Last Updated : 17 Jan, 2024 06:54 PM

2  

Published : 17 Jan 2024 06:54 PM
Last Updated : 17 Jan 2024 06:54 PM

எம்ஜிஆருக்கு பதிலாக அரவிந்த்சாமி - அதிமுக பேனர் சலசலப்புக்குப் பின்னால்..!

திருப்பத்தூர்: மறைந்த முன்னாள் முதல்வர் எம்ஜிஆரின் பிறந்தநாளை முன்னிட்டு ஆம்பூர் அருகே வைக்கப்பட்ட பேனரில் எம்ஜிஆர் உருவப்படத்துக்கு பதிலாக அவரது கதாபாத்திரத்தில் நடித்த நடிகர் அரவிந்த்சாமியின் படத்தை அதிமுகவினர் வைத்ததால் சலசலப்பு ஏற்பட்டது.

மறைந்த முன்னாள் முதல்வர் எம்ஜிஆரின் 107-வது பிறந்தநாள் விழா இன்று (ஜன.17) கொண்டாடப்பட்டது. இந்நிலையில், திருப்பத்தூர் மாவட்டம், மாதனூர் மேற்கு ஒன்றிய அதிமுக சார்பில் பல்வேறு இடங்களில் எம்ஜிஆர் பிறந்தநாள் விழா கொண்டாட ஏற்பாடு செய்யப்பட்டது. மாதனூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட கீழ் மிட்டாளம் ஊராட்சியில் அதிமுக கிளை சார்பில் மாதனூர் செல்லும் பிரதான சாலையில் எம்ஜிஆர் பிறந்தநாளை முன்னிட்டு அதிமுகவினர் பிரமாண்டமாக டிஜிட்டல் பேனர் ஒன்றை நேற்றிரவு நிறுவினர். அந்த பேனரில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி, முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணி உள்ளிட்ட அதிமுக நிர்வாகிகளின் படங்கள் இடம் பெற்றிருந்தன.

மேலும், ‘சத்தணவு கண்ட சரித்தர நாயகன்’, ‘பாரத் ரத்னா’, ‘எம்ஜிஆரின் 107-வது பிறந்தநாள் விழா கொண்டாட்டம்’ என வாசகம் எழுதி, அதில் எம்ஜிஆர் உருவப்படத்துக்கு பதிலாக, ஜெயலிதாவின் வாழ்க்கை வரலாறு குறித்து எடுக்கப்பட்ட ‘தலைவி’ படத்தில் எம்ஜிஆர் கதாபாத்திரத்தில் நடித்த நடிகர் அரவிந்த்சாமியின் படத்தை அதிமுகவினர் இடம்பெறச் செய்திருந்தனர்.

நள்ளிரவில் வைக்கப்பட்ட இந்த பேனரை அந்த வழியாக சென்ற சிலர் இன்று அதிகாலையில் பார்த்து எம்ஜிஆருக்கு பதிலாக அரவிந்த்சாமியா என அதிர்ச்சியடைந்தனர். சிலர் இந்த பேனரை போட்டோ எடுத்து அதை சமூக வலைதளங்களில் பதிவிட்டு தங்களது ஆதங்கத்தைப் பகிர்ந்தனர். இந்தச் சம்பவம் வேகமாக வைரல் ஆனது.

சர்ச்சைக்கு முன்.... சர்ச்சைக்குப் பின்
வலதுபுற புகைப்படம் சர்ச்சைக்கு முன் | இடது படம் சர்ச்சைக்குப் பின்

இதற்கிடையே, எம்ஜிஆர் பிறந்தநாளை முன்னிட்டு பேனருக்கு அருகாமையில் அலங்கரிக்கப்பட்டு வைக்கப்பட்டிருந்த எம்ஜிஆர் படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்த மேற்கு ஒன்றிய அதிமுக நிர்வாகிகள் அங்கு வந்தனர். அப்போதுதான், எம்ஜிஆர் படத்துக்கு பதிலாக நடிகர் அரவிந்த்சாமி படம் இடம் பெற்றிருப்பதும், இந்தத் தகவல் சமூக வளைதலங்களில் வைரல் ஆகி சர்ச்சையை கிளப்பி வருவதை அறிந்த அதிமுக நிர்வாகிகள் உடனடியாக சுதாரித்துக்கொண்டு வைக்கப்பட்ட பேனரை அவசர, அவசரமாக கீழே இறக்கினர்.

பிறகு அரவிந்த்சாமி இடம்பெற்றிருந்த படத்துக்கு மேல் எம்ஜிஆர் படத்தை ஒட்டி பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைத்து, பின்னர் எம்ஜிஆரின் பிறந்தநாளை கொண்டாடினர். அதிமுகவினரின் இந்த செயல் நகைப்புக்குண்டானது. இது குறித்து அதிமுக நிர்வாகிகளிடம் கேட்டபோது, “எம்ஜிஆர் தோற்றத்தை இளம்வயது தோற்றமாக பேனரில் இடம்பெற செய்ய ஏற்பாடு செய்தோம். ஆனால், அது நடிகர் அரவிந்த்சாமியின் படமாக மாறியது வருத்தம் அளிக்கிறது” என சமாளித்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x