Published : 17 Jan 2024 08:48 AM
Last Updated : 17 Jan 2024 08:48 AM
கிருஷ்ணகிரி: தமிழ் மொழியை தேசத்தின் மத்திய ஆட்சி மொழியாக மாற்றினால் தான் மாநிலத்திற்கான உரிய பலன்கள் கிடைக்கும் என பர்கூரில் அதிமுக கொள்கை பரப்புச் செயலாளர் தம்பிதுரை எம்.பி. தெரிவித்தார்.
கிருஷ்ணகிரி மாவட்டம், பர்கூர் அடுத்த சிந்தகம்பள்ளியில் பொங்கல் விழா நடந்தது. இதில் இசை நாற்காலி, கயிறு இழுக்கும் போட்டி, பானை உடைத்தல், கபாடி உள்ளிட்ட பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு அதிமுக எம்.பி தம்பிதுரை கலந்து கொண்டு பரிசுகளை வழங்கினார்.
அப்போது அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், “தமிழ் மொழி கலாச்சாரத்திலும், கால அடிப்படையிலும் பழமையான மொழி. தமிழர் திருநாளான பொங்கல் தின விழாவை இன்று கிராமம், நகரம், பள்ளி, கல்லூரி என அனைத்து தரப்பினரும் மகிழ்ச்சியுடன் கொண்டாடும் சூழல் ஏற்பட்டுள்ளது. தமிழ் மொழியை நாம் கொண்டுவதாலோ, உதட்டளவில் பேசினாலோ மட்டும் போதாது. அண்ணா துரை கூறியது போல், இந்திய அரசியலமைப்பில் உள்ள 8 வது அட்டவணையில் உள்ள தமிழ் மொழியை மத்திய ஆட்சி மொழிகளில் ஒன்றாக ஆக்கினால்தான் படித்த இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு கிடைக்க வழிவகை ஏற்படும்.
வரும் மக்களவைத் தேர்தலில் இதை நடைமுறைப் படுத்தும் வகையில் அரசியல் கட்சிகள் வாக்குறுதி அளித்து வாக்குகள் கேட்க வேண்டும். இதுவரை இருந்த பிரதமர்களில் மோடி-தான் அதிகமாக தமிழ் பற்றி பேசுகிறார். இண்டியா கூட்டணியில் யார் பிரதமரென்று தெரியுமா?, அதுபோல் தான் அதிமுக. கூட்டணியும் பிரதமர் யார் என்பதை கருத்தில் கொள்ளாமல், எங்கள் கருத்துகளை நிறைவேற்றும் வகையில் தான் போட்டியிடுவோம்; வெற்றி பெறுவோம். பாஜக-வுடன் நீண்ட காலமாக கூட்டணியில் இருந்தாலும், 2009, 2014-ம் ஆண்டு தனித்து தான் போட்டியிட்டோம்.
அதில் முறையே, 12, 37 மக்களவைத் தொகுதிகளில் வெற்றி பெற்றோம். தற்போது அதிமுக கூட்டணியில் பாஜக இருந்தால் தான் வெற்றி பெறுவோம் என்ற அவசியம் இல்லை. திருவள்ளுவருக்கு காவி உடை அணிவித்து தமிழக ஆளுநர் வாழ்த்து கூறியிருக்கிறார்கள். ஆளுநர் சட்டத்திற்கு உட்பட்டு செயல்பட வேண்டும். சட்டத்துக்குப் புறம்பாக நடந்து கொள்வது நல்லதல்ல” என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT