Published : 19 Jan 2024 05:14 PM
Last Updated : 19 Jan 2024 05:14 PM
மதுரை: தமிழகத்தில் மக்களவைத் தேர்தல் பணிகளைத் தொடங்கியுள்ள பாஜக, மாநிலம் முழுவதும் முதல் முறை வாக்காளர்களையும், சுய உதவிக்குழுக்களைச் சேர்ந்த பெண்களையும் சந்தித்துப் பேச திட்டமிட்டுள்ளது.
மக்களவைத் தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ளன. தேர்தல் பணியை பாஜக ஏற்கெனவே தொடங்கிவிட்டது. தமிழகத்தில் திமுக, அதிமுக கட்சிகள் மக்களவைத் தேர்தல் பணியை இன்னும் தொடங்காமல் இருந்து வருகின்றன. பாஜக மண்டல வாரியாக மக்களவைத் தேர்தல் ஆலோசனைக் கூட்டங்களை நடத்தி வருகிறது. தற்போது மாநிலம் முழுவதும் சுவர்களில் தாமரை சின்னம் வரையும் பணியை பாஜகவினர் தொடங்கியுள்ளனர்.
தமிழகம் முழுவதும் பூத்துக்கு குறைந்தபட்சம் 10 இடங்களில் சுவர்களில் தாமரை வரைய கட்சியினருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. அதில் 2 இடங்களில் பெரிதாகவும், 8 இடங்களில் சிறியளவிலும் தாமரை சின்னம் வரைந்து, ‘மீண்டும் மோடி, வேண்டும் மோடி’ என எழுதவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
இந்நிலையில், தமிழகத்தில் முதல் முறை வாக்காளர்களை ஓர் இடத்துக்கு அழைத்து பேச பாஜக திட்டமிட்டுள்ளது. ஜன.25-ல் சட்டப்பேரவைத் தொகுதி வாரியாக தொகுதிக்கு முதல் முறை வாக்காளர்கள் 1,000 பேரை ஓர் இடத்துக்கு நேரில் வரவழைத்துப் பேச கட்சியினருக்கு மாநிலத் தலைவர் அண்ணாமலை உத்தரவிட்டுள்ளார். இதேபோல் மாநிலம் முழுவதும் சுய உதவி குழுக்களை சேர்ந்த பெண்களை நேரில் சந்தித்து பேசவும் பாஜக நிர்வாகிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
இது குறித்து பாஜக நிர்வாகிகள் கூறுகையில், “தமிழகத்தில் மக்களவைத் தேர்தலுக்கு பாஜக முழு வீச்சில் தயாராகி வருகிறது. தேர்தல் பணிகளை மிகவும் நுணுக்கமாக மேற்கொள்ள வேண்டும் என மாநிலத் தலைவர் கேட்டுக்கொண்டுள்ளார். பேரவைத் தொகுதிக்கு 1000 பேர் வீதம்,18 முதல் 22 வயதுக்கு உட்பட்ட முதல் முறை வாக்காளர்களின் பட்டியலை தயாரித்து, அழைத்து பேச வேண்டும். இந்தக் கூட்டங்களில் பிரதமர் மோடியை மட்டுமே பிரதானப்படுத்த வேண்டும். பிரதமரின் பேச்சுகளை ஒளிபரப்ப வேண்டும்.
பிரதமரின் பேச்சுக்களால் தூண்டப்பட்டு, அவர்கள் பாஜக ஆதரவாளர்களாக மாற்ற வேண்டும் ஆலோசனைக் கூட்டங்களில் பிரதமர் மோடியின் படம், தாமரைச் சின்னம், குறைந்தளவில் கட்சிக் கொடி மட்டும் இருக்க வேண்டும். இந்த நிகழ்ச்சிகள் பாஜக நடத்துவதுபோல் இருக்கக் கூடாது. பொதுவாக நடத்தப்படும் நிகழ்ச்சியாக காட்டிக்கொள்ள வேண்டும். கூட்டங்களில் வருவோருக்கு புத்தகம் பரிசாக வழங்க வேண்டும் என மாநிலத் தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்” என்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT