Published : 18 Jan 2024 07:47 PM
Last Updated : 18 Jan 2024 07:47 PM
சென்னை: கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டுப் போட்டிகளை பிரதமர் நரேந்திர மோடி வெள்ளிக்கிழமை (ஜன.19) சென்னையில் தொடங்கி வைக்கிறார். தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி , முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆகியோர் முன்னிலை வகிக்கிறார்கள். தமிழகத்தின் புகழ் மகுடத்தில் மற்றும் ஒரு மாணிக்க முத்திரையாக இது அமையும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டுப் போட்டிகள் - 2023-ஐ, சென்னையில் நடத்திட முடிவு மேற்கொண்டதைத் தொடர்ந்து இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், தமிழக அரசின் தலைமைச் செயலாளர் உள்ளிட்ட அரசின் உயர் அலுவலர்கள், விளையாட்டு மேம்பாட்டு ஆணைய அதிகாரிகள் அனைவருடனும் இணைந்து இந்தப் போட்டிகளை வெற்றிகரமாக நடத்தி முடிப்பதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் சிறப்பாக நிறைவேற்றியுள்ளார்கள்.
பிரதமர் நரேந்திர மோடி சென்னைக்கு வருகை தந்து கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டுப் போட்டிகளைத் தொடங்கி வைத்துச் சிறப்பிக்குமாறு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஜன.4-ம் தேதி அன்று புதுடெல்லி சென்று அழைப்பு விடுத்தார்.இந்த அழைப்பினை ஏற்றுக் கொண்ட பிரதமர் நரேந்திர மோடி நாளை (ஜன.19) சென்னைக்கு வருகை தந்து மாலை 6 மணிக்கு ஜவஹர்லால் நேரு விளையாட்டரங்கில், கேலோ இந்தியா விளையாட்டுப் போட்டிகளை முறைப்படி தொடங்கி வைக்கிறார். தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆகியோர் முன்னிலை வகிக்கிறார்கள்.
மத்திய அரசின் இளைஞர் விவகாரம் மற்றும் விளையாட்டுகள், செய்தி மற்றும் ஒளிபரப்புத்துறை அமைச்சர் அனுராக் தாக்கூர், மத்திய அரசின் உள் விவகாரங்கள், இளைஞர் விவகாரங்கள் மற்றும் விளையாட்டுத்துறை இணையமைச்சர் நிசித் பிரமாணிக், தமிழக அரசின் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் பங்கேற்கிறார்கள். ஜன.23 அன்று தொடங்கி ஜன.31 வரை நடைபெறும் இந்த விளையாட்டுப் போட்டிகள் சென்னையில் மட்டுமல்லாமல் திருச்சி, கோயம்புத்தூர், மதுரை ஆகிய நகரங்களிலும் நடைபெறுகின்றன.
தடகள விளையாட்டுகளான கால்பந்து, கபடி. வாலிபால், ஜூடோ, பளு தூக்குதல், ஸ்குவாஸ், வில்வித்தைகள், குத்துச் சண்டை, பூப்பந்தாட்டம், டேபிள் டென்னிஸ், சைக்கிள், ஜிம்னாஸ்டிக், நீச்சல், ஹாக்கி, டென்னிஸ், துப்பாக்கி சுடுதல், யோகா, மல்யுத்தம் முதலிய விளையாட்டுப் போட்டிகள் நடைபெறும். கேலோ இந்தியா விளையாட்டுப் போட்டிகளில் நம் நாட்டின் 36 மாநிலங்கள் மற்றும் மத்திய நிர்வாகப் பகுதிகளிலிருந்து 18 வயதுக்குட்பட்ட வயதுப் பிரிவில் 5,500-க்கு மேற்பட்ட விளையாட்டு வீரர்களும், வீராங்கனைகளும், 1,600க்-கு மேற்பட்ட பயிற்சியாளர்களும் பங்கேற்கின்றனர். இந்த விளையாட்டுப் போட்டிகளைச் சிறப்பாக நடத்திட 1,000-க்கு மேற்பட்ட நடுவர்கள், 1,200-க்கு மேற்பட்ட தன்னார்வலர்கள் துணைபுரிவார்கள்.
இந்த கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டுப் போட்டிகள் 2023-ல் முதல்முறையாக தமிழகத்தின் பாரம்பரிய விளையாட்டான சிலம்பம் உட்பட மொத்தம் 27 விளையாட்டுகள் காட்சி விளையாட்டுகளாக (DEMO Sports) இடம் பெறுகின்றன.இந்த விளையாட்டுப் போட்டிகள் ஒவ்வொன்றும் நடைபெறும் இடம், நாள், நேரம் ஆகியவை குறித்த விவரங்கள் விளையாட்டு ஆர்வலர்களுக்கு வசதியாக இணையம் மூலம் வெளியிடப்பட்டுள்ளது.
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் இந்திய விளையாட்டு ஆணையம், பல்வேறு தேசிய விளையாட்டுக் கூட்டமைப்புகள் ஆகியவற்றுடன் இணைந்து போட்டிகளுக்கான அனைத்து ஏற்பாடுகளையும் திட்டமிட்டுள்ளது.போட்டிகள் சிறந்த முறையில், நடைபெறுவதற்கான கட்டமைப்பு வசதிகள், விளையாட்டு வீரர்கள் வந்து தங்குதற்கான இடவசதிகள், உணவு வசதிகள், போட்டி நடைபெறும் இடங்களுக்குச் செல்வதற்கான போக்குவரத்து வசதிகள் அனைத்தையும் தமிழக அரசு மிகச் சிறப்பாகத் திட்டமிட்டு ஏற்பாடுகளைச் செய்துள்ளது என்பது குறிப்படத்தக்கதாகும்.
உலக சதுரங்கக் கூட்டமைப்பின் சார்பில் 2022 ஜூலை 28 முதல் ஆகஸ்ட் 10 வரை 44வது செஸ் ஒலிம்பியாட் விளையாட்டுப் போட்டிகளை மாமல்லபுரத்தில் மகத்தான திருவிழாவாக நடத்தி உலகளவில் புகழ் குவித்தது தமிழக அரசு. அதேபோல, இந்த கேலோ இந்தியா இளைஞர்கள் விளையாட்டுப் போட்டிகள் – 2023 தமிழகத்தின் தலைநகரான சென்னையில் வெற்றிகரமாக நடைபெற்று, தமிழகத்தின் புகழ், மகுடத்தில் பதிக்கப்படும் மற்றொரு மாணிக்க முத்திரையாக அமையும் என்பது திண்ணம், என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT