Published : 17 Jan 2024 04:41 PM
Last Updated : 17 Jan 2024 04:41 PM

ஜல்லிக்கட்டு பாரம்பரியம் | நிர்மலா சீதாராமன் திரித்து கூறுவதாக சு.வெங்கடேசன் காட்டம்

சென்னை: "ஜல்லிக்கட்டு, ஏறு தழுவுதல் எல்லாம் தமிழர்களின் பாரம்பரியமிக்க கலாச்சாரம். இதை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் திரித்து புராணம், இதிகாசத்துக்கு தொடர்பு இருப்பதாகக் கூறி திசை திருப்பும் வேலையை செய்கிறார்" என்று மதுரை மக்களவை உறுப்பினர் சு.வெங்கடேசன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

தைத் திருநாளை முன்னிட்டு மதுரை மாவட்டத்தில் அவனியாபுரம், பாலமேடு ஜல்லிக்கட்டுகள் முறையே ஜனவரி 15, 16 ஆம் தேதிகளில் நடைபெற்று முடிந்துள்ள நிலையில், உலகப் புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு இன்று காலை 7 மணி அளவில் உறுதிமொழி உடன் தொடங்கியது. மாவட்ட ஆட்சியர் சங்கீதா உறுதிமொழி வாசிக்க வீரர்கள் தொடர்ந்து உறுதி எடுத்துக் கொண்டனர். தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கொடி அசைத்து தொடங்கி வைத்தார். வணிகவரித் துறை அமைச்சர் மூர்த்தி, சோழவந்தான் சட்டமன்ற உறுப்பினர் வெங்கடேசன் ஆகியோர் உடன் இருந்தனர். இப்போட்டியை பல்வேறு திரைப் பிரபலங்களும், அரசியல் கட்சித் தலைவர்களும் வந்திருந்தனர்.

ஜல்லிக்கட்டுப் போட்டியைக் காண வந்த மதுரை மக்களவை உறுப்பினர் சு.வெங்கடேசன் கூறியது: “மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தனது ட்விட்டர் பக்கத்தில், புராணமும் இதிகாசமும் ஜல்லிக்கட்டுடன் நெருங்கிய தொடர்பு இருப்பதாக குறிப்பிட்டுள்ளார். இது கண்டனத்துக்குரியது. ஜல்லிக்கட்டு, ஏறு தழுவுதல் எல்லாம் தமிழர்களின் பாரம்பரியம் மிக்க கலாச்சாரம். இதை அவர் திரித்து புராணம், இதிகாசத்துக்கு தொடர்பு இருப்பதாக கூறி திசை திருப்பும் வேலையை செய்கிறார். அவரது இந்த செயல்பாட்டின் மூலம் பிரிவினைவாத அரசியலை செய்கிறார்.

ஏற்கெனவே அவர் தமிழக கோயில் சொத்துகள் கொள்ளைப் போவதாக தவறான தகவல்களை தெரிவித்தார். கீழடி அகழாய்வில் தமிழர்களின் குலதெய்வ வழிபாட்டுக்கான ஆதாரங்கள் கிடைத்துள்ளன. அங்கு மத வழிபாட்டுக்கான ஆதாரங்கள் கிடைக்கவில்லை. இதனால் கீழடி ஆய்வுத் தளத்துக்கு மத்திய அமைச்சர்கள் வருகை திட்டமிட்டே தவிர்க்கப்படுகிறது. தமிழ்ச் சமூகத்தின் ஆணிவேர் கீழடி. தமிழும் திமிலும் தமிழர்களின் அடையாளம்" என்று அவர் கூறினார்.

முன்னதாக, "ஜல்லிக்கட்டு என்ற சனாதனத் திருநாள்" எனும் தலைப்பில் டி.எஸ்.கிருஷ்ணன் என்பவரது எக்ஸ் தளப் பதிவை, மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தனது எக்ஸ் தளத்தில் பகிர்ந்திருந்தார். அதில், ‘சங்க காலத்திலிருந்து கொண்டாடப்படும் ஜல்லிக்கட்டு என்ற ஏறு தழுவுதல் விழாவைப் பற்றி கலித்தொகை விரிவான குறிப்புகளைத் தருகிறது. முதலில் தெய்வ வழிபாடு செய்த பிறகே விழா தொடங்குகிறது. ஸ்டேடியத்தில் அல்ல.

"ஆர் கலி உவகையர் ஒருங்கு உடன் கூடி, தீது இன்று பொலிக!' எனத் தெய்வக் கடி அயர்மார்". அதன்பின் ஜல்லிக்கட்டு அதிகமாகக் கொண்டாடப்படும் பாண்டிய நாட்டின் அரசன் போற்றப்படுகிறான். "புலியொடு வில் நீக்கி, புகழ் பொறித்த கிளர் கெண்டை, வலியினான் வணக்கிய, வாடாச் சீர்த் தென்னவன்" பாடல் 104-ல் காளைகளின் உருவங்களுக்கு நேரடியாகவே தெய்வங்களின் உவமை கூறப்படுகின்றன. பாடல் 105-ல், தங்கள் நிறத்துக்கு மாறுபாடான ஒன்றை உடலில் கொண்டிருக்கும் காளைகளுக்கு உவமையாக தெய்வங்களின் பல அடையாளங்கள் சொல்லப்படுகின்றன. உதாரணமாக

"வள் உருள் நேமியான் வாய் வைத்த வளை போலத் தெள்ளிதின் விளங்கும் சுரி நெற்றிக் காரியும்" - கையில் சக்கரப் படையைத் தாங்கியவனும் கரிய உருக்கொண்டவனுமான திருமால் முழங்கும் சங்கம் போல அடையாளத்தை நெற்றியில் கொண்ட கருமை நிறக் காளை அங்கே வருகிறது. மேலும் "ஒரு குழையவன் மார்பில் ஒண் தார் போல் ஒளி மிகப்பொரு அறப் பொருந்திய செம் மறு வெள்ளையும்", வெள்ளை நிறத்தை உடையவனான பலராமன் மார்பில் அணியும் சிவந்த மாலைபோல சிவப்பு மறு கொண்ட வெள்ளைக் காளை அங்கே இருக்கிறது. பலராமனை ஒரு தோடு மட்டும் அணிந்தவன் என்று இங்கே புலவர் கூறுவதைக் கவனியுங்கள். இதற்கான குறிப்பு புராணங்களில் உள்ளது.

"பெரும் பெயர்க் கணிச்சியோன் மணி மிடற்று அணி போலஇரும் பிணர் எருத்தின் ஏந்து இமில் குராலும்" மழுவைத் தாங்கிய சிவபெருமானின் கழுத்தில் உள்ள நீலம் போல நீலமணிக் கழுத்தைக் கொண்ட குரால் காளையும் உள்ளது. "வேல் வலான் உடைத் தாழ்ந்த விளங்கு வெண் துகில் ஏய்ப்பவாலிது கிளர்ந்த வெண் காற் சேயும்", முருகப் பெருமான் அணியும் வெள்ளை ஆடை போல உடல் முழுவதும் சிவப்பு நிறமாகவும் கால் மட்டும் வெள்ளை நிறமாகவும் உள்ள ஏறு ஒன்றும் அங்கே இருக்கிறது. இப்படி காளைகளின் மாறுபட்ட நிறங்களிலும் நம் கடவுளர்களைக் கண்டனர் சங்க காலத் தமிழர்கள்" என்று தெரிவிக்கப்பட்டிருந்தது கவனிக்கத்தக்கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x