Published : 15 Jan 2024 06:20 AM
Last Updated : 15 Jan 2024 06:20 AM
சென்னை: புதிய கல்வி கொள்கை பாடத்திட்டங்களை எதிர்ப்பது போல திமுக நாடகமாடிவிட்டு, சிபிஎஸ்இ பரிந்துரைகளை தமிழகத்தில் அறிமுகம் செய்திருப்பதாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை விமர்சித்துள்ளார். இதுகுறித்து அண்ணாமலை தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் கூறியிருப்பதாவது: மத்திய அரசு கொண்டு வரும் நலத்திட்டங்கள், தமிழகத்தின் ஒவ்வொரு மக்களுக்கும் சென்று சேர வேண்டும் என்பதே தமிழக பாஜகவின் விருப்பம்.
அதன்படி, உலகத் தரத்திலான, தொலை நோக்குச் சிந்தனையுடன் உருவாக்கப்பட்ட, மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கையின் முழு பலன்களும் தமிழக மாணவர்களுக்குக் கிடைக்க வேண்டும் என்பதற்காக பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறோம்.
பாஜக சார்பாக நன்றிள்: மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கைப் பாடத்திட்டங்களை எதிர்ப்பதுபோல நாடகமாடிவிட்டு, படிப்படியாக மத்திய அரசின் சிபிஎஸ்இ பரிந்துரைகளை தமிழகத்தில் அறிமுகப்படுத்தி வரும் திமுக அரசுக்கு, தமிழக பாஜக சார்பாக நன்றி. எங்கே தங்கள் வேஷம் கலைந்து மக்களுக்கு உண்மை தெரிந்து விடுமோ என்ற பதட்டத்தில், தமிழக அரசின் செய்தி மக்கள் தொடர்புத் துறையின் வழியாக திமுக ஒரு அறிக்கை வெளியிட்டிருக்கிறது.
அறிக்கையில் பல பிழைகள் இருப்பதைக் கூடக் கவனிக்காமல் அவசரகதியில் அறிக்கை வெளியிட வேண்டிய அவசியம் என்ன என்றுதான் தெரியவில்லை. செயற்கை நுண்ணறிவு பயன்பாடு குறித்து 2018-ம் ஆண்டிலேயே அறிவிக்கப்பட்டு, 2019-ம் ஆண்டுக்கான தேசியக் கல்விக் கொள்கை மாதிரி வடிவத்தில் குறிப்பிடப்பட்டு, பின்னர் 2020-ம் ஆண்டு ஜூலை மாதத்தில் மத்திய அரசு வெளியிட்ட புதிய கல்விக் கொள்கையில் இடம்பெற்றுள்ளது. ஆனால், இது தொடர்பான தமிழக அரசின் கொள்கை வெளியிடப்பட்டது 2020-ம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில்தான்.
தேசியக் கல்விக் கொள்கை உருவாக்கப்படும் முன்பாக தமிழகத்தில் இதற்கான கொள்கை உருவாக்கினோம் என்று அறிக்கையில் கூறப்பட்டிருப்பது பொய் என்பது இதன்மூலம் நிரூபணமாகியிருக்கிறது. தங்கள் அறிக்கையில் மாதத்தைக் குறிப்பிடாமல் மறைத்துவிட்டால் மக்களை ஏமாற்றி விடலாம் என்று நினைத்து விட்டீர்களா, 1967-ம் ஆண்டு அன்றைய பம்பாயிலும், பின்னர் 1990-களின் பிற்பகுதியில் பெங்களூர், சென்னை, ஹைதராபாத் உள்ளிட்டபல மாநகரங்கள் தகவல் தொழில்நுட்பத் துறையில் வளர்ச்சியடையத் தொடங்கின.
தவறான தகவல்: திறமை வாய்ந்த தமிழக இளைஞர்கள் மூலம், தமிழகம் இந்தத் துறையில் முன்னேறி வருகிறது. ஆனால், மற்ற மாநிலங்களுக்கு தகவல் தொழில்நுட்பம் என்றால்என்னவென்றே தெரியாது என்றரீதியில் திமுக அறிக்கை வெளியிட்டிருப்பது நகைப்புக்குரியது.
இனியாவது நிர்ப்பந்தங்களுக்குப் பயந்து அவசரகதியில் தவறான தகவல்களுடன் அறிக்கை வெளியிட வேண்டாம். புதிய கல்விக் கொள்கையின் அம்சங்களை தமிழக மாணவர்களுக்குக் கொண்டு செல்வதற்காக, தமிழக பாஜக சார்பாக மீண்டும் ஒரு முறை நன்றி. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT