சேர்க்க மாட்டோம்’ என அறிவித்தால் மட்டும் போதுமா? பாஜகவை அதிமுக விமர்சிக்க வேண்டும். ஆனால், எந்த நிகழ்விலும் விமர்சிக்காமல் இருக்கிறது. ஆகவே, இந்தக் கூட்டணி பிரிவு எல்லாம் ’தேர்தல் ஸ்டன்ட்’.

ஒருவேளை சிறுபான்மை வாக்குகளைப் பெற அதிமுக பாஜகவில் இருந்து பிரிந்திருக்கலாம். நாளை வெற்றி பெற்ற பின் பாஜகவுக்கு ஆதரவு தெரிவிக்காமல் இருப்பார்களா? தேர்தல் நடக்கும் சில வாரங்களில் கூட கூட்டணி மாறலாம். பாஜக - அதிமுக இணைந்திருந்தால் கூட, சில இடங்களில் பாஜகவுக்கு வெற்றி வாய்ப்பு இருக்கும். ஆனால், மற்ற வகையில் எப்படியான கூட்டணி அமைத்தாலும், பாஜகவுக்கு வெற்றி வாய்ப்பு குறைவுதான் என்பதே என் கருத்து” என்றார்.

தேர்தல் நடந்து முடிந்தால் மட்டுமே கூட்டணியை உறுதி செய்ய முடியும். அதற்கு முன்பு என்ன வேண்டுமானாலும் நடக்கலாம். நம் யூகங்கள் கட்சியின் வியூகங்களாக மாறுமா? என்பதைப் பொறுத்திருந்து பார்க்கலாம்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x