Last Updated : 15 Jan, 2024 01:49 PM

1  

Published : 15 Jan 2024 01:49 PM
Last Updated : 15 Jan 2024 01:49 PM

அவனியாபுரம் ஜல்லிக்கட்டு | 6 சுற்றுகள் முடிவில் 510 காளைகள் அவிழ்ப்பு; 300 மாடுபிடி வீரர்கள் பங்கேற்பு: 40 பேர் காயம்

மதுரை அவனியாபுரத்தில் நடந்து வரும் ஜல்லிக்கட்டுப் போட்டியில் சீறிப்பாயும் காளைகளை அடக்கும் மாடுபிடி வீரர்கள்

மதுரை: மதுரை அவனியாபுரத்தில் நடைபெற்று வரும் ஜல்லிக்கட்டுப் போட்டியில் 6 சுற்றுகள் முடிந்த நிலையில் 510 காளைகள் அவிழ்க்கப்பட்டுள்ளன. 300 மாடுபிடி வீரர்கள் பங்கேற்று சீறிப்பாய்ந்த காளைகளை அடக்கினர். காளைகள் முட்டியதில் இதுவரை 40 பேர் காயம காயமடைந்துள்ளனர்.

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஒவ்வொரு ஆண்டும் மதுரை மாவட்டம் அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூரில் உலக புகழ்பெற்ற ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறும். தமிழக அரசு சார்பில் நடத்தப்படும் முதல் ஜல்லிக்கட்டுப்போட்டி அவனியாபுரத்தில் இன்று நடைபெற்று வருகிறது. அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டிக்கு 2,400 காளைகளும், 1318 மாடுபிடி வீரர்களும் ஆன்லைனில் முன்பதிவு செய்திருந்தனர். இதிலிருந்து போட்டியில் பங்கேற்க, ஆயிரம் காளைகளுக்கும் 600 மாடுபிடி வீரர்களும் தேர்வு செய்யப்பட்டனர்.

உறுதிமொழி ஏற்பு: முன்னதாக போட்டிகள் துவங்குவதற்கு முன்பு, மாவட்ட ஆட்சியர் சங்கீதா, தமிழக பத்திரப்பதிவு மற்றும் வணிகவரித்துறை அமைச்சர் பி.மூர்த்தி, அதிமுக எம்எல்ஏ ராஜன் செல்லப்பா, மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள், காவல்துறை அதிகாரிகள், மாடுபிடி வீரர்கள் பாதுகாப்பு உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். பின்னர் மாவட்ட ஆட்சியர் அமைச்சர் மூர்த்தி ஆகியோர் கொடியசைத்து அவனியாபுரம் ஜல்லிக்கட்டுப் போட்டையை துவக்கி வைத்தனர். முதல் சுற்றில் 50 வீரர்கள் பங்கேற்றனர்.

பரிசு மழை: இப்போட்டியில் பங்கேற்று காளைகளை அடக்கி வெற்றி பெறும் வீரர்களுக்கு தங்ககாசு துவங்கி ஃபேன், மிக்ஸி, கிரைண்டர், கட்டில், சைக்கிள், சில்வர் பாத்திரங்கள் உள்ளிட்ட ஏராளமானப் பரிசுப்பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. ஒரு மணி நேரத்துக்கு ஒரு சுற்று வீதம் நடைபெற்று வரும் போட்டியில், சுற்றுக்கு தலா 50 வீரர்கள் வீதம் இறக்கப்பட்டு வருகின்றனர்.

வீரர்களுக்கு QR கோடுடன் கூடிய அனுமதிச்சீட்டு: ஒவ்வொரு சுற்றிலும் சிறந்த மாடுபிடி வீரர்கள் தேர்வு செய்யப்பட்டு அவர்கள் இறுச்சுற்றில் பங்கேற்க அனுமதிக்கப்படுவர். காலை 7 மணிக்குத் துவங்கிய போட்டிகள் மாலை 4 மணி வரை நடத்தப்படும். கூடுதல் நேரம் ஒதுக்கீடு செய்வது குறித்து மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் முடிவு செய்யப்பட்டும். ஒவ்வொரு சுற்றிலும் பங்கேற்கும் வீரர்களுக்கு பல்வேறு வண்ணங்களில் சீருடை வழங்கப்பட்டுள்ளன. மேலும் முறைகேடுகளைத் தவிர்க்கும் வகையில் வீரர்களுக்கு QR கோடுடன் கூடிய அனுமதிச்சீட்டு வழங்கப்பட்டுள்ளது.

6 சுற்றுகள் முடிவில்... போட்டி துவங்கி பகல் 1 மணி வரை 6 சுற்றுகள் முடிவடைந்துள்ளன. இதுவரை 510 காளைகள் அவிழ்க்கப்பட்டுள்ளன. இந்த 6 சுற்றுகளில் 300 மாடுபிடி வீரர்கள் பங்கேற்றுள்ளனர். இதுவரை 4 காளைகளை அடக்கி, தங்க முனியான்டி முதலிடத்திலும், தலா 3 காளைகளை அடக்கிய மகேந்திரன் என்ற புகழ் மற்றும் சிவா ஆகியோர் இரண்டாவது இடத்திலும் உள்ளனர்.

சேகத்தில் முடிந்த 6-வது சுற்று: விறுவிறுப்பாக நடைபெற்று வந்த போட்டியின் 6-வது சுற்றில் 25 ஆயிரம் ரூபாய் பரிசுத் தொகை அறிவிப்புடன் காளை ஒன்று களமிறங்கியது. இந்த காளையை பழனியை அடுத்துள்ள நெய்க்காரப்பட்டியைச் சேர்ந்த மாடுபிடி வீரர் சிவா அடக்கி ரொக்கப் பரிசு ரூ.25 ஆயிரத்தைப் பெற்றார். ரொக்கப் பரிசு வழங்கிய நிலையில், அடுத்த வந்த காளை எதிர்பாராத விதமாக சிவாவின் நெஞ்சில் முட்டியது. இதில் படுகாயமடைந்த சிவா மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட சம்பவம் அவனியாபுரத்தில் சோகத்தை ஏற்படுத்தியது.

40 பேர் காயம்: அவனியாபுரம் ஜல்லிக்கட்டுப் போட்டியில் இதுவரை காவல் ஆய்வாளர் உள்பட 40 பேர் காயமடைந்துள்ளனர். இவர்களில் 6 பேர் மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலும், வாடிவாசல் பகுதியில் 5-க்கும் அதிகமான ஆம்புலன்ஸ் வாகனங்கள் தயார் நிலையில் நிறுத்தவைக்கப்பட்டுள்ளன. அந்தப்பகுதியில், காயமடைந்த வீரர்களுக்கு சிகிச்சையளிக்கும் வகையில், 20-க்கும் மேற்பட்ட மருத்துவக்குழுவினரும் தயார் நிலையில் உள்ளனர்.

நிலம் கொடுத்த ஆயி அம்மாளுக்கு பாராட்டு: மதுரையில் நடைபெற்று வரும் அவனியாபுரம் ஜல்லிக்கட்டுப் போட்டியில், யா.கொடிக்குளம் அரசுப் பள்ளிக்கு நிலம் கொடையளித்த வங்கிப் பணியாளர் ஆயி அம்மாள் என்ற பூரணத்துக்கு கரவொலி எழுப்பி பாராட்டு தெரிவிக்கப்பட்டது.

அவனியாபுரம் ஜல்லிக்கட்டில் அவிழ்க்கப்பட்ட விசிக தலைவர் திருமாவளவனின் காளை, இலங்கை கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டைமான் காளை உள்பட பல காளைகள் வெற்றி பெற்று பரிசுகளை வென்றன. அவனியாபுரம் ஜல்லிக்கட்டுப் போட்டியில் 800-க்கும் அதிகமான காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x