Published : 17 Jan 2024 09:00 AM
Last Updated : 17 Jan 2024 09:00 AM

சூரியூர் ஜல்லிக்கட்டில் காளைகள் முட்டியதில் 73 பேர் காயம்

பெரிய சூரியூரில் நேற்று நடைபெற்ற ஜல்லிக்கட்டில் அதிக காளைகளை அடக்கிய நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த மாடுபிடி வீரர் கார்த்திக்குக்கு மோட்டார் சைக்கிள் பரிசு வழங்கிய டிஎஸ்பி அறிவழகன்.

திருச்சி: திருச்சி மாவட்டம் பெரிய சூரியூர் கிராமத்தில் நேற்று நடைபெற்ற ஜல்லிக்கட்டில் 678 காளைகளும், 358 மாடுபிடி வீரர்களும் பங்கேற்றனர். இதில், 2 எஸ்ஐ-க்கள் உட்பட 73 பேர் காயம் அடைந்தனர்.

திருச்சி மாவட்டம் பெரிய சூரியூர் கிராமத்தில் நற்கடல் குடி கருப்பண்ண சாமி கோயில் திருவிழாவை முன்னிட்டு நேற்று ஜல்லிக்கட்டு நடைபெற்றது. இதில் திருச்சி, தஞ்சை, புதுக்கோட்டை, பெரம்பலூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த 678 காளைகளும், 358 மாடுபிடி வீரர்களும் பங்கேற்றனர். கோட்டாட்சியர் பார்த்திபன் ஜல்லிக்கட்டை தொடங்கி வைத்தார். அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, இலங்கை கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டைமான், முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர், திருச்சி எஸ்.பி. வருண்குமார் உட்பட பலர் பங்கேற்றனர்.

போட்டியில் கலந்து கொண்டு காளைகளை அடக்கிய மாடுபிடி வீரர்களுக்கும், பிடிபடாத மாடுகளின் உரிமையாளர்களுக்கும் மிக்ஸி, கிரைண்டர், சைக்கிள், கட்டில், பீரோ, தங்கக் காசு, வெள்ளிக் காசு, ரொக்கம் என ஏராளமான பரிசுப் பொருட்கள் வழங்கப்பட்டன. இதில் அதிக காளைகளை அடக்கிய நாமக்கல்லைச் சேர்ந்த கார்த்திக் என்ற வீரருக்கு விழாக் குழு சார்பில் டிஎஸ்பி அறிவழகன் மோட்டார் சைக்கிளை பரிசாக வழங்கினார். இலந்தப்பட்டியைச் சேர்ந்த தமிழ் என்பவரின் காளைக்கு முதல் பரிசாக வீட்டுமனையும், செங்குறிச்சியைச் சேர்ந்த கருப்பையா என்பவரின் காளைக்கு 2-வது பரிசாக தங்க மோதிரமும் வழங்கப்பட்டன.

பாதுகாப்பு பணியில் இருந்த திருவெறும்பூர் போக்குவரத்து எஸ்.ஐ சுரேஷ், துவாக்குடி போக்குவரத்து எஸ்.ஐ ரத்தினம், மாடுபிடி வீரர்கள் 18 பேர், மாட்டின் உரிமையாளர்கள் 32 பேர், பார்வையாளர்கள் 21 பேர் என 73 பேர் காயமடைந்தனர். இதில், 13 பேர் திருச்சி அரசு மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x