Last Updated : 16 Jan, 2024 05:26 PM

32  

Published : 16 Jan 2024 05:26 PM
Last Updated : 16 Jan 2024 05:26 PM

ஆரியம் vs திராவிடம்: திருவள்ளுவரை மீண்டும் விவாதப் பொருளாக்கிய ஆளுநர் ஆர்.என்.ரவி!

சென்னை: கடந்த சில ஆண்டுகளாகவே தமிழக அரசியலில் வள்ளுவரை மையமிட்டு, ஆரிய - திராவிட விவாத நெருப்பு பற்ற வைக்கப்படுகிறது. அதற்கு மீண்டும் தூபம் போட்டிருக்கிறார் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி. தமிழக விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி, “ஆரியப் பழமை மறையட்டும், சமத்துவப் பொங்கல் மலரட்டும்” எனக் கூறி பொங்கல் வாழ்த்தைப் பதிவிட்டிருந்தார். இதற்குப் பதிலடி கொடுக்கும் வகையில், திருவள்ளுவர் தினமான இன்று, ஆளுநர் மாளிகை வெளியிட்டிருக்கும் செய்திக் குறிப்பில், “திருவள்ளுவர் தினத்தில், ஆன்மிக பூமியான நமது தமிழ்நாட்டில் பிறந்த பெரும்புலவரும், சிறந்த தத்துவஞானியும் பாரதிய சனாதன பாரம்பரியத்தின் பிரகாசமான துறவியுமான திருவள்ளுவருக்கு எனது பணிவான மரியாதையைச் செலுத்துகிறேன்...” எனக் குறிப்பிட்டு, ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவிப்பதாகப் பதிவிடப்பட்டுள்ளது.

அந்தப் பதிவில், காவி நிற உடை அணிந்த திருவள்ளுவர் படம் இடம்பெற்றுள்ளது. இதற்கு திராவிட சிந்தாந்ததைப் பின்பற்றும் சிலர், கருப்பு நிற உடை அணிந்த திருவள்ளுவர் படத்தைப் பதிவிட்டு, ஆளுநர் கருத்தை விமர்சித்து வருகின்றனர். குறிப்பாக, தமிழக முதல்வர் ஸ்டாலின், “பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்ற சமூக நீதிக் கோட்பாட்டையும் - முயற்சி மட்டுமே வெற்றியைத் தரும் என்ற தன்னம்பிக்கை ஊக்கத்தையும் - அறன் எனப் பட்டதே இல்வாழ்க்கை என்ற கருத்தியலையும் வழிகாட்டியவர் வள்ளுவர். 133 அடியில் சிலையும் - தலைநகரில் கோட்டமும் அமைத்துப் போற்றும் குறளோவியத் தமிழ்நாட்டில் வள்ளுவரை யாரும் கறைப்படுத்த முடியாது” என தன் எக்ஸ் தளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

அதேபோல்,செய்தியாளர் சந்திப்பில் பேசிய திமுக எம்.பி கனிமொழி, “ஆளுநருக்கு திருக்குறள் மற்றும் திருவள்ளுவர் பற்றி அடிப்படை புரிதல் இல்லை. ‘திருவள்ளுவர் துறவி’ என இதற்கு முன்பு எந்தத் தகவலும் வெளியானது இல்லை. அவருக்கு திருமணமாகி மனைவி இருந்ததாகவும் சொல்லப்படுகிறது. மேலும், ‘இல்லறம்’ பற்றி அவரைவிட கவித்துவத்துடன் எழுதியவர்கள் யாருமில்லை. திருக்குறளில் எந்த மத அடையாளமும் இருந்ததில்லை. எனவே, அவரின் மீது சனாதனத்தையோ, இந்துத்துவத்தையோ திணிக்க முடியாது.

மதத்தைக் கடந்து மனிதத்தைப் பேசுவதுதான் திருக்குறள். மனிதநேயத்துக்கு என ஒரு நிறமிருந்தால், அதைத்தான் திருவள்ளுவரின் நிறமாக சொல்ல வேண்டும். திருவள்ளுவருக்கு அடுத்ததாக மனிதநேயத்தின் அடையாளம் எனப் பெரியாரை சொல்லலாம். எனவே, கருப்பை வேண்டுமானால் திருவள்ளுவர் நிறமாக இருக்கலாமே தவிர வேறு எந்த நிறத்துக்கும் வாய்ப்பில்லை” என்று கனிமொழி பேசியிருந்தார்.

கடந்த 2022-ம் ஆண்டு அக்டோபர் மாதம் டெல்லியில் நடைபெற்ற திருவள்ளுவர் சிலை திறப்பு விழாவில் பேசிய தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, “திருவள்ளுவர் உள் ஒளி மிக்க ஆன்மிகவாதி” எனக் கருத்து தெரிவித்தது கடுமையாக விமர்சிக்கப்பட்டது. இந்த நிலையில், தற்போது மீண்டும் திருவள்ளுவர் பெயரில் ஆரியம் Vs திராவிடம் என்னும் தீயை மூட்டியுள்ளார் ஆளுநர் ஆர்.என்.ரவி.

‘பாரதிய சனாதன பாரம்பரியத்தின் பிரகாசமான துறவி’ என வள்ளுவரை ஆளுநர் குறிப்பிட்டது சர்சையாகியுள்ள நிலையில், பிரதமர் மோடியும் தமிழக பாஜக தலைவரான அண்ணாமலையும் ஆன்மிகம் மற்றும் சனாதனத்தின் அடையாளத்தை வள்ளுவருக்குக் கொடுக்காமல் ‘தலைசிறந்த தமிழ்ப் புலவர்’ எனும் தன்மையில் அணுகியிருப்பதும் குறிப்பிடத்தக்கது.

இப்படியாக, ஒவ்வொரு தரப்பினரும் காவி, வெள்ளை, கருப்பு என திருவள்ளுவர் மீது பல சாயங்களைப் பூசுகின்றனர். ஆனால், திருவள்ளுவரோ “பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் சிறப்பொவ்வா செய்தொழில் வேற்றுமை யான்” என அனைவரும் சமம் என்னும் உயரிய மானுட கோட்பாட்டைத் தான் பேசியிருக்கிறார் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x