Last Updated : 16 Jan, 2024 08:00 PM

 

Published : 16 Jan 2024 08:00 PM
Last Updated : 16 Jan 2024 08:00 PM

நெல்லை மாவட்டத்தில் வெள்ள பாதிப்புகளால் களையிழக்கும் காணும் பொங்கல்!

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டத்தில் மழை வெள்ள பாதிப்புகளால் பொங்கல் பண்டிகை களையிழந்து காணப்பட்டது. தாமிரபரணி கரையோரங்கள், மாவட்ட அறிவியல் மையங்களுக்கு மக்கள் உற்சாகமாக செல்ல முடியவில்லை.

திருநெல்வேலி மாவட்டத்தில் கடந்த மாதம் 17, 18-ம் தேதிகளில் தொடர்ந்து பெய்த அதிகனமழையால் தாழ்வான பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்தது. தாமிரபரணியில் ஏற்பட்ட வெள்ளத்தால் கரையோர பகுதிகள் பெருமளவுக்கு பாதிக்கப்பட்டிருந்தன. இந்த வெள்ள பாதிப்புகளில் இருந்து மக்கள் மீண்டிருந்தாலும், பாதிப்புகளின் சுவடுகள் ஆங்காங்கே இன்னமும் இருக்கின்றன. திருநெல்வேலி கொக்கிரகுளத்தில் தாமிரபரணி ஆற்றங்கரையிலுள்ள மாவட்ட அறிவியல் மையம் மழை வெள்ளத்தால் பெரும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளது.

இங்குள்ள அறிவியல் உபகரணங்கள் பலவும் சேதமடைந்துள்ளதாக இம்மையத்திலுள்ளவர்கள் தெரிவிக்கிறார்கள். இதனால் கடந்த ஒரு மாதமாக அறிவியல் மையம் திறக்கப்படாமல் உள்ளது. இது பார்வையாளர்களுக்கு ஏமாற்றமாக இருக்கிறது. வழக்கமாக ஆண்டுதோறும் கிறிஸ்துமஸ், புத்தாண்டு, பொங்கல் விடுமுறை நாட்களிலும், காணும் பொங்கலன்றும் திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்களில் இருந்து ஏராளமானோர் மாவட்ட அறிவியல் மையத்துக்கு வந்து உற்சாகமாக பொழுதை கழிப்பார்கள்.

ஆனால் இந்த ஆண்டு மழை வெள்ள பாதிப்புகளால் அறிவியல் மையம் மூடப்பட்டதால் விடுமுறைக்கு இங்கு யாரும் வரமுடியவில்லை. அறிவியல் மையம் மூடப்பட்டுள்ள விவரம் தெரியாமல் காணும் பொங்கலையொட்டி தங்கள் குடும்பத்தினருடன் வந்திருந்த பலரும் ஏமாற்றம் அடைந்தனர். சிலர் தாங்கள் கொண்டு வந்த உணவை அறிவியல் மையத்தின் வெளியே அமர்ந்து சாப்பிட்டுவிட்டு திரும்பினர்.

திருநெல்வேலி கிருஷ்ணாபுரத்திலுள்ள வெங்கடாஜலபதி கோயிலுக்கும் ஆண்டுதோறும் காணும் பொங்கலன்று திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களை சேர்ந்தவர்கள் குடும்பம் குடும்பமாக வந்து இங்குள்ள சிற்பங்களையும், கோயில் கட்டுமான நுணுக்கங்களையும் பார்த்து வியப்படைந்து செல்வார்கள். ஆனால் இந்த கோயிலில் கடந்த சில ஆண்டுகளுக்குமுன் இருபிரிவினருக்கு இடையே ஏற்பட்ட மோதல் காரணமாக காணும் பொங்கலன்று இங்கு வருவதை பலரும் தவிர்த்துவிட்டனர். இதனால் இந்த கோயில் வளாகம் வெறிச்சோடியிருந்தது.

திருநெல்வேலியில் தாமிரபரணி பெருக்கெடுத்ததால் கரையோர பகுதி முழுக்க குப்பைகளும், காய்ந்து சருகான செடி, கொடிகளும், பிளாஸ்டிக் கழிவுகளும் நிரம்பியிருக்கின்றன. இதனால் காணும் பொங்கலன்று தாமிரபரணி கரையோரம் மற்றும் படித்துறைகளுக்கு சென்று உற்சாகமாக பொழுதை கழிக்க முடியவில்லை என்று சிலர் ஏமாற்றம் தெரிவித்தனர்.

பாளையங்கோட்டை வ.உ.சி. மைதானம் உள்ளிட்ட மாநகராட்சி பூங்காக்கள்தான் காணும் பொங்கலுக்கு பலருக்கு அடைக்கலம் அளித்திருந்தது. பலர் குழந்தைகளுடன் வந்து இங்கு பொழுதை செலவிட்டனர். திருநெல்வேலி மாநகரில் பெரும்பாலான சாலைகளும், கடைவீதிகளும் வெறிச்சோடியிருந்தன. வாகன போக்குவரத்து குறைவாக காணப்பட்டது. அரசு அலுவலகங்கள், கல்வி நிறுவனங்கள் மூடப்பட்டிருந்த நிலையில் தனியார் நிறுவனங்கள் உள்ளிட்ட கடைகளும் அடைக்கப்பட்டிருந்தன.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x