Published : 18 Jan 2024 05:00 PM
Last Updated : 18 Jan 2024 05:00 PM
கோவை: "மசூதி கட்டப்பட்டதே ஒரு கோயிலை இடித்துதான் என நாங்கள் கூறவில்லை. உச்ச நீதிமன்றமே கூறியிருக்கிறது. எனவே, இடிக்கப்பட்ட இடத்தை அதன் உரிமையாளருக்கு ஒப்படைப்பதுதானே நியாயமாக இருக்கும். உதயநிதியின் விவாதத்தின்படியே பார்த்தாலும், கோயில் இருக்கிற இடத்தை கோயிலுக்குக் கொடுத்திருக்கிறது உச்ச நீதிமன்றம்" என்று பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் கூறியுள்ளார்.
கோவையில் பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் வியாழக்கிழமை செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவரிடம், "ராமர் கோயில் திறப்புக்கோ, மத நம்பிக்கைக்கோ திமுக எதிரி அல்ல. ஆனால், மசூதியை இடித்துவிட்டு கோயில் கட்டியதில் எங்களுக்கு உடன்பாடில்லை" என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கூறியிருப்பது தொடர்பான கேள்விக்கு பதிலளித்த அவர், "மசூதி கட்டப்பட்டதே ஒரு கோயிலை இடித்துதான் என நாங்கள் கூறவில்லை. உச்ச நீதிமன்றமே கூறியிருக்கிறது. எனவே, இடிக்கப்பட்ட இடத்தை அதன் உரிமையாளருக்கு ஒப்படைப்பதுதானே நியாயமாக இருக்கும்.
உதயநிதியின் விவாதத்தின்படியே பார்த்தாலும், கோயில் இருக்கிற இடத்தை கோயிலுக்குக் கொடுத்திருக்கிறது உச்ச நீதிமன்றம். எனவே, எப்படி நீங்கள், கிறிஸ்தவர்களுக்கு அவர்களுடைய தேவாலயங்களுக்குச் சென்று வாழ்த்து கூறுகிறீர்களோ, மசூதிகளுக்குச் சென்று இஸ்லாமியர்களுக்கு வாழ்த்து கூறுகிறீர்களோ, அதுபோல இந்தக் கோயிலுக்கும் வந்து ராம பக்தர்களுக்கு வாழ்த்து கூறுவதுதான், நீங்கள் பேசுகின்ற அனைவருக்குமான நீதிக்கான அரசியலாக இருக்க முடியும்" என்றார்.
அதேபோல், ஜல்லிக்கட்டில் இதிகாச, புராணத்தை மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் திரிக்கப் பார்ப்பதாக, மதுரை மக்களவை உறுப்பினர் சு.வெங்கடேசன் கூறியிருப்பது தொடர்பாக கேட்கப்பட்டதற்கு பதிலளித்த அவர், "தமிழகத்தில் ஜல்லிக்கட்டு நடக்கின்றபோது, அது அலங்காநல்லூரில் துவங்கி, ஒவ்வொரு ஜல்லிக்கட்டாக இருக்கட்டும் அல்லது மஞ்சுவிரட்டாக இருக்கட்டும் இவை அனைத்துமே கோயில்களுடன் தொடர்புடையது. இதை மக்களவை உறுப்பினர் சு.வெங்கடேசன் மறுக்க முடியுமா?
கோயிலில் சாமி கும்பிட்ட பிறகுதான் காளைகளை அவிழ்த்துவிடுவார்கள். அதுதான் இந்த நாட்டின் மரபும், பண்பாடும். சாமி கும்பிடாமல், காளைகளை எங்காவது அவிழ்த்துவிடுவதை பார்த்திருக்கிறீர்களா? சாமி கும்பிட்டுவிட்டு அவிழ்ப்பதால், அது மதம் சார்ந்த காளைகளா? திமுகவும், கம்யூனிஸ்ட்களும் மதசார்பின்மை என்ற பெயரில், இந்து மதத்தினுடைய அடையாளம், பண்பாடு, கலாச்சாரத்தை சீரழிப்பது அல்லது அதை அவமானப்படுத்துவதைத்தான் அவர்களுடைய வேலையாக செய்து வருகின்றனர்.
கோயில்களில் சாமி கும்பிட்டுவிட்டுத்தான் காளைகள் அவிழ்க்கப்படும். சாமி காளைகள் என்று ஜல்லிக்கட்டில் உண்டு. முதலில் அவிழ்க்கப்படும் இந்த காளைகள் சாமியோட காளைகள். அப்படி என்றால், கோயில்களில் இருந்து ஜல்லிக்கட்டை பிரிக்கலாம் என்று நினைக்கிறார்களா? ஜல்லிக்கட்டு என்பது இந்து கலாச்சாரத்தில், பண்பாட்டில், மத வழிபாட்டின் ஒரு கூறு. அதனால்தான், காளைகளை சாமியாக பார்க்கின்றனர்" என்று அவர் கூறினார். முன்னதாக, கோவை கோனியம்மன் கோயிலில் தூய்மைப் பணிகளை மேற்கொண்டு வழிபாட்டில் ஈடுபட்டார்.
முன்னதாக, ராமர் கோயில் திறப்பு விழாவை அரசியலாக்கக்கூடாது என்று அதிமுக கூறியுள்ள கருத்து தொடர்பான கேள்விக்கு பதிலளித்த அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், ‘ராமர் கோயில் திறப்புக்கோ, மத நம்பிக்கைக்கோ திமுக எதிரி அல்ல. ஆனால், மசூதியை இடித்துவிட்டு கோயில் கட்டியதில் எங்களுக்கு உடன்பாடில்லை” என்றார். | முழுமையாக வாசிக்க > “மசூதியை இடித்துவிட்டு கோயில் கட்டியதில் எங்களுக்கு உடன்பாடில்லை” - உதயநிதி ஸ்டாலின் கருத்து
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT