Published : 18 Jan 2024 06:12 AM
Last Updated : 18 Jan 2024 06:12 AM

ஓட்டுநர் இன்றி இயங்கும் மெட்ரோ ரயிலில் அவசரகால கதவு உட்பட கூடுதல் பாதுகாப்பு வசதிகள்

சென்னை: இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டத்தில், ஓட்டுநர் இல்லாமல் இயக்கப்பட உள்ள ரயில்கள் கூடுதல் பாதுகாப்பு வசதிகளுடன் தயாரிக்கப்பட உள்ளன. சென்னையில் 2-வது கட்டமாக மாதவரம் - சிறுசேரி சிப்காட் (45.4 கி.மீ.), கலங்கரைவிளக்கம் - பூந்தமல்லி பைபாஸ் (26.1 கி.மீ.), மாதவரம் - சோழிங்கநல்லூர் (44.6 கி.மீ.) என 3 வழித்தடங்களில் 116.1 கி.மீ. தூரத்துக்கு மெட்ரோ திட்டப் பணிகள் நடந்து வருகின்றன. 2-ம் கட்ட திட்டத்தில், ரயில் நிலையங்கள் அமைப்பது, ரயில்கள் இயக்கத்தில் புதிய தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படுகின்றன.

3 வழித்தடங்களில் பணிகள் முடிந்தபிறகு, ஓட்டுநர் இல்லாத 138 ரயில்களைஇயக்க மெட்ரோ ரயில் நிறுவனம் திட்டமிட்டுள்ளது. இந்த ரயில் தலா 3 பெட்டிகளை கொண்டிருக்கும். முதல் கட்டமாக, 3 பெட்டிகள் கொண்ட 36 ரயில்களை தயாரிக்க அல்ஸ்டோம் டிரான்ஸ்போர்ட் நிறுவனத்துக்கு மெட்ரோ ரயில் நிறுவனம் ஒப்பந்தம் வழங்கியுள்ளது. இதன்மூலம், அந்த நிறுவனம் 108 ரயில் பெட்டிகளை தயாரித்து வழங்கும்.

ஓட்டுநர் இல்லாத ரயில் என்பதால், பாதுகாப்பு அம்சங்களில் தீவிர கவனம் செலுத்தப்படுகிறது. இதுகுறித்து சென்னை மெட்ரோ ரயில் நிறுவன அதிகாரிகள் கூறியதாவது: 2-ம் கட்ட திட்டத்தில் 116.1 கி.மீ. தூரத்துக்கு பணிகளை முடித்து 2028-ம் ஆண்டில் ரயில்களை இயக்கும்போது,சென்னையில் எங்கு பார்த்தாலும் மெட்ரோ ரயில் சேவை கிடைக்கும். நியாயமான கட்டணத்தில் பயணிகள் விரைவாக பயணம் செய்ய முடியும். பயணிகளின் தேவைக்கு ஏற்ப, 3 அல்லது6 பெட்டிகளுடன் இயக்கப்படும்.

ரயில்கள் இயக்கத்துக்கு ‘சிபிடிசி’ (கம்ப்யூட்டர் பேஸ்டு டிரெய்ன் கன்ட்ரோல்சிஸ்டம்) என்ற புதிய திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. ஓட்டுநர் இல்லாத ரயில்களை இயக்க இந்த சிக்னல் தொழில்நுட்பம் மிகவும் அவசியமானது. ரயில் 80 கி.மீ. வேகத்தில் செல்லும். இதனால், அதிகபட்சமாக 90 விநாடிகளுக்கு ஒரு ரயில் இயக்க முடியும்.

இந்த ரயிலில், பயணிகள் வசதியாக நிற்க இடவசதி, கூடுதல் கண்காணிப்பு கேமராக்கள், செல்போன், மடிக்கணினிகளுக்கு சார்ஜிங் வசதிகள் இருக்கும். ரயிலில் இருபுறமும் முகப்பு பகுதியில் பிரத்யேகமாக அகலமான அவசரகால கதவுகள் அமைக்கப்படும். ஆபத்து காலத்தில் இதன் வழியே பயணிகள் வேகமாக வெளியேற முடியும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x