Published : 17 Jan 2024 11:35 AM
Last Updated : 17 Jan 2024 11:35 AM

வள்ளலார் சர்வதேச மையத்தை மாற்று இடத்தில் அமையுங்கள்: அரசுக்கு ராமதாஸ் வலியுறுத்தல்

சென்னை: வள்ளலார் சத்திய ஞான சபையில் உள்ள பெருவெளி, பக்தர்கள் கூடுவதற்கான பொதுவெளியாகவே தொடர வேண்டும். வள்ளலார் சர்வதேச மையத்தை இன்னும் கூடுதல் வசதிகளுடன், கூடுதல் பரப்பில் அமைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில், “வாடிய பயிரை கண்ட போதெல்லாம் வாடிய வள்ளலார் அவர்களால் வடலூரில் அமைக்கப்பட்ட சத்திய ஞான சபையின் பெருவெளியின் அமைப்பை சிதைத்து விடக் கூடாது என்று பல்வேறு தரப்பினரும் வலியுறுத்தி வரும் நிலையில், அங்கு வள்ளலார் சர்வதேச மையத்தை அமைக்கும் முயற்சியில் தமிழக அரசு தொடர்ந்து ஈடுபடுவது அதிர்ச்சியளிக்கிறது. வள்ளலார் தொலைநோக்குப் பார்வையுடன் உருவாக்கிய ஓர் அமைப்பை குறுகிய பார்வையுடன் செயல்பட்டு சிதைக்க தமிழக அரசு முயல்வது கண்டிக்கத்தக்கது.

கடலூர் மாவட்டம் மருதூரில் 200 ஆண்டுகளுக்கு முன் பிறந்த, வள்ளலார் என்றழைக்கப்படும் இராமலிங்க அடிகளார், அவரது காலத்திலேயே 1867&ஆம் ஆண்டில் வடலூரில் சத்திய ஞான சபையை அமைத்தார். அதற்காக அப்பகுதியில் உள்ள மக்களிடமிருந்து 106 ஏக்கர் நிலங்களை கொடையாக பெற்றார். அவ்வாறு பெறப்பட்ட நிலத்தில் தென்கோடியில் சத்திய ஞான சபை, தருமசாலை, ஒளித்திருக்கோயில் ஆகியவற்றை அமைத்த வள்ளலார், மீதமுள்ள இடத்தை அவரை பின்பற்றும் பக்தர்கள் கூடுவதற்கான பெருவெளியாக பயன் படுத்தினார். எண்கோண வடிவில் அமைக்கப்பட்ட ஒளிக்கோயிலில் 1872-ஆம் ஆண்டு முதல் தைப்பூச நாளில் ஏற்றப்படும் தீபத்தின் ஒளி ஏழு திரைகளை விலக்கி காட்டப்படும் போது, 70 ஏக்கருக்கும் கூடுதலான பரப்பளவில் உள்ள பெருவெளியில் கூடியுள்ள பக்தர்கள், எந்த தடையும் இல்லாமல் பார்க்க வேண்டும் என்பது தான் அருட்பிரகாச வள்ளலாரின் நோக்கம் ஆகும்.

ஒளிக்கோயிலின் தீப ஒளியை பக்தர்கள் வழிபடுவதற்காக உருவாக்கப்பட்ட பெருவெளியில் தான் இப்போது வள்ளலார் சர்வதேச மையத்தை அமைப்பதற்கான நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டு வருகிறது. வள்ளலாரை பின்பற்றுவோரும், சமரச சுத்தசன்மார்க்க சத்திய சங்கத்தினரும் இம்முடிவை கடுமையாக எதிர்த்து வருகின்றனர்.

ஆனாலும், அவற்றையெல்லாம் பொருட்படுத்தாமல் சர்வதேச மையத்தை அமைப்பதற்கான நடவடிக்கைகளை அரசு தீவிரப்படுத்தி வருகிறது. அதற்கான ஒப்பந்தப்புள்ளிகளும் கோரப்பட்டிருக்கின்றன. இது வள்ளலாரின் பெருமையையும், செல்வாக்கையும் குறைக்கும் செயலாகும்.

வள்ளலாருக்கு சர்வதேச மையம் அமைப்பது வரவேற்கப்பட வேண்டிய திட்டம் என்பதில் பாட்டாளி மக்கள் கட்சிக்கு எந்த மாற்றுக்கருத்தும் இல்லை. வள்ளலாருக்கு சிறப்பு செய்யும் அனைத்து திட்டங்களையும் பா.ம.க. வரவேற்று வருகிறது. ஆனால், வள்ளலார் சர்வதேச மையத்தை பக்தர்கள் கூடுவதற்கான பெருவெளியில் அமைப்பதைத் தான் வள்ளலாரை பின்பற்றுபவர்களால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.

தைப்பூச நாளில் வடலூரில் வள்ளலார் ஜோதி தரிசனத்தைக் காண்பதற்காக 10 லட்சம் முதல் 15 லட்சம் வரையிலான பக்தர்கள் கூடுவார்கள். ஆனாலும், அனைவரும் எந்த சிக்கலும், இடையூறும் இல்லாமல் ஜோதி தரிசனம் கண்டு செல்வதற்கு காரணம் அந்த அகண்ட பெருவெளி தான். அப்பெருவெளியை ஆக்கிரமித்து சர்வதேச மையம் அமைக்கப்பட்டால், ஜோதி தரிசனம் காண வரும் பக்தர்கள் நிற்கவே இடம் இருக்காது;

அதனால், மிகப்பெரிய அளவில் நெரிசல் ஏற்படும். அத்தகைய நிலை தொடர்ந்தால், அடுத்த சில ஆண்டுகளில் தைப்பூசத்திற்காக வடலூர் வரும் பக்தர்களின் எண்ணிக்கை பெருமளவில் குறைந்து விடும். அடுத்த சில ஆண்டுகளில் வடலூர் சத்திய ஞானசபை அதன் பொலிவை இழந்துவிடும். அதைத் தான் வள்ளலாருக்கு செய்யும் சேவையாக நினைக்கிறதா? என்பதை அரசு விளக்க வேண்டும்.

வடலூரில் பார்வதிபுரம் என்ற இடத்தில் சத்திய ஞானசபையை வள்ளலார் அமைத்ததன் பின்னணியில் அவரது தொலைநோக்குப் பார்வை இருந்தது. வள்ளலார் பிறந்த மருதூர், அவர் தங்கியிருந்து நிர்வாகம் செய்த கருங்குழி, அவர் சித்தி அடைந்த மேட்டுக்குப்பம் ஆகியவை சத்தியஞான சபையிலிருந்து வெவ்வேறு திசைகளில் 3 கி.மீ தொலைவில் உள்ளன.

இதற்கு காரணம், எதிர்காலத்தில் சத்திய ஞான சபைக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் போது, சபையின் எல்லையை விரிவாக்கம் செய்ய வேண்டியிருக்கும்; அப்போது தம்முடன் தொடர்புடைய மருதூர், கருங்குழி, மேட்டுக்குப்பம் ஆகிய பகுதிகள் வரை சபையை விரிவுபடுத்தலாம் என்ற தொலைநோக்குப் பார்வை அவருக்கு இருந்தது.

வள்ளலார் சர்வதேச மையத்தை மேட்டுக்குப்பம், கருங்குழி, மருதூர் உள்ளிட்ட பகுதிகளில் அமைக்க தமிழக அரசு தீர்மானித்து இருந்தால், வள்ளலாருக்கு இருந்த தொலைநோக்குப் பார்வை அரசுக்கும் இருப்பதாக உணர்ந்து கொள்ள முடியும். ஆனால், அரசுக்கு அத்தகைய தொலைநோக்குப் பார்வை எதுவும் இருப்பதாகத் தெரியவில்லை. அதனால், தான் வள்ளலார் சர்வதேச மையத்தை பெருவெளியில் அமைத்து அதன் பரப்பையும் குறைத்து, அங்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கையையும் குறைத்து அதன் மூலம் வள்ளலாரின் பெருமையையும் குறைக்க அரசு நினைக்கிறதோ என எண்ணத் தோன்றுகிறது.

வள்ளலார் சத்திய ஞான சபையில் உள்ள பெருவெளி, பக்தர்கள் கூடுவதற்கான பொதுவெளியாகவே தொடர வேண்டும். சத்திய ஞானசபைக்கு எதிரில் நிலக்கரி சுரங்கம் இருந்து மூடப்பட்ட நிலம், கடலூர் சாலை, கும்பகோணம் சாலை, சேத்தியாத் தோப்பு சாலை, விருத்தாசலம் சாலை ஆகிய இடங்களில் மிக அதிக பரப்பில் நிலங்கள் உள்ளன என்பதால், வள்ளலார் சர்வதேச மையத்தை இன்னும் கூடுதல் வசதிகளுடன், கூடுதல் பரப்பில் அமைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்” என வலியுறுத்தியுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x