Published : 14 Jan 2024 04:49 PM
Last Updated : 14 Jan 2024 04:49 PM
புதுக்கோட்டை: புதுக்கோட்டை தனி மாவட்டமாகி 50 ஆண்டுகள் நிறைவடைந்து இன்று ( ஜன.14 ) 51-ம் ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது.
ஒருங்கிணைந்த திருச்சி மாவட்டத்தில் இருந்த புதுக்கோட்டை கோட்டம் மற்றும் தஞ்சாவூர் மாவட்டத்தின் சில பகுதிகளை பிரித்து புதுக்கோட்டை மாவட்டம் கடந்த 1974 ஜன.14-ல் உருவாக்கப்பட்டது. புதிய மாவட்டம் தோற்றுவித்ததற்கான அடையாளமாக மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் நினைவுத் தூண் அமைக்கப்பட்டது. புதுக்கோட்டையில் மன்னராட்சி நிர்வாக முறை இருந்த போது சுமார் 100 ஏக்கரில் பயன்படுத்தப்பட்ட புதிய அரண்மனையில்தான் தற்போது ஆட்சியர் அலுவலகம் செயல்படுகிறது.
50 ஆண்டுகளுக்கு முன்பு உருவாக்கப்பட்ட புதுக்கோட்டை மாவட்டத்தில் புதுக்கோட்டை, அறந்தாங்கி மற்றும் இலுப்பூர் ஆகிய கோட்டங்களில் 12 வட்டங்கள் உள்ளன. இம்மாவட்டத்தில் 2 நகராட்சிகள், 8 பேரூராட்சிகள் மற்றும் 497 ஊராட்சிகள் உள்ளன. 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி 16.18 லட்சம் பேர் உள்ளனர். விவசாயத்தை முதன்மையாகக் கொண்டுள்ள இம்மாவட்டத்தில் தொல்லியல் அடையாளங்கள், வரலாற்றுச் சின்னங்கள் நிறைந்துள்ளன. எனினும், தொழில் வளர்ச்சியை மேம்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இது குறித்து ஓய்வு பெற்ற கல்லூரி உதவி பேராசிரியரும் சமூக ஆர்வலருமான எஸ்.விஸ்வநாதன் கூறியது: புதுக்கோட்டை மாவட்டமானது காவிரி நீர், நிலத்தடி நீர், மழை நீர் போன்ற நீராதாரங்களைப் பயன்படுத்தி வேளாண் தொழிலையே முக்கியமாகக் கொண்டுள்ளது. கல்வி, சுகாதாரத்தில் முன்னோடி மாவட்டங்களில் ஒன்றாகவும் விளங்குகிறது. ஆனால், தொழில் வளர்ச்சியில் பெரியளவில் முன்னேற்றம் இல்லை. புதுக்கோட்டை அருகே உருவாக்கப்பட்ட சிப்காட் தொழிற்பேட்டையில் தொழில் வளமும் குறைந்துவிட்டது.
அதேபோன்று, சிறுதொழில் வளர்ச்சியும் இல்லை. இதேபோன்று, சித்தன்னவாசல், திருமயம் கோட்டை, குடுமியான்மலை, குன்றாண்டார்கோவில், ஆவுடையார்கோவில், கொடும்பாளூர் உள்ளிட்ட பல்வேறு வரலாற்று சுற்றுலா தலங்களை மேம்படுத்தினால் வருமானம் அதிகரிக்கும். அத்துடன், நகர்ப்புறங்களில் சுகாதாரம் மோசமாகவே உள்ளது. புதிய மாவட்டத்துக்கான அடையாளமாக அமைக்கப்பட்ட நினைவுத் தூண் பராமரிப் பின்றி உள்ளது. எனவே, பொன்விழாவையொட்டி புதிய அறிவிப்புகளை வெளியிட வேண்டும் என்றார்.
இது குறித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் த.செங்கோடன் கூறியது: புதிய மாவட்டம் உருவாக்கப்பட்டு 50 ஆண்டுகள் நிறைவு பெற்றுள்ளது. பொன்விழாவையொட்டி மாவட்டத்தின் தொழில் வளர்ச்சிக்கு அதிக நிதி ஒதுக்கி, தொழில் நிறுவனங்கள் தொடங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். அதேபோன்று, நிர்வாக நலன் கருதி நகராட்சிகள், பேரூராட்சிகள் மற்றும் ஊராட்சிகளை மேம்படுத்துவதுடன், வட்டாட்சியர், ஒன்றியங்களின் எண்ணிக்கையையும் அதிகரிக்க வேண்டும். மேலும், அடிப்படை கட்டமைப்புகளை வலுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். புதுக்கோட்டை மாவட்ட நிர்வாகத்தின் கீழ் இருந்தாலும் வேறு மாவட்ட சட்டப்பேரவைத் தொகுதிகளுக்குள் வரக்கூடிய ஊராட்சிகளை ஒழுங்குபடுத்த வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT