Published : 18 Jan 2024 11:22 PM
Last Updated : 18 Jan 2024 11:22 PM
ராஜபாளையம்: காரைக்குடி, ராமநாதபுரம், புதுக்கோட்டை உட்பட 6 நகராட்சிகளை மாநகராட்சிகளாக தரம் உயர்த்துவதற்கான அறிவிப்பு வரும் பட்ஜெட் கூட்டத் தொடரில் வெளியாகும் என நகராட்சி நிர்வாகத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர். இப்பட்டியலில் பாதாள சாக்கடைத் திட்டம், கார்பன் நியூட்ரல் ராஜபாளையம் உள்ளிட்ட மாநகராட்சிக்குரிய திட்டங்கள் இருந்தும் ராஜபாளையம் நகராட்சி இடம் பெறாதது மக்களிடையே ஏமாற்றத்தை அளித்துள்ளது.
தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 490 பேரூராட்சிகள் உள்ளன. இதில் வருவாய், மக்கள் தொகை அடிப்படையில் சிறப்பு நிலை, தேர்வு நிலை, முதல்நிலை என வரிசைபடுத்தப்பட்டு அதற்கேற்ப திட்டங்கள் மற்றும் நிதி ஒதுக்கப்பட்டு உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் அடிப்படை வசதிகள் ஏற்படுத்தப்பட்டு வருகிறது. இவற்றில் சிறப்பு நிலை பேரூராட்சிகளை நகராட்சிகளாகவும், சிறப்பு நிலை மற்றும் பெரிய நகராட்சிகளை மாநகராட்சியாகவும் தரம் உயர்த்த வேண்டும் என மக்கள் பிரதிநிதிகள், பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். கடந்த ஆண்டு நடந்த சட்டப்பேரவை கூட்ட தொடரில் நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு, உள்ளாட்சி அமைப்புகளை தரம் உயர்த்துவது குறித்து ஆய்வு செய்வதற்காக குழு அமைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
நாமக்கல், புதுக்கோட்டை, காரைக்குடி ஆகியவற்றை மாநகராட்சிகளாக தரம் உயர்த்த வேண்டும் என அந்தந்த நகராட்சிகளில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு நகராட்சி நிர்வாக இயக்குநருக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
ராஜபாளையம் கடந்த 1941ம் ஆண்டு மூன்றாம் நிலை நகராட்சியாக உருவாக்கப்பட்டது. 1955ம் ஆண்டு இரண்டாம் நிலை நகராட்சியாகவும், 1975ம் ஆண்டு முதல் நிலை நகராட்சியாகவும், 1989ம் ஆண்டு தேர்வு நிலை நகராட்சியாகவும் தரம் உயர்த்தப்பட்டது. 2008ம் ஆண்டு முதல் சிறப்பு நிலை நகராட்சியாக செயல்பட்டு வருகிறது. ராஜபாளையம் நகராட்சியில் 2011ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி 1.30 லட்சம் மக்கள் வசிக்கின்றனர். இங்கு பஞ்சாலைகள், கைத்தறி மற்றும் விசைத்தறி கூடங்கள், ரெடிமேட் ஆடை உற்பத்தி, விவசாயம் ஆகியவை பிரதான தொழிலாக உள்ளது. மக்கள் தொகை பெருக்கம் காரணமாக நகர் விரிவடைந்து சுற்றி உள்ள கிராமப்பகுதிகளையும் இணைத்து குடியிருப்புகள் பெருகிவிட்டது. ராஜபாளையம் நகராட்சி மற்றும் சுற்றி உள்ள ஊராட்சிகளை சேர்த்தால் மக்கள் தொகை 3 லட்சத்தை தாண்டும். நகராட்சியில் கடந்த 2018ம் ஆண்டு பாதாள சாக்கடை திட்டம் தொடங்கப்பட்டு, தற்போது முடியும் தருவாயில் உள்ளது.
காலநிலை மாற்றத்தால் ஏற்படக்கூடிய பாதிப்பை தடுப்பதற்காக தமிழகத்தின் முதல் நகரமாக ராஜபாளையம் தேர்வு செய்யப்பட்டது. ராஜபாளையம் நகராட்சி மற்றும் அதனை சுற்றியுள்ள 15 வருவாய் கிராமங்களை இணைத்து 'கார்பன் நியூட்ரல் ராஜபாளையம்' திட்டம் கடந்த ஆகஸ்ட் தொடங்கப்பட்டது. தென்தமிழகத்தின் முக்கிய தொழில் நகரங்களில் ஒன்றான ராஜபாளையத்தை மாநகராட்சியாக தரம் உயர்த்த வேண்டும் என பொதுமக்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர். ராஜபாளையம் நகராட்சி, சுற்றியுள்ள ஊராட்சிகளை இணைத்து மாநகராட்சியாக தரம் உயர்த்த வேண்டும் என கடந்த ஆண்டு சட்டப்பேரவையில் எம்எல்ஏ தங்கபாண்டியன் கோரிக்கை விடுத்து இருந்தார்.
இந்நிலையில் ராமநாதபுரம், புதுக்கோட்டை, திருவண்ணாமலை, நாமக்கல், காரைக்குடி, பொள்ளாச்சி ஆகிய 6 நகராட்சிகளை மாநகராட்சிகளாக தரம் உயர்த்துவதற்கான அறிவிப்பு வரும் பட்ஜெட் கூட்டத்தொடரில் வெளியாகும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த பட்டியலில் ராஜபாளையம் இடம் பெறாதது மக்களுக்கு ஏமாற்றத்தை அளித்துள்ளது.
இதுகுறித்து நகராட்சி நிர்வாகத்துறை கூறுகையில், 'கடந்த 2021ம் ஆண்டு சிவகாசி, தாம்பரம், கடலூர், கரூர், கும்பகோணம், காஞ்சிபுரம் ஆகிய 6 நகராட்சிகள் மாநகராட்சிகளாக தரம் உயர்த்தப்பட்டது. இதில் புதிதாக இணைக்கப்பட்ட ஊராட்சிகளில் தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகள் பதவியில் இருப்பதால் இந்த ஆண்டு இறுதியில் அவை மாநகராட்சியுடன் இணைக்கப்பட உள்ளது. வருவாய் மற்றும் மக்கள் தொகை பெருக்கத்தின் அடிப்படையில் உள்ளாட்சி அமைப்புகளை தரம் உயர்த்துவது குறித்து ஆராய நகராட்சி நிர்வாகத்துறை சார்பில் குழு அமைக்கப்பட்டது.
அக்குழுவின் பரிந்துரை மற்றும் மக்கள் பிரதிநிதிகளின் கோரிக்கை அடிப்படையில் காரைக்குடி, புதுக்கோட்டை, நாமக்கல், திருவண்ணாமலை, பொள்ளாச்சி, ராமநாதபுரம் ஆகிய 6 நகராட்சிகள் உடன் அதனை சுற்றியுள்ள கிராம ஊராட்சிகளை இணைத்து மாநகராட்சிகளாக தரம் உயர்த்துவதற்கான அறிவிப்பு வரும் பட்ஜெட் கூட்டத் தொடரில் வெளியாக வாய்ப்புள்ளது. இதன் மூலம் தமிழகத்தில் மாநகராட்சிகளின் எண்ணிக்கை 27 ஆக அதிகரிக்கும். மாவட்ட தலைநகராக இல்லாதது, ஏற்கனவே மாவட்டத்தில் ஒரு மாநகராட்சி உள்ளது உள்ளிட்ட காரணங்களால் ராஜபாளையம் இப்பட்டியலில் இடம் பெறவில்லை" என தெரிவித்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT