Published : 16 Jan 2024 07:00 PM Last Updated : 16 Jan 2024 07:00 PM
பெண்கள் அவிழ்த்துவிட்ட காளைகள் முதல் தவிர்க்கப்பட்ட சாதி பெயர் வரை: பாலமேடு ஜல்லிக்கட்டு ஹைலைட்ஸ்!
மதுரை: பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டியில் பெண்கள் காளை மாடுகளை வாடிவாசலில் இருந்து அவிழ்த்து விட்டனர். மேலும், உயர் நீதிமன்றம் அறிவுரைப்படி, இந்த ஆண்டு வாடிவாசலில் காளைகள் அவிழ்த்து விடப்படும்போது சமுதாய பெயர் சொல்வது தவிர்க்கப்பட்டது.
ஜல்லிக்கட்டு போட்டிகளில் கடந்த காலத்தில் ஆண்கள் மட்டுமே பங்கேற்று வந்தனர். ஆண்களுக்கான விளையாட்டாகவே இந்தப் போட்டி பார்க்கப்பட்டது. பார்வையாளர்களும் பெரும்பாலும் ஆண்களாகவே இருந்து வந்துள்ளனர். சமீப காலமாக, பார்வையாளர்கள் மட்டுமல்லாது காளைகளை அவிழ்த்து விடும் மாடுபிடி வீரர்களாகவும் பெண்கள் அதிகளவு ஜல்லிக்கட்டு களத்துக்கு வர ஆரம்பித்துள்ளனர். கல்லூரி மாணவர்கள், குடும்ப பெண்கள் எல்லோரும் தற்போது மதுரை பகுதிகளில் ஜல்லிக்கட்டு காளைகளை வளர்க்க ஆரம்பித்துவிட்டார்கள்.
ஆண்கள் காளைகளை வளர்த்து வாடிவாசலில் அவிழ்த்தாலும் பெரும்பாலும், பெண்களே வீடுகளில் அந்த காளைகளை பராமரித்து வந்தார்கள். தற்போது அவர்கள் பராமரித்த அந்த காளைகளை அவர்களே வாடிவாசலுக்கு அழைத்து வந்து அவிழ்த்துவிடுகிறார்கள். இதனை அவர்கள் குடும்பத்தினர் உற்சாகப்படுத்துகிறார்கள். அவனியாபுரம் ஜல்லிக்கட்டில் மட்டும் இந்த ஆண்டு 10-க்கும் மேற்பட்ட காளைகளை பெண்கள் வாடிவாசலில் அவிழ்த்துள்ளனர். பாலமேடு ஜல்லிக்கட்டு ஹைலைட்ஸ்:
வாடிவாசலில் காளைகளை அவிழ்ப்பதோடு நிற்காமல் ஜல்லிக்கட்டு மைதானத்தில் காளையின் முன்னும், பின்னுமாக ஓடிச்சென்று அந்த காளைகளை பெண்கள் உற்சாகப்படுத்தினர்.
பாலமேட்டில் வாடிவாசலில் காளைகளை அவிழ்த்த பெண்களுக்கு நிச்சயப்பரிசுடன் விலையுர்ந்த சைக்கிளும் வழங்கப்பட்டன. வெற்றிப்பெற்றால் தங்க காசு உள்ளிட்ட மற்றப் பரிசுகளும் வழங்கப்பட்டன.
ஜல்லிக்கட்டு போட்டிகளில் சமுதாய பெயருடன் காளை உரிமையாளர்களின் பெயர்களை குறிப்பிட்டு அவிழ்த்துவிடுவது இதுவரை வழக்கமாக கடைபிடிக்கப்பட்டது. உயர்நீதிமன்றம் அறிவுரைப்படி, இந்த ஆண்டு வாடிவாசலில் அவிழ்த்துவிடப்படும்போது சமுதாய பெயர் சொல்வது தவிர்க்கப்பட்டது.
மதுரையைச் சேர்ந்த சத்தியா என்பவர் சென்னை கீழ்பாக்கத்தில் போக்குவரத்து காவல் பிரிவில் காவலராக பணிபுரிந்து வருகிறார். அவர் மதுரையில் ஜல்லிக்கட்டு காளை வளர்த்து வருகிறார். பாலமேடு ஜல்லிக்கட்டில் தனது காளையை நெற்றியில் முத்தமிட்டு தனது காளையை அவிழ்த்துவிட்டார்.
வாடிவாசல் பின்புறம் புறவாசலில் அடிக்கடி மாடுகள் படுத்துக்கொண்டு எழுந்து வாடிவாசலுக்கு வர அடம்பிடித்தன. அதனால், அடிக்கடி காளைகள் அவிழ்த்துவிடுவதில் தாமதம் ஏற்பட்டது. காளை ஒன்று வாடிவாசல் பின்புறம் புறவாசல் தடுப்பு கம்புகளை உடைத்துதெறிந்து பாதுகாப்பிற்கு நின்றிருந்த போலீஸார் மற்றும் முன்னால் நின்ற காளை உரிமயைாளர்களை தூக்கி வீசி பந்தாடியது. அதில் 4-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். அதற்குள் போலீஸார், மற்ற காளை உரிமையாளர்கள் காளையை பிடித்துவிட்டனர்.
பாலமேட்டில் தள்ளுவாடி முறையில் உள்ளூர் அரசியல் பிரமுகர்கள் தங்கள் ஆதரவாளர்கள் காளைகளை வாடிவாசலில் அவிழ்த்துவிட்டனர். அதனை பாதுகாப்பு நின்றிருந்த போலீஸார் கைகட்டி வேடிக்கைதான் பார்த்துக் கொண்டிருந்தனர்.
நடமாடும் கழிப்பறைகள் வைக்கப்பட்டும் அவற்றை சுகாதாரமாக பராமரிக்காததால் பார்வையாளர்கள் அதனை பயன்படுத்த முடியாமல் சிரமம் அடைந்தனர். அதன் கழிவு நீர் அப்படியே திறந்த வெளியில் வெளியேற்றப்பட்டது தூர்நாற்றத்தை ஏற்படுத்தியது. கழிப்பறை வசதிகள் ஏற்படுத்தப்பட்டதாக கூறினாலும், அவை பெயரளவுக்கே ஏற்படுத்தப்பட்டிருந்தன.
பாலமேடு ஜல்லிக்கட்டு தொடங்குவதற்கு முன், கடந்த ஆண்டு இதே ஜல்லிக்கட்டில் உயிரிழந்த மாடுபிடி வீரர் அரவிந்த் ராஜிக்கு அவரது வீட்டில் விழா கமிட்டி சார்பில் முதலாம் ஆண்டு நினைவஞ்சலி செலுத்தப்பட்டது.
புகழ்பெற்ற பாலமேடு ஜல்லிக்கட்டுப் போட்டியில் 14 காளைகளை அடக்கிய மாடுபிடி வீரர் பிரபாகரனுக்கு முதல் பரிசாக கார் வழங்கப்பட்டது. சிறந்த காளையாக புதுக்கோட்டை மாவட்டம் ராயவயல் பகுதியைச் சேர்ந்த மருதுபாண்டி என்பவரின் `சின்னக்கருப்பு' என்ற காளை தேர்ந்தெடுக்கப்பட்டது. காளையின் உரிமையாளருக்கு முதல் பரிசாக கார் வழங்கப்பட்டது. இந்த ஜல்லிக்கட்டுப் போட்டியில் 49 பேர் காயம் அடைந்தனர். > முழு விவரம்: சிறந்த காளை ‘சின்னக்கருப்பு’, சிறந்த வீரர் பிரபாகரனுக்கு கார் பரிசு - பாலமேடு ஜல்லிக்கட்டுப் போட்டியில் 49 பேர் காயம்
WRITE A COMMENT