Published : 18 Jan 2024 05:38 AM
Last Updated : 18 Jan 2024 05:38 AM
சென்னை: திமுக ஃபைல்ஸ் பாகம் மூன்றின் 2-வது ஆடியோவில் 2ஜி வழக்கு குறித்து ஆ.ராசா - ஜாபர் சேட் இடையிலான உரையாடல் குறித்த ஆடியோவை தனது எக்ஸ் தளத்தில் தமிழக பாஜக தலைவர் கே.அண்ணாமலை வெளியிட்டார்.
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை திமுக மீது ஊழல், முறைகேடு உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகளை வைத்து வருகிறார். இதன் ஒருபகுதியாக திமுக ஃபைல்ஸ் என்ற பெயரில் திமுக ஊழல் பட்டியல் என வெளியிட்டு வருகிறார். கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் திமுக ஃபைல்ஸ் பாகம் ஒன்றை வெளியிட்டார். அதில், திமுக எம்.பி. ஜெகத்ரட்சகன், அமைச்சர் துரைமுருகன், முதல்வரின் குடும்பத்தினர் உள்ளிட்ட சிலரின் சொத்துப் பட்டியல் இடம் பெற்றிருந்தது.
அதனைத் தொடர்ந்து ஜூலை மாதம் திமுக ஃபைல்ஸ் பாகம் இரண்டை வெளியிட்டார். அதில், அரசு துறைகளில் ஒப்பந்த பணிகளில் நடந்திருந்த முறைகேடுகள் குறித்த குற்றச்சாட்டுகள் இடம் பெற்றிருந்தன.
இதனை தொடர்ந்து, திமுக ஃபைல்ஸ் பாகம் மூன்று என்ற பெயரில் ஒரு ஆடியோ பதிவை அண்ணாமலை கடந்த 14-ம் தேதி எக்ஸ் வலைதளத்தில் வெளியிட்டார். அதில், திமுக எம்.பி. டி.ஆர்.பாலு, முன்னாள் உளவுத்துறை உயர் அதிகாரி ஜாபர் சேட் இடையிலான தொலைபேசி உரையாடல்கள் இடம் பெற்றுள்ளதாக அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக எக்ஸ் வலைதள பதிவில் கருத்து தெரிவித்துள்ள அண்ணாமலை, ‘இண்டியா’ கூட்டணியில் இடம் பெற்றுள்ள கட்சிகளின் ஊழல் தன்மையை அம்பலப்படுத்தும் பல நாடாக்களில் இதுவும் ஒன்று. இந்த கூட்டணி 2004-ம் ஆண்டு முதல் 2014-ம் ஆண்டு வரை வேறு பெயரை கொண்டிருந்தது. டி.ஆர்.பாலு, ஜாபர் சேட் உரையாடலில், 2ஜி விசாரணையில் சிபிஐ ரெய்டுகளின் நேரத்தை திமுக - காங்கிரஸ் முடிவு செய்து, விசாரணையை நீர்த்து போகச் செய்யும் வகையில் செயல்பட்டனர். வரும் நாட்கள் இதுதொடர்பாக மேலும் பலவேறு தகவல்கள் வெளியிடப்படும்” என்று தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், திமுக ஃபைல்ஸ் பாகம் மூன்றின் 2-வது ஆடியோ பதிவை அண்ணாமலை எக்ஸ் வலைதளத்தில் நேற்று வெளியிட்டார். அதில், திமுக எம்பி ஆ.ராசா, முன்னாள் உளவுத்துறை உயர் அதிகாரி ஜாபர் சேட் இடையிலான தொலைபேசி உரையாடல்கள் இடம் பெற்றுள்ளதாக அண்ணாமலை தெரிவித்துள்ளார். உரையாடலில் ஒரு வழக்கு விசாரணை கையாளப்படுவது குறித்து பேசுகிறார்கள். ஆனால், வழக்கின் விவரம் ஆடியோவில் தெரிவிக்கப்படவில்லை.
காங்கிரஸ் அரசு: இதுதொடர்பாக எக்ஸ் வலைதள பதிவில் அண்ணாமலை, “2ஜி வழக்கு குறித்த சிபிஐ விசாரணையை திமுக எவ்வாறு கையாண்டது என்பது குறித்த ரகசியத்தை அம்பலப்படுத்தி வருகிறோம். இதில் சாட்சிகள் தயார் செய்யப்பட்டு, குறிவைக்கப்பட்டு மிரட்டப்பட்டுள்ளனர். இப்படிதான் 2ஜி விசாரணையை காங்கிரஸ் அரசு நடத்தியுள்ளது. இத்துடன் இது முடியப்போவதில்லை” என்று தெரிவித்துள்ளார். அண்ணாமலை அடுத்தடுத்து வெளியிட்ட 2 ஆடியோக்களால் தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT