Published : 17 Jan 2024 03:31 PM
Last Updated : 17 Jan 2024 03:31 PM
சென்னை: "தமிழகத்தின் ஜல்லிக்கட்டு மாடுபிடி வீரர்களுக்கு மாதம் ரூபாய் 1000 உதவித்தொகை வழங்கப்படும் என தனது தேர்தல் அறிக்கையில் தெரிவித்திருந்ததை உடனடியாக திமுக அரசு செயல்படுத்த வேண்டும்" என்று அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் தளத்தில், "உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார்மற் றெல்லாம் தொழுதுண்டு பின்செல் பவர்" எனும் கூற்றுக்கு ஏற்ப உலகை வழிநடத்தும் உழவுத் தொழில் செய்யும் உழவர் பெருமக்களுக்கும், அந்த உழவுக்கு துணை நிற்கும் மாடுகளுக்கும் இந்த உழவர் திருநாளில் எனது நன்றிகளையும் வணக்கங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன். ஆட்சிக்கு வந்து மூன்றாண்டுகள் ஆன இந்த திமுக அரசு தமிழகத்தின் ஜல்லிக்கட்டு மாடுபிடி வீரர்களுக்கு மாதம் ரூபாய் 1000 உதவித்தொகை வழங்கப்படும் என தனது தேர்தல் அறிக்கையில் தெரிவித்திருந்ததை உடனடியாக செயல்படுத்த வேண்டும் என்றும் வலியுறுத்துகிறேன்" என்று அவர் பதிவிட்டுள்ளார்.
முன்னதாக, மதுரை மாவட்டம் பாலமேடு ஜல்லிக்கட்டில் நேற்று போட்டியில் மொத்தம் 10 சுற்றுகள் நடந்தது. இந்தப் போட்டியில் அதிக எண்ணிக்கையில், 14 காளைகளை அடக்கி மதுரை பொதும்பு கிராமத்தை சேர்ந்த பிரபாகர் சிறந்த மாடுபிடி வீரர் பரிசு பெற்றார். இவருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் சார்பில் அமைச்சர் பி.மூர்த்தி கார் பரிசு வழங்கினார். கார் பரிசு பெற்ற பிரபாகரன் கூறுகையில், நான் 9-ஆம் வகுப்பு படித்துள்ளேன். அரசு வேலை வழங்கினால் நன்றாக இருக்கும். இதுபோன்ற ஆடம்பரமான கார் பரிசு எங்களுக்கு தேவையில்லை. இந்த கோரிக்கையை தொடர்ந்து சில ஆண்டாகவே வலியுறுத்தி வருகிறோம். உயிரை பணயம் வைத்து விளையாடுகிறோம். கார் பரிசுக்கு பதிலாக அரசு வேலை கிடைத்தால் எங்களுக்கு வாழ்வாதாரத்துக்கு உதவியாக இருக்கும்” என்று கோரிக்கை வைத்திருந்தது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT